நமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன?

தாளிப்பு என்பது உணவின் சுவையை அதிகரிக்க மட்டும் இல்லை,ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் தாளிப்பு உதவுகிறது.அதனைப் பற்றி இப்போது நாம் காணலாம்

நமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன?

தாளிப்பு என்றால் என்ன?
இந்திய சமையலில் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய்யை கடாயில் விட்டு, மிதமான சூடு வந்தவுடன், கடுகு, சீரகம், போன்றவற்றை சேர்த்து அதனை பொரிய விடுவார்கள். அவை நன்கு பொரிந்தவுடன், கறிவேப்பிலை, பிரிஞ்சி இலை, பச்சை அல்லது சிவப்பு மிளகாய் போன்றவற்றை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் அல்லது மிளகு தூள் சேர்ப்பார்கள். இவை அனைத்தும் நன்கு பொரிந்தவுடன் இந்த கலவையை, சுவை மிகுந்த பருப்பு , வறுவல், பொரியல், சாம்பார், சட்னி ஆகியவற்றில் சேர்ப்பார்கள். பொதுவாக ஒரு உணவில் தாளிப்பு சேர்ப்பது அதன் சுவையை அதிகரிப்பதாக நம்பப்படுகிறது. உண்மையில் இந்த தாளிப்பில் மிகப் பெரிய ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளன என்பது ஒரு ஆச்சர்யமான தகவல். .

ஆய்வுகளின் கண்டுபிடிப்புகள்:
தாளிப்பு பற்றிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மை என்னவென்றால், மஞ்சள், மிளகு போன்ற மசாலா பொருட்களை அரை மணி நேரத்திற்கு அதிகமாக சமைக்கும்போது அதில் உள்ள செயல்படும் சேர்மங்களான  குர்குமின் மற்றும் பைபரின் போன்றவைகள் அதன் தன்மையை இழக்கின்றன. ஆனால் அவற்றை தாளிப்பில் பயன்படுத்தும்போது, அதன் தன்மை தக்க வைக்கப்பட்டு குடலுக்கும் உடலுக்கும் நன்மையைச் செய்கின்றன.

கிருமி எதிர்ப்பு தன்மை:
இந்திய சமையலில் பூண்டு கூட தாளிப்பில் சேர்க்கப்படும் ஒரு உணவுப் பொருளாகும். பூண்டிற்கு கிருமி எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்பு உண்டு. இதனால் தொற்று மற்றும் கிருமிகள் மனித உடலைத் தாக்குவதில்லை. தாளிப்பில் பூண்டை பயன்படுத்தும்போது ஒரு பாதி அளவே சமைக்கப்படுவதால் அதன் மருத்துவ குணங்கள் தக்க வைக்கப்படுகின்றன. ஆனால் பூண்டு விழுதை சமையலில் சேர்க்கும்போது முழுவதுமாக சமைக்கப்படுவதால் அதிக வெப்பத்தின் காரணமாக அதன் மருத்துவ தன்மை மறைகிறது.

வயிற்று பிடிப்புக்கு எதிராக சிறந்த செயலாற்றுகிறது:
சாம்பார் அல்லது பருப்பு போன்றவற்றில் கொத்துமல்லி இலைகளை பொடியாக நறுக்கி போடாமல் தாளிப்பு நிறைவடையாது. இதனைச் செய்வதால் அந்த உணவின் சுவை மட்டும் அதிகரிப்பதில்லை, உங்கள் செரிமான மண்டலமும் மேம்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, இவற்றில் உடற்காப்பு மூலக்கூறுகள் உள்ளன, மேலும் அவை செரிமான தசைகளை மேலும் தளர்த்தும். வயிற்று பிடிப்பு அல்லது குடல் நோய்க்குறி மற்றும் இரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவுகிறது.

அசிடிட்டிக்கு சீரகம் மிகவும் நல்லது:
எல்லா தாளிப்பிலும் சீரகத்தை சேர்த்துக் கொள்ளலாம். இதனால் அதன் முழு நன்மைகளும் நமக்கு கிடக்கின்றது. செரிமான கோளாறுகளை சமன் செய்ய மட்டுமில்லாமல், அசிடிட்டி மற்றும் வயிற்றுபோக்கிற்கும் சிறந்த தீர்வைத் தருகின்றன.

மிளகாய் விதைகளின் நன்மைகள்:
சிவப்பு மற்றும் பச்சை மிளகாயின் விதைகளில் வைட்டமின் ஏ, பி, கே ஆகியவை அதிகமாக உள்ளன. இவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகின்றன.

மஞ்சளின் மகிமை:
மஞ்சள் அதன் மருத்துவ குணங்களுக்காக பெரிதும் போற்றப்படும் ஒரு உணவுப்பொருள் ஆகும். மஞ்சள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அது மட்டுமில்லாமல், மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்னும் கூறு, தொற்று பாதிப்பைப் போக்கவும், இருமல் மற்றும் தொண்டையில் உண்டாகும் பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவுகிறது. இது சருமத்திற்கும் மிகவும் ஏற்றது.

கடுகு தசை வலிக்கு மிகவும் நல்லது:
கடுகில் உள்ள அன்டி ஆக்சிடென்ட் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்க உதவுகிறது, இதன் அழற்சி எதிர்ப்பு தன்மை, கீல்வாதம்,  தசை வலி ஆகியவற்றிற்கு நன்மையைச் செய்கின்றது.

முடிவுரை:
ஆகவே தாளிப்பு என்பது உணவின் சுவையை அதிகரிக்க மட்டும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டீர்களா? உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் தாளிப்பு உதவுகிறது என்பதால் உடனடியாக உங்கள் உணவில் இதனை இணைத்துக் கொள்ளுங்கள். இதன் நன்மையைப் பெற்றிடுங்கள்.