வைட்டமின் டி சத்தின் பலன்கள்

வைட்டமின் டி என்பது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும். கால்சியம் மற்றும் பாஸ்பரஸை உறிஞ்சி சரியான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குகிறது. வலுவான எலும்புகளுக்கு இந்த வைட்டமின் மிகவும் அவசியமாகும். வைட்டமின் டி இரண்டு பிரிவுகளை கொண்டது. டி 2 - இது உணவில் இருந்து கிடைக்க கூடியதாகும். டி 3 - இது சூரிய ஒளியில் இருந்து கிடைக்க கூடியதாகும். வைட்டமின் டி குறைபாடு தோன்றாமல் இருக்க வைட்டமின் டி சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.

வைட்டமின் டி சத்தின் பலன்கள்

வைட்டமின் டியின் பலன்கள்  :
   * நோயெதிர்ப்பு  சக்தியை அதிகரிக்கிறது.
   * எலும்புகளை வலிமையாக்குகிறது 
   * தசை வேலைப்பாடுகளில் உதவுகிறது 
   * இதயத்தை ஆரோக்கியத்துடன் வைக்கிறது.
   * மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது 
   * மல்டிபிள் செலெரோசிஸ் மற்றும் மனச்சோர்வை குறைக்கிறது.

எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது:
வைட்டமின் டி கால்சியம் மற்றும் பாஸ்போரோஸ் போன்றவற்றை உறிஞ்சி எலும்புகளை வலிமையாக்குகிறது. வைட்டமின் டி குறைபாடு எலும்பு இழப்பு அல்லது எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்பை உருவாக்கலாம். குழந்தைகளுக்கு ரிக்கெட் எனப்படும் எலும்பு  நோய் உண்டாகலாம். பெரியவர்களுக்கு ஆஸ்டியோமலேசியா எனப்படும் எலும்புமலிவு ஏற்படலாம். பலவீனம் மற்றும் எலும்பு வலி இதன் அறிகுறியாகும் .

மல்டிபிள் செலெரோசிஸ் :
இரத்தத்தில் வைட்டமின் டி சத்து அதிகமாக இருக்கும்போது இந்த நோயின் பாதிப்பு குறைகிறது. வைட்டமின் டிக்கும் செலெரோசிஸ்க்கும் உள்ள தொடர்பை பற்றி  விளக்கமாக தெரியவில்லை. சூரிய ஓளியை அதிகம் பெறுபவர்களுக்கு இந்த நோயின் தாக்கம் குறைகிறது. ஆகவே சூரிய ஒளி குறைந்த இடங்களில் இந்த நோய் பாதிப்பு அதிகமாக உள்ளதால் வைட்டமின் டி சத்து மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்வது நன்மை தரும்.

நீரிழிவு:
உடல் இன்சுலின் பயன்பாட்டை எடுக்காமல் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. வைட்டமின் டி இரத்த சர்க்கரை அளவில் மாற்றத்தை கொண்டு வர முடியுமா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். வைட்டமின் டி கால்சியம் சத்தை உறிஞ்சுவதால் , சர்க்கரை அளவை நிர்வகிக்கும் பணியை  கால்சியம் செய்கிறது. வைட்டமின்  டி குறைபாடு  உள்ளவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு என்று ஆய்வுகள் கூறுகின்றன. வைட்டமின் டி மாத்திரைகள் நீரிழுவு நோயை கட்டுப்படுத்துமா என்பதற்கான விளக்கத்தை அறிய அடுத்த கட்ட ஆராய்ச்சிகள் செய்ய பட வேண்டும்.

எடை குறைப்பு:
வைட்டமின் டி குறையும் போது உடல் பருமன் ஏற்படுகிறது. இளம் வயதில் வைட்டமின் டி குறைபாடு  இருந்தால் வயது அதிகரிக்கும்போது உடல் பருமன் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்த கருத்து பெண்களுக்கு மிகவும் ஏற்புடையதாக இருக்கிறது. வைட்டமின் டி மற்றும் கால்சியம் பசியை போக்குவனவாக உள்ளன.

மனச்சோர்வு:
வைட்டமின் டி உடலில் குறையும்போது மனச்சோர்வு ஏற்படும் வாய்ப்புகள் உண்டு . மனச்சோர்வுக்கு மருந்துகள் எடுத்து கொள்ளும் நோயாளிகள் வைட்டமின் டி சத்து மாத்திரைகளையும் சேர்த்து எடுத்துக் கொள்ளும்போது விரைவில் மனச்சோர்வு குறையும் அறிகுறிகள் தோன்றுகின்றன.

சூரிய ஒளி:
வைட்டமின் டி எளிதில் உடலில் சேர்வதற்கு சூரிய ஒளி  சருமத்தில் படுவது அவசியம். குறிப்பாக புறஊதா “B “ கதிர்கள் படுவதால் வைட்டமின் டி சத்து கிடைக்கிறது. அதிகமாக  வெயில் உங்கள் மீது படும்போது அதிகமான வைட்டமின் டி சத்து கிடைக்கிறது. ஒரு நாளில் 15 நிமிடங்கள் சூரிய ஒளி நம் மீது பட்டால் ,  நல்ல பலன் கிடைக்கும். 

வைட்டமின் டி சத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதன் குறைபாடு  ஏற்படாமல் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.