வில்லன் உணவுகள் ஹீரோ உணவுகள் ஆன கதை!

மாற்றம் ஒன்றே மாறாதது. நாம் கெடுதல் என்று நினைத்து ஒதுக்கும் சில உணவுகள் ஆரோக்கியமானது என்று இன்றைய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆம்! அந்த உணவுகளை பற்றி தான் இப்போது நாம் பார்க்க போகின்றோம்.

வில்லன் உணவுகள் ஹீரோ உணவுகள் ஆன கதை!

உருளை கிழங்கு, பட்டர் , முட்டை போன்றவைகள் பொதுவாக அதிகம் உண்ண கூடாத உணவு பட்டியலில் பொதுவாக வைக்கப்படும். இவைகளை விரும்பி உண்ணுவோர் மற்றவரால் எப்போதும் விமர்சனங்களுக்கு ஆளாவர். ஆனால் புதிய ஆராய்ச்சியின் படி இந்த முடிவுகள் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. லண்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் மேலே கூறிய வில்லன்கள் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளனர்.

முட்டை:
பல காலங்களாக முட்டை இதயத்திற்கு ஏற்ற உணவு அல்ல என்று கூறப்பட்டு வந்தது. முட்டையில் 185மிகி  டயட் கொலஸ்ட்ரால் உள்ளது. இது இரத்த கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது என்று இத்தனை நாட்களாக நம்பப்பட்டு வந்தது.
20 வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் , மிதமான அளவு முட்டைகளை உணவில் சேர்ப்பதால் இரத்த கொலஸ்ட்ரால் அளவில் பெரிய மாறுபாடுகள் தோன்றுவதில்லை என்று கூறப்படுகிறது.
முட்டை என்பது புரதம், ஆரோக்கியமான கொழுப்பு, வைட்டமின் மற்றும் மினரல்கள் ஆகியவற்றின்  ஆதாரம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கொழுப்பு க்ரீம்கள் அல்லது பேஸ்ட்கள் :
ப்ரெட்டில் தடவப்படும் செயற்கை வெண்ணெய் மற்றும் பட்டர் ஆகியவை நல்லதா கெட்டதா என்று எப்போதும் ஒரு கேள்வி எழும்.செயற்கை வெண்ணெய், தாவர கொழுப்பால் தயாரிக்கப்படுவது. பல நாடுகளில் இது பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது பட்டரை விட விலை மலிவாக கிடைப்பதால் பலரும் இதனை பயன்படுத்த தொடங்கினர். செயற்கை வெண்ணெயில் பயன்படுத்தப்படும் ட்ரான்ஸ் கொழுப்பு மற்றும் ஹைட்ரஜனேற்றப்பட்ட தாவர எண்ணெய் இதய  நோய்க்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்ற ஒரு செய்தி பரவியது. அதனால் ட்ரான்ஸ் கொழுப்பு இல்லாத செயற்கை வெண்ணெய் சந்தைகளில் விற்கப்பட்டது. ஆனாலும் இதை பயன்படுத்துவதில் ஒரு குழப்பம் நிலவப்பட்டது. இதன் முடிவாக, ஹைட்ரஜனேற்றப்பட்ட தாவர எண்ணெய்யை மூல பொருளாக கொண்டிராத கொழுப்பு க்ரீம்களை பயன்படுத்தலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இவை இதய ஆரோக்கியத்தை பாதிப்பதில்லை என்றும் கூறுகிறார்கள்.

உருளை கிழங்கு:
ஆரோக்கியமற்ற காய்கறிகளில் உருளை கிழங்கும் ஒன்று என்ற பொதுவான கருத்து உள்ளது. இதன் அதிக சர்க்கரை குறியீடு தான் இதற்கு முக்கிய காரணம். ஆனால் உருளை கிழங்கில் கார்போஹைடிரேட் அதிகம் உள்ளது. வைட்டமின் சி மற்றும் பி போன்றவை அதிகமாக உள்ளது. ஆகவே இதனை உணவாக எடுத்துக் கொள்வதால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று கூறப்படுகிறது.

பால் பொருட்கள்:
பால் , பட்டர், யோகர்ட் , சீஸ் போன்ற பொருட்களை எடுத்துக் கொள்வதில் பல தரப்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. இவற்றில் புரதம் மற்றும் கால்சியம் அதிக அளவில் உள்ளது. சில உணவுகளில் நிறைவுற்ற  கொழுப்பு அதிகம் உள்ளது. நிறைவுற்ற கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்த்து மற்ற பால் பொருட்களை எடுத்துக் கொள்வதால் உங்கள் கலோரிகள் ஆரோக்கியமான  முறையில் அதிகரிக்கும். 

நட்ஸ் :
நட்ஸில் கொழுப்பும் கலோரிகளும் அதிகம் உள்ளது என்று கூறுவர். அதனால் எடை குறைப்பு செய்ய விரும்புவோர் இதனை குறைந்த அளவில் எடுத்துக் கொள்ள பரிந்துரைக்க படுவர். ஆனால் இந்த ஆய்வு முடிவுகள் கூறுவது, அதிக அளவில் நட்ஸ் எடுத்துக் கொள்வதால், மாரடைப்பு மற்றும் இதய நோயால் ஏற்படும் இறப்பு குறைக்கப்படுகிறது என்பதாகும்.
நட்ஸை பச்சையாக உண்பதால் புரதம், ஆரோக்கிய கொழுப்பு , நார்ச்சத்து மற்றும்  பல ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன.

பீனட் பட்டர் :
பீனட்  பட்டர் எனப்படும்  வேர்க்கடலை வெண்ணெய்  ஒரு ஆரோக்கிய உணவாகும். இதில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்  பி6 மற்றும் மெக்னீசியம் அதிகமாக உள்ளது. பதப்படுத்தப்பட்ட இறைச்சிக்கு மாற்றாக இதை பயன்படுத்தலாம் என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது. கலோரிகள் மிகவும் அதிகமாக இருப்பதால், மிதமான பயன்பாடு நன்மையை அதிகரிக்கும்.

குறிப்பிட்ட சில உணவை மட்டும் எடுத்துக் கொள்வது உடலை பலவீனமாக்கும். எல்லா விதமான உணவுகளையும் , அதன் மூல பொருட்களின் தன்மையை அறிந்து, அதற்கேற்ற விகிதத்தில் எடுத்துக் கொள்ளும்போது நன்மையை அளிக்கும்.