நுனி முடி உடைவதைத் தடுக்கும் வாழைப்பழம் 

கூந்தலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைக் கொடுக்கும் ஒரு பொக்கிஷமாக இருப்பது வாழைப்பழம். பொட்டாசியம், வைட்டமின் மற்றும் இயற்கை எண்ணெய்கள் போன்றவற்றின் ஆதாரமாக இருப்பது வாழைப்பழம். இதனால் உங்கள் கூந்தலின் ஈரப்பதம் தக்க வைக்கப்பட்டு, கூந்தலை எளிய முறையில் நிர்வகிக்க உதவுகிறது.

நுனி முடி உடைவதைத் தடுக்கும் வாழைப்பழம் 

நம் உடலின் ஒவ்வொரு பகுதியையும் தகுந்த முறையில் பராமரிப்பதன் மூலம் அவற்றின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்திட முடியும். இது நம்முடைய கூந்தலுக்கும் பொருந்தும். தலை முடி தானாக வளர்ந்து விட்டு போகட்டும் என்று நினைத்து அதற்கான பராமரிப்பு முயற்சிகளை மேற்கொள்ளாமல் விட்டு விட்டால் தலைமுடி தொடர்பான பிரச்சனைகள் தோன்றும். முடி உடைவது, வறண்டு போவது , நுனி முடி பிளவு ஏற்படுவது போன்ற பாதிப்புகள் தோன்றும். இதனால் முடி உதிர்வு, பொடுகு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு முடி வளர்ச்சியை பாதிக்கும். அதுவும் இன்றைக்கு சமூகத்தில் நிறைந்து இருக்கும் மாசு, தூசு , சூரிய கதிர் பாதிப்பு , ரசாயனம் போன்றவை ஆரோக்கியமான தலைமுடிக்கு சவால் விடும் வகையில் அமைகின்றன. இதற்கிடையில் கூந்தலை பராமரிப்பது என்பது ஒரு கடினமான செயலாகவே உள்ளது. இப்படி கூந்தல் பிரச்சனை ஏற்பட்டு நுனி முடி பிளவு ஏற்படும்போது முடியை வெட்டிக் கொள்வது என்பது எப்போதும் ஒரு தீர்வாக இருக்காது.

வழக்கமான கூந்தல் பராமரிப்பு முறையால் நுனி முடி பிளவை சரி செய்ய முடியாத நேரங்களில் சில இயற்கை மூலப்பொருட்கள் சிறந்த முறையில் தலைமுடியை புத்துணர்ச்சி அடையச் செய்து சேதங்களை சரி செய்ய உதவுகின்றன. இது போன்ற ஒரு மூலப்பொருள், உங்கள் கூந்தலை புதுப்பித்து பிளவுகளை சரி செய்ய உதவுகிறது., அதனைப் பற்றியது தான் இந்த பதிவு. ஆம், அந்த மூலப்பொருள் என்ன? அதுவே வாழைப்பழம்.

மேலும் கூடுதலாக, வாழைப்பழம், கூந்தலின் எலாஸ்டிக் தன்மையை மேம்படுத்தி, முடி உடைவது மற்றும் நுனி முடி பிளவு போன்ற சேதங்களைத் தடுக்கிறது. இது மட்டுமில்லாமல், வாழைப்பழம் உங்கள் கூந்தலின் பளபளப்பை அதிகரிக்கச் செய்து , புத்துணர்ச்சி அடையச் செய்து, கூந்தலை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் மாற உதவுகிறது.

இவ்வளவு நன்மைகள் கொண்ட வாழைப்பழத்தை  விட்டுவிட்டு இதர கூந்தல் பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவது நல்ல தீர்வு அல்ல. அதனால், உங்கள் கூந்தலில் உள்ள நுனி முடி பிளவு மற்றும் கூந்தல் பாதிப்புகளைப் போக்க வாழைப்பழம் எவ்வாறு உதவுகிறது என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்துக் கொள்ளுங்கள். இதனை ஒரு மாதம் பயன்படுத்தி கூந்தலில் உண்டாகும் மாற்றத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.

1. வாழைப்பழம் மற்றும் தேன்:
தேனில் இருக்கும் நோய் தீர்க்கும் தன்மைக் காரணமாக அது பல நன்மைகளைத் தருகிறது. மேலும் கூந்தலுக்கு ஈரப்பதத்தைத் தருகிறது. இது தவிர, தேனுக்கு இருக்கும் அன்டி ஆக்சிடென்ட் தன்மை காரணமாக, கூந்தலை சேதத்தில் இருந்து பாதுகாத்து கூந்தலை கண்டிஷன் செய்கிறது. ஆகவே வாழைப்பழத்துடன் இதன் கலவை கூந்தலை சேதத்தில் இருந்து மீட்டெடுக்க உதவுகிறது. 

மூலப்பொருட்கள் :
 . ஒரு வாழைப்பழம் நன்றாகப் பழுத்தது
 . இரண்டு ஸ்பூன் தேன் 

செய்முறை:
 1. வாழைப்பழத்தை நன்றாக மசித்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும். 
 2. இந்த வாழைப்பழத்தில் தேனைக் கலந்து, இரண்டையும் ஒன்றாகக் கலக்க வேண்டும். 
 3. இந்தக் கலவையை உங்கள் கூந்தலில் தடவவும். 
 4. இந்தக் கலவை உங்கள் கூந்தலில் அரை மணி நேரம் ஊறட்டும்.
 5. பிறகு தலையை அலசவும்.


2. வாழைப்பழம், முட்டை மற்றும் தேங்காய் எண்ணெய், கூந்தல் மாஸ்க் :
புரதத்தின் மிகச் சிறந்த ஆதாரமாக விளங்குவது முட்டை. இது கூந்தலின் சேதங்களை சரி செய்ய உதவுகிறது. தேங்காய் எண்ணெய், கூந்தலின் வேர்கால்களுக்குள் ஊடுருவி, கூந்தல் முடியை புத்துணர்ச்சி பெறச் செய்து , சேதங்களை சரி செய்ய உதவுகிறது.

தேவையான பொருட்கள்:
 . ஒரு கனிந்த வாழைப்பழம்
 . ஒரு முட்டை
 . ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
 . மூன்று ஸ்பூன் தேன்

செய்முறை:
 1. ஒரு வாழைப்பழத்தை மசித்து ஒரு கிண்ணத்தில் போடவும். 
 2. வேறொரு கிண்ணத்தில் ஒரு முட்டையை உடைத்து நன்றாகக் கலக்கிக் கொள்ளவும். 
 3. கலந்து வைத்த முட்டையில் மசித்து வைத்த வாழைப்பழம், தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். 
 4. எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, பின் உங்கள் கூந்தலில் தடவவும். 
 5. கூந்தலின் வேர்கால் முதல் நுனி முடி வரை இந்தக் கலவையைத் தடவி, ஒரு ஷவர் கேப் பயன்படுத்தி தலையை மூடிக் கொள்ளவும். 
 6. ஒரு மணி நேரம் அப்படியே விடவும்.
 7. பின்பு மென்மையான ஷாம்பூ கொண்டு தலையை அலசவும்.
 8. ஒரு வாரத்தில் ஒரு முறை இப்படி செய்வதால் நல்ல தீர்வு கிடைக்கும்.

3. வாழைப்பழம், யோகர்ட் மற்றும் எலுமிச்சை, கூந்தல் மாஸ்க் :
யோகர்ட்டில் ரிபோப்லேவின் மற்றும் வைட்டமின் பி 12 ஆகியவை இருப்பதால், உங்கள் கூந்தல் புத்துணர்ச்சி பெற்று முடி உதிர்வை எதிர்த்து போராடுகிறது. இது தவிர, யோகர்ட்டில் உள்ள கால்சியம் சத்து காரணமாக, உங்கள் கூந்தல் வலிமை அடைகிறது. எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சத்து கூந்தலை புத்துணர்ச்சி அடையச் செய்து செதங்களில் இருந்து பாதுகாக்கிறது.

தேவையான பொருட்கள்:
 . ஒரு கனிந்த வாழைப்பழம்
 . இரண்டு ஸ்பூன் யோகர்ட்
 . எலுமிச்சை சாறு சில துளிகள்
 . பன்னீர் சில துளிகள்

செய்முறை:
 1. ஒரு கனிந்த வாழைப்பழத்தை மசித்து ஒரு கிண்ணத்தில் போடவும்.
 2. இதனுடன் யோகர்ட்டைக் கலந்துக் கொள்ளவும்.
 3. இந்தக் கலவையில் எலுமிச்சை சாறு மற்றும் பன்னீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
 4. இந்த கலவையை உங்கள் கூந்தலில் தடவவும்.
 5. பின்பு அரை மணி நேரம் ஊற விடவும்
 6. அரை மணி நேரம் கழித்து, குளிர்ந்த நீரால் தலையை அலசவும்.

4. வாழைப்பழம் மற்றும் தேங்காய்ப் பால் :
இந்தக் கலவை, கூந்தலில் அற்புதம் புரிந்து நுனி முடி பிளவை தடுக்கிறது. இந்தக் கலவையில் உள்ள தேங்காய்ப் பால், கூந்தலை கண்டிஷன் செய்ய உதவுகிறது மற்றும் வறண்ட, சேதமடைந்த தலை முடியை சரி செய்ய உதவுகிறது.

தேவையான பொருட்கள் :
 . ஒரு கனிந்த வாழைப்பழம்
 . இரண்டு ஸ்பூன் தேங்காய்ப் பால்
 
செய்முறை:
 1. ஒரு வாழைப்பழத்தை மசித்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும்.
 2. இதனுடன் தேங்காய்ப் பால் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
 3. கலந்த பின் இந்த கலவையை உங்கள் கூந்தலில் தடவவும்.
 4. ஷவர் கேப் பயன்படுத்தி தலையை மூடிக் கொள்ளவும்.
 5. ஒரு மணி நேரம் அப்படியே ஊறட்டும்.
 6. ஒரு மணி நேரம் கழித்து, மிதமான ஷம்பூவால் தலையை அலசவும்.
 7. பிறகு நன்றாகக் கூந்தலைக் காய விடவும்.

5. வாழைப்பழம் மற்றும் பால்:
கூந்தலைப் புத்துணர்ச்சி அடையச் செய்யும் புரதம் பாலில் உள்ளது. ஆகவே கூந்தல் கண்டிஷன் செய்யப்பட்டு சேதங்கள் தடுக்கப்பட்டு, ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. இந்த கலவை கூந்தலின் நுனி பிளவைத் தடுக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்:
 . ஒரு கனிந்த வாழைப்பழம்
 . ஒரு கப் வெதுவெதுப்பான பால்

செய்முறை:
 1. ஒரு கனிந்த வாழைப்பழத்தை எடுத்து மசித்து ஒரு கிண்ணத்தில் போடவும். 
 2. இந்த வாழைப்பழத்துடன் ஒரு கப் வெதுவெதுப்பான பால் சேர்த்து இரண்டையும் ஒன்றாகக் கலக்கவும். 
 3. இந்த கலவையை உங்கள் கூந்தலில் தடவவும்.
 4. பின்பு 10 நிமிடங்கள் அப்படியே ஊற விடவும்.
 5. பத்து நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் தலை முடியை அலசவும்.


6. வாழைப்பழம் மற்றும் பப்பாளி :
வைட்டமின் சி சத்தின் சிறந்த ஆதாரமாக விளங்குவது பப்பாளிப் பழம். இது கூந்தல் முடியை சிறந்த முறையில் புதுப்பிக்க உதவுகிறது. இது தவிர, பப்பாளியில் இருக்கும் பபைன் என்னும் கூறு தலைமுடியை கண்டிஷன் செய்ய உதவுகிறது , இதனால் உங்கள் நுனி முடி பிளவு சரி செய்யப்படுகிறது.

தேவையான பொருட்கள்:
 . ஒரு கனிந்த வாழைப்பழம்
 . இரண்டு அல்லது மூன்று துண்டுகள் பப்பாளி 

செய்முறை:
 1. ஒரு வாழைப்பழத்தை மசித்து கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும். 
 2. மற்றொரு கிண்ணத்தில் பப்பாளியை மசித்து போட்டுக் கொள்ளவும். 
 3. பிறகு இரண்டு பழங்களையும் ஒன்றாகக் கலந்துக் கொள்ளவும்.
 4. இந்தக் கலவையை உங்கள் கூந்தலில் தடவவும்.
 5. இருபது நிமிடங்கள் அப்படியே ஊற விடவும்.
 6. பின்பு குளிர்ந்த நீரால் தலையை அலசவும்.

7. வாழைப்பழம் மற்றும் ஆலிவ் எண்ணெய்:
நீண்ட நெடுங்காலமாக கூந்தல் பராமரிப்பு வழிமுறையில் பின்பற்றப்பட்டு வரும் ஆலிவ் எண்ணெய் கூந்தலுக்கு ஈரப்பதம் அளித்து ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

தேவையான பொருட்கள்:
 . ஒரு கனிந்த வாழைப்பழம்
 . இரண்டு ஸ்பூன் எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெய்

செய்முறை:
 1. ஒரு கனிந்த வாழைப்பழத்தை எடுத்து மசித்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும். 
 2. இந்த கலவையில் ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
 3. இரண்டையும் ஒன்றாகக் கலந்துக் கொள்ளவும்.
 4. இந்த கலவையை உங்கள் கூந்தலில் தடவவும்.
 5. பின்பு ஷவர் கேப் போட்டு தலையை மூடிக் கொள்ளவும்.
 6. இருபது நிமிடங்கள் அப்படியே ஊற விடவும்.
 7. பின்பு மிதமான ஷாம்பூ கொண்டு தலையை அலசவும்.