தலை முடி வளர்ச்சிக்கு பசலைக் கீரை 

பசலைக் கீரை உங்களை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைக்க உதவுகிறது. இந்த இலைகளில் உயர் ஊட்டச்சத்துகளும் அதிகமான வைட்டமின்கள் மற்றும் அன்டி ஆக்சிடென்ட்களும் உள்ளன

தலை முடி வளர்ச்சிக்கு பசலைக் கீரை 

கீரை என்றாலே சத்தின் ஆதாரம் தான். எல்லா கீரைகளும் பல்வேறு ஊட்டச்சத்துகள் கொண்டவை. ஆகவே தினமும் நமது உணவில் கீரை சேர்த்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். குறிப்பாக சில வகைக் கீரைகள் ஊட்டச்சத்தின் சக்தி மிக்க ஆதாரமாக உள்ளன. அவற்றுள் முக்கியமானது பசலை கீரை. குழந்தைகள் முதல் பெரியவர் வரை, கர்பிணிகளும் தாராளமாக இந்த கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் எண்ணிலடங்கா நன்மைகள் கிடைப்பதாக அனைவரும் கூறுவார்கள். ஆனால் இவ்வளவு நன்மைகள் கொண்ட கீரையை தலை முடி வளர்சிக்காக பயன்படுத்தலாம் என்று  கேள்விப்பட்டதுண்டா? ஆச்சர்யமாக உள்ளதா, கீரையை அழகு குறிப்பிலும் இணைத்தாகி விட்டது. அதனைப் பற்றி தெரிந்து கொள்வதற்காகத்தான் இந்த தொகுப்பு. வாருங்கள் பார்க்கலாம்.

பசலைக் கீரை :

.இதில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துகள் , வைட்டமின்கள் ஏ, கே, சி, பி1 ,பி2 , பி6 ,ஈ மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் மங்கனீஸ் , ஜின்க், இரும்பு போன்ற மினரல்கள் போன்றவை .

பசலைக் கீரையை எந்த விதமாகவும் எடுத்துக் கொள்ளலாம் பச்சையாக, வேக வைத்து, சாலடில் சேர்த்து, ஜூஸ் அல்லது ஸ்மூதி செய்து என்று பல வழிகளில் பசலைக் கீரையை எடுத்துக் கொள்ளலாம். பசலைக் கீரை அழற்சியைப் போக்குகிறது. புற்று நோயும் தடுக்கப்படுகிறது.
 

இத்தகைய ஆரோக்கிய நன்மைகளுடன் இணைந்து தலை முடி வளர்ச்சிக்கும் மிகப் பெரிய அற்புதத்தை செய்கிறது இந்த பசலைக் கீரை. இது வைட்டமின் ஏ மற்றும் சி யின் ஆதாரமாக உள்ளது. இந்த வைட்டமின்கள் முடி வளர்ச்சியை ஊக்குவித்து தலை முடி ஆரோக்கியத்தைத் தருகிறது. நமது உடலுக்கு சிவப்பு அணுக்களை உருவாக்க ஃபோலேட் (வைட்டமின் பி) தேவைப்படுகிறது, இதனால் உடலுக்கும் முடியின் வேர்கால்களுக்கும் ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்களை கொண்டு செல்ல முடியும். ஃபோலேட் குறைபாடு குறைவான ஆக்சிஜன் சப்ளைக்கு வழிவகுக்கிறது, இது குறைந்த இரத்த சிவப்பணு எண்ணிக்கை மற்றும் மெதுவான முடி வளர்ச்சி அல்லது முடி வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. அதனால் தினசரி உணவில் பசலைக் கீரையை சேர்த்துக் கொள்வது நல்லது.


பசலைக் கீரையை நான்கு விதமாக பயன்படுத்துவதால் உங்கள் முடி வளர்ச்சி அதிகரிக்கிறது. அதனை பற்றி இப்போது பார்க்கலாம்.

பசலைக் கீரை முடி வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுகிறது?

1. பசலைக் கீரை மற்றும் ரோஸ்மேரி ஹேர் மாஸ்க்: 

ரோஸ்மேரி எண்ணெய் மற்றும் டீ முடி வளர்ச்சியில் அதிகம் உதவுகிறது. இந்த எண்ணெய் முடியின் வேர்க்கால்களை ஊக்குவித்து நீண்ட மற்றும் வலிமையான முடியைப் பெற உதவுகிறது. முன்கூட்டிய முடி இழப்பு மற்றும் இளநரையைப் தடுக்க இந்த எண்ணெய் பயன்படுகிறது. வறண்ட மற்றும் சீரற்ற தலைமுடியைக் கொண்டவர்கள் ரோஸ்மேரி எண்ணெய் பயன்படுத்தி நல்ல தீர்வைப் பெறலாம். பசலை கீரை மற்றும் ரோஸ்மேரி மாஸ்க் பயன்படுத்துவதால் தலை முடிக்கு புத்துணர்ச்சி கிடைகிறது, இரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்படுகிறது , முடி உதிர்தல் குறைகிறது, பொடுகு குறைகிறது. 

தேவையான பொருட்கள்:
நறுக்கிய பசலைக் கீரை 3 கப் 
பிரெஷ் ரோஸ்மேரி இலைகள் 2 ஸ்பூன்

செய்முறை:
பசலைக் கீரையை வெதுவெதுப்பான நீரில் 3 நிமிடங்கள் போடவும்.
அந்த கீரையை நீரில் இருந்து வடிகட்டி, விழுதாக அரைக்கவும்.
இந்த கலவையுடன் ரோஸ்மேரி இலைகளை கலக்கவும். 
இரண்டையும் நன்றாகக் கலந்து தலையில் தடவவும்.
அரை மணிநேரம் ஊற விடவும்.
பிறகு வெதுவெதுப்பான நீரில் தலையை அலசவும்.
ஒரு வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை இதனை பின்பற்றவும்.

பசலைக் கீரை மற்றும் தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க் :
ஒட்டுமொத்த தலைமுடி ஆரோக்கியத்திற்கும்  தேங்காய் எண்ணெய் துணை நிற்கிறது. தேங்காயில் காணப்படும் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் கிருமி எதிர்ப்பு பண்புகள், பொடுகைப் போக்கி, உச்சந்தலையை சுத்தமாக வைக்க உதவுகிறது. லாரிக் அமிலம், கப்ரிக் அமிலம் மற்றும் இதர கொழுப்பு அமிலங்கள் வேர்க்கால்களை வலிமையாக்கி முடி உடைவதை தடுக்கிறது.
தேங்காய் எண்ணெய் கொண்டு தலை முடிக்கு மசாஜ் செய்வதால் இரத்த ஓட்டம் அதிகரித்து ஆரோக்கியமான முடி வளர்ச்சி ஏற்படுகிறது. தேங்காய் எண்ணெயில் காணப்படும் லினோலிக் அமிலம், தலையை நீர்ச்சத்தோடு வைக்க உதவுவதோடு, அதன் எலாஸ்டிக் தன்மையை அதிகரரித்து முடி உடைவதை தடுக்கிறது.

தேவையான பொருட்கள்:
நறுக்கிய பசலைக் கீரை 1/2 கப்
தேங்காய் எண்ணெய் 1/2 கப்

செய்முறை:
பசலைக் கீரையை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
தேங்காய் எண்ணெய்யை லேசாக சூடாக்கி, இந்த விழுதுடன் சேர்க்கவும்.
இந்த பசலைக் கீரை எண்ணெய் கலவையைக் கொண்டு தலையில் மென்மையாக மசாஜ் செய்யவும்.
இரவு முழுவதும் அப்படியே விடவும்.
மறுநாள் காலை தலையை மென்மையான ஷாம்பூவால் அலசவும்.
இந்த எண்ணெய்யை வாரத்தில் மூன்று முறை பயன்படுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம்.


பசலைக் கீரை மற்றும் தேன் ஹேர் மாஸ்க் :
வறண்டு சுருளும் கூந்தல், உச்சந்தலையில் இருக்கும் பொடுகு போன்றவை முடி வளர்ச்சியை பாதிக்கும் காரணிகளாகும். இதனைப் போக்க பசலைக் கீரை மற்றும் தேன் மாஸ்க் பயன்படுகிறது. இதனால் கூந்தலின் வறட்சி மற்றும் பொடுகு காணமல் போகிறது. 

தேன் இயற்கையாக ஈரப்பதத்தைக் கொடுக்கும் ஒரு பொருள். இதனால் உங்கள் உச்சந்தலை ஈரப்பதத்தைப் பெற்று புத்துணர்ச்சி அடைகிறது. தேனில் உள்ள அன்டி ஆக்சிடென்ட் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்து வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. தேன் சருமத்திற்கு மென்மை தரும் பண்பைக் கொண்டுள்ளதால், உச்சந்தலை மற்றும் முடியின் வேர்க்கால்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

தேவையான பொருட்கள்:
தேன் 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் (அல்லது வேறு எண்ணெய் ) 1 ஸ்பூன்
நறுக்கிய பசலைக் கீரை 1/2 கப் 

செய்முறை:
நறுக்கிய பசலைக் கீரையை அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.
அந்த விழுதை ஒரு கிண்ணத்தில் போட்டு, அதில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணெய்யை சேர்க்கவும்.
இந்த கலவையை நன்றாகக் கலக்கவும்.
இந்த கலவையை உங்கள் தலையில் தடவி அரை மணி நேரம் ஊற விடவும்.
பிறகு மென்மையான ஷாம்பூவால் தலையை அலசவும்.
ஒரு வாரத்தில் இரண்டு முறை இதனை பயன்படுத்தவும்.

பசலைக் கீரை ஸ்மூதி :
இந்த மாஸ்க் எல்லாம் தயாரித்து தலையில் தடவும் அளவிற்கு உங்களுக்கு நேரம் இல்லையா? அப்படியானால் இந்த பானத்தை பருகுங்கள். பசலைக் கீரை ஜூஸ் சிலருக்கு செரிமானம் ஆவது கடினமாக இருக்கும். ஆனால் அதை ஸ்மூதியாக செய்யும்போது எளிதில் குடித்து விடலாம்.

தேவையான பொருட்கள்:
நறுக்கிய பசலைக் கீரை 1 கப்
வாழைப்பழம் 1 
பழுத்த சிறிய பப்பாளி 1 
பால் 1 கப்

செய்முறை:
நறுக்கிய பசலைக் கீரை , 1 வாழைப்பழம், 1 பப்பாளி ஆகியவற்றை பால் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 
இந்த கலவை அடர்த்தியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
காலை உணவிற்கு முன் இதனை தினமும் பருகவும்.
பப்பாளி மற்றும் வாழைப்பழம் உங்கள் சருமத்தை பளபளப்பாக மாற்றும்.
பசலைக் கீரை உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.

மேலே கூறிய எளிய வழிமுறைகளை பின்பற்றுவதால் தலை முடி பராமரிப்பு என்பது மிகவும் எளிய விஷயமாக மாறும். இதனால் முடி உதிர்தல், குறைந்து முடி வளர்ச்சி அதிகரிக்கும்.