மொபைல் போன் பயன்பாட்டு மோகத்திலிருந்து வெளியேறுவது எப்படி ?

இன்றைய நாட்களில் மொபைல் போன் இல்லாத ஆளே இல்லை என்று சொல்லுமளவிற்கு அனைவரின் கையிலும் மொபைல் போன் உள்ளது. வீட்டிற்கு ஒரு தொலைபேசி எண் இருந்த காலம் போய் வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு மொபைல் நம்பர் என்ற காலம் தற்போது உள்ளது.

மொபைல் போன் பயன்பாட்டு மோகத்திலிருந்து வெளியேறுவது எப்படி ?

மொபைல்போன் என்பது ஒரு தனி மனிதனின் அத்தியாவசிய தேவை என்றாகிவிட்டது. மொபைல் போனின் பயன்பாடு ஒருபக்கம் பெருகிக் கொன்டே வந்தாலும்  மறுபக்கம் இதன் அதீத பயன்பாடு உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை உண்டாக்குகிறது என்ற எச்சரிக்கை மணி ஒலித்துக் கொண்டுதான் உள்ளது.  

சிமோன் பொலிவர் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியில் , மொபைல் போனில் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக செலவழிக்கும் நபர்களுக்கு உடல் பருமன் அபாயம் அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது. இது மட்டுமல்லாமல், சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை மற்றும் முறையற்ற உணவுப் பழக்கம் காரணமாக அவை இதய நோய்க்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கின்றன. இந்த பிரச்சனைகளைத் தடுக்க வேண்டுமா ? ஆம் என்றால் முதல் கட்டமாக நீங்கள் மொபைல் போன் பயன்படுத்தும் நேரத்தைக் குறைக்க வேண்டும். இன்று இந்த பதிவில் நீங்கள் மொபைல் போன் மோகத்தில் இருந்து  விடுபட சில வழிகளை உங்களுக்கு வெளிப்படுத்தவிருக்கிறோம்.

உங்களை மதிப்பீடு செய்யுங்கள்:

எந்தவொரு போதையையும் சமாளிப்பதற்கான முதல் படி உங்களை மதிப்பீடு செய்வதாகும். மொபைல் போன் பயன்பாட்டில் இருந்து உங்களை விடுவிக்க ஒரு டைரி ஒன்றை உருவாக்க வேண்டும். அந்த டைரியில் தினமும் நீங்கள் மொபைல் போன் பயன்படுத்தும் கால அளவைக் குறித்துக் கொள்ள வேண்டும். அந்த நாளின் முடிவில் ஒரு நாள் முழுவதும் எவ்வளவு நேரம் போனில் செலவு செய்கிறீர்கள் என்பதை இந்த குறிப்பு உங்களுக்கு உணர்த்தும்.

குறிப்பு: நீங்கள். 4-5 மணி நேரத்திற்கு அதிகமாக மொபைல் போன் பயன்படுத்துவீர்கள் என்றால், இது உங்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகும். நீங்கள் மொபைல் போன் பயன்பாட்டைக் குறைப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை உங்களுக்கு உணர்த்தும் நேரம் இது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அறிவிப்புகள்:(Notification)

மொபைல் போனில் உங்கள் நேரம் அதிகம் செலவாவதைத் தடுக்க  வேலை நேரத்தில் அறிவிப்புகளை அணைத்து வைப்பது நல்லது. உங்கள் மொபைல் போனில் அறிவிப்புகள் செயல்பாட்டில் இருந்தால் உடனடியாக அது என்ன என்று பார்ப்பதற்கு நீங்கள் மொபைல்போனை எடுக்க நேரலாம். அறிவிப்பை பார்ப்பதோடு மட்டும்  நிற்காமல் மற்ற செயலிகளை திறந்து பார்க்கலாம் அல்லது சமூக ஊடக கணக்குகளில் உள்சென்று நேரம் செலவிடலாம் அல்லது மொபைல் விளையாட்டுகளில் மூழ்கிவிடலாம். அதனால் உங்கள் மொத்த நேரமும் வீணாகலாம். இதனைத் தடுக்க ஒரே வழி, அறிவிப்புகளை நிறுத்தி வைப்பது அல்லது ஒலியைக் குறைத்து வைப்பது. உங்கள் வேலை பளுவை சமாளிக்க சற்று நேரம் விளையாட நினைத்தால் மொபைல் கேம்ஸ் விளையாடாமல் குடும்பத்தினருடன் சேர்ந்து ஏதாவது விளையாடலாம். இதனால் குடும்பத்தில் ஈடுபாடு அதிகமாகும்.   

முக்கியமான செய்திகளை மட்டும் போனில் வைத்துக் கொள்ளுங்கள்:

சிலர் தங்கள் மொபைல் போனில் பல்வேறு செயலிகள் மற்றும் விளையாட்டுகளை டவுன்லோட் செய்து வைத்திருப்பார்கள். அவர்கள் பொழுதுபோக்கிற்கு இது உதவும் என்று அவர்கள் நினைப்பார்கள்.  ஆனால் மொபைல் மோகத்தை இது அதிகரிக்கும் என்பதே உண்மை. உங்கள் போனில் பலதரப்பட்ட செயலிகளும் விளையாட்டுகளும் இருக்கும்போது, அதனைத் திறந்து பார்க்கச் சொல்லி உங்கள் மூளை அறிவுறுத்திக்கொன்டே இருக்கும். இதனால் பலரும் தங்கள் முக்கிய வேலைகளை விட்டுவிட்டு  வீடியோக்கள் பார்க்கவும், விளையாடவும் தொடங்கிவிடுவர். இதனால் மொபைல் மோகம் மேலும் அதிகரிக்கும்.

மொபைல் இல்லாத நேரம்:

மொபைல் போனுக்கு அடிமையாவதைத் தடுக்க,  உங்கள் ஒவ்வொரு நாளிலும் சிறிது நேரம் மொபைல் போன்  பயன்படுத்தாமல் இருக்க முயற்சியுங்கள். ஒரு நாளில் 2-3 மணி நேரம் “மொபைல் இல்லா நேரம்” என்று பெயரிட்டுக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் உங்கள் மொபைல் போனை அணைத்துவிடுங்கள் அல்லது அதனைத் தொடாமல் ஒரு இடத்தில் வைத்துவிடுங்கள்.  இரவு உறங்கச் செல்லும் நேரம் அதனை சைலன்ட் மோடில் வைத்துக் கொள்ளவும். 

இப்படி செய்வதால் மொபைல் போன் மோகத்தை உங்களால் கட்டுப்படுத்த முடியும்.