உங்கள் இரத்த பரிசோதனை குறித்து உங்கள் மருத்துவர்கள் தெரிவிக்காத விஷயங்கள்

உங்களுக்கு எடுக்கப்பட்ட இரத்த பரிசோதனை அறிக்கை பற்றிய சரியான புரிதல் மூலம், உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறை குறித்த நல்ல முடிவுகளை உங்களால் எடுக்க முடியும்.

உங்கள் இரத்த பரிசோதனை குறித்து உங்கள் மருத்துவர்கள் தெரிவிக்காத விஷயங்கள்

வழக்கமான இரத்த பரிசோதனை செய்வதால் CBC என்று அழைக்கப்படும் முழுமையான இரத்த எண்கள் அதாவது சிவப்பு மற்றும் வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை, மற்றும் ஹீமோக்ளோபின் அளவு மற்றும் இதர இரத்த கூறுகள் பற்றி அளவிட முடியும். இந்த சோதனை மூலம், இரத்தசோகை, தொற்று பாதிப்பு, மற்றும் இரத்தத்தில் புற்று நோய் இருப்பதையும் அறிந்து கொள்ள முடியும். 

இரத்த சர்க்கரை அளவு, கால்சியம், எலெக்ட்ரோலைட் அளவு ஆகியவற்றின் மூலம் இதயம், சிறுநீரகம், மற்றும் கல்லீரல் செயல்பாடுகள் ஆகியவற்றைப் பரிசோதிக்கும் மற்றொரு பொதுவான இரத்த பரிசோதனை அடிப்படை வளர்சிதை மாற்ற குழு என்னும் basic metabolic panel ஆகும்.

இதய நோய் அபாயத்தை அறிந்து கொள்வதற்கு லிப்போ ப்ரோட்டின் குழு என்னும் lipoprotein panel பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு, அதாவது நல்ல கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால், ட்ரை க்ளிசரைடு ஆகியவற்றின் அளவு அறியப்படுகிறது.

உங்களுக்கு எடுக்கப்பட்ட இரத்த பரிசோதனை அறிக்கை பற்றிய சரியான புரிதல் மூலம், உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறை குறித்த நல்ல முடிவுகளை உங்களால் எடுக்க முடியும்.உங்கள் இரத்த பரிசோதனை அறிக்கையில் சில விஷயங்களை நீங்கள் கேட்டால் மட்டுமே மருத்துவர்கள் விளக்குவார்கள். அது போல் 10 குறிப்புகளை நாங்கள் உங்களுக்கு இந்த பதிவில் அறிய வைக்க நினைக்கிறோம். தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1. இரத்த பரிசோதனை அறிக்கையில் உள்ள நல்ல செய்தி என்ன?
பொதுவான இரத்த பரிசோதனை மூலம், இரத்த அணுக்கள் எண்ணிக்கை, இரத்தத்தின் ரசாயனம், கொலஸ்ட்ரால் விவரங்கள் ஆகியவை இயல்பான  அளவுகளில் உள்ளதா அல்லது வேறு பிரச்சனைகள் உள்ளதா  என்பது குறித்து அறிந்து கொள்ள உதவுகிறது. மருத்துவமனையில் இந்த அறிக்கை குறித்த சிறு விவரங்கள் மட்டுமே தரப்படலாம். அறிக்கையில் எல்லா அளவுகளும் வழக்கமான இயல்பான நிலையில்  இருந்தாலும், உங்கள் மருத்துவர், செவிலியர் ஆகியவருடன் அந்த அறிக்கை பற்றி கலந்தாலோசிக்க வேண்டியது நல்லது. இதே பரிசோதனையின் முந்தைய அறிக்கைக்கும் இந்த அறிக்கைக்குமான வேறுபாடு மற்றும் அதன் காரணம் குறித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

2. ஆணுக்கும் பெண்ணுக்கும் இந்த "இயல்பான அளவு" மாறுபடும் :
ஆணுக்கும் பெண்ணுக்குமான இரத்த பரிசோதனை முறை ஒரே விதமாக இருந்தாலும் அதன் அறிக்கைகளில் வேறுபாடு இருக்கும். உதாரணத்திற்கு, முழுமையான இரத்த அணுக்கள் எண்ணிக்கையில் சிவப்பு இரத்த அணுக்களின் இயல்பான அளவு எண்ணிக்கை ஒரு மைக்ரோ லிட்டருக்கு ஆணுக்கு 5மில்லியன் முதல் 6 மில்லியன் அளவாகவும், பெண்ணுக்கு 4மில்லியன் முதல் 5 மில்லியன் அளவாகவும் உள்ளது. 

3. வயது வேறுபாட்டினால் இயல்பான அளவில் மாற்றம் வரலாம் அல்லது வராமலும் இருக்கலாம்:
சில பரிசோதனையில், அதாவது ஹீமோக்ளோபின் பரிசோதனையில் இதன் இயல்பான அளவு வயது வேறுபாட்டினால் வேறுபடலாம். உதாரணத்திற்கு குழந்தைகளின் இயல்பான ஹீமோக்ளோபின் அளவு 11 - 13 கிராம்/டெசி லிட்டர். ஒரு ஆணின் இயல்பான  அளவு 14-17 கி / டெலி  , ஒரு பெண்ணின் இயல்பான அளவு 12-15கி / டெலி . LDL கொலஸ்ட்ரால் போன்ற பரிசோதனையில் 100மிகி / டெலி அளவு இயல்பான அளவாக கருதப்படுகிறது. இது எல்லா வயதிருக்கும் பொருந்தும்.  அதிகரித்த அளவு LDL கொலஸ்ட்ரால் உங்கள் அறிக்கையில் வெளிபட்டால் உங்கள் வயதிற்கு ஏற்ப இதய நோய் மற்றும் இதர ஆபத்து காரணிகளின் விளக்கங்களை உங்கள் மருத்துவர் உங்களுக்கு வெளிப்படுத்துவார். 45 வயதிற்கு மேற்பட்ட ஆண் மற்றும் 55 வயதிற்கு மேற்பட்ட பெண்ணாக இருந்தால் உங்களுக்கு இதய நோய் அல்லது நீரிழிவு பாதிப்பு இருந்தால், உங்கள் கொலஸ்ட்ரால் அளவு 100 மிகி/டெலி க்கு அதிகமாக இருந்தால் இந்த அளவைக் குறைக்க மருத்துவர் உங்களுக்கு அறிவுறுத்துவார்.

4. பரிசோதனையில் "பாசிடிவ்" என்று வந்தால் அது சந்தோஷமான செய்தியாக இல்லாமல் இருக்கலாம்:
சில இரத்த பரிசோதனைகள் உங்கள் இரத்த மாதிரிகளில் மூலக்கூறு குறிப்பான்களை தேடுவதன் மூலம் நோய்களைக் கண்டறிகின்றன   - அவற்றில் இரத்த சோகை சோதனை, எச்.ஐ.வி சோதனை, ஹெபடைடிஸ் சி சோதனை மற்றும்  மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய் ஆபத்துக்கான BRCA1 அல்லது BRCA2 மரபணு சோதனை ஆகியவை சிலவகை ஆகும். டி.என்.ஏ, ஆன்டிபாடி (பிறபொருளெதிரி), அல்லது புரோட்டீன் - போன்றவற்றில் பரிசோதனையின்போது நோய் குறிப்பான்கள் கண்டறியப்படும்போது முடிவுகள் பாசிடிவ் என்று கருதப்படுகின்றன. இந்த வகை வழக்குகளில் பாசிடிவ் என்று முடிவுகள் வரும்போது உங்களுக்கு அந்த நோய் பாதிப்பு  அல்லது கோளாறு உள்ளதாக அறியப்படுகிறது . கடந்த காலத்தில் தொற்று நோய் பாதிப்பிற்குள்ளாகி இருந்தாலும் இதே பாசிடிவ் முடிவுகள் வருவதற்கான வாய்புகள் உண்டு. 

5. நெகடிவ் முடிவுகள் நல்ல செய்தியாக இருக்கலாம்:
இரத்தப் பரிசோதனையில் முடிவு நெகடிவ் என்று வந்தால் வருந்த வேண்டிய கெட்ட செய்தி அல்ல. பரிசோதனையின்போது தேடப்பட்ட நோய் குறிப்பான்கள் உங்கள் உடலில் தென்படாமல் இருக்கும்பட்சத்தில் முடிவு நெகடிவ் என்று வெளிப்படும். ஆகவே பரிசோதனையின் முடிவு நெகடிவ் என்று வருவது உங்களுக்கு ஒரு நற்செய்தியாகவே இருக்கும். காரணம், உங்கள் உடலில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்பதை இந்த முடிவு சுட்டிக்காட்டும்.

6. தவறான பாசிடிவ் முடிவுகளுக்கு வாய்ப்பு உண்டு :

ஒரு குறிப்பிட்ட நோய்க்கண்டறிதலுக்காக செய்யப்படும் ஸ்க்ரீனிங் சோதனையின் முடிவுகள் வெளிப்பட்ட பின் அவற்றை உறுதி செய்து கொள்ள இரண்டாவது இன்னும் குறிப்பிட்ட சோதனை மூலம் மேலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதற்கு ஒரு உதாரணம் விரைவான எச்.ஐ.வி சோதனை, இது துல்லியமானதாக இருந்தாலும், அரிதாக சில நேரங்களில் ஒரு தவறான பாசிடிவ் முடிவுகளை வெளிபடுத்தலாம்.  (சோதனை முடிவு பாசிடிவ் என்றாலும் ,  அந்த நபருக்கு உண்மையில் நோய் இல்லாமல் இருக்கலாம்). சில குறிப்பிட்ட பரிசோதனையில் இரத்தத்தில் பிறபொருளெதிரிகள் என்னும் அன்டிபாடிகளை அளவிடும்போது அந்த நபருக்கு முடக்குவாதம் அல்லது மிலோமா போன்ற பாதிப்புகள் இருந்து அவைகளும் சில பிறபொருளெதிரிகளை வெளியிடுவதால் அவற்றின் இடையூறு காரணமாக பரிசோதனையின் முடிவுகள் தவறான பாசிடிவ் முடிவுகளை வழங்க நேரலாம்.

7. தவறான நெகடிவ் முடிவிற்கும் வாய்ப்பு உண்டு :
உண்மையில் ஒரு நபருக்கு உடலில் ஒரு குறிப்பிட்ட பாதிப்பு இருந்தாலும் பரிசோதனையின்போது அதற்கான தக்க ஆதாரத்தை வெளிப்படுத்த இயலாமல் போகலாம்.  உதாரணத்திற்கு, ஹெபடிடிஸ் சி பாதிப்பிற்கான பரிசோதனை செய்திருந்தால், அதன் முடிவுகள் நெகடிவ் என்று வந்திருக்கலாம். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு இந்த கிருமி உங்கள் உடலை தாக்கி இருக்கலாம். அதனை பரிசோதனையின்மூலம் உணராமல் இருக்கும் வாய்ப்பு உண்டு. இதே போல், Lyme நோய் பாதிக்கப்பட்ட சில வாரங்களில் நீங்கள் இரத்த பரிசோதனை செய்தால் அதன் முடிவுகள் நெகடிவ் என்று வெளிபடலாம், காரணாம் உங்கள் உடலில் இந்த நோய் அதுவரை எந்த ஒரு அன்டிபாடிகளையும் வெளிபடுத்தாமல் இருந்திருக்கலாம்.

8. பரிசோதனையின் முடிவுகள் ஒவ்வொரு பரிசோதனை மையத்திற்கும் வேறுபடும் :
ஒவ்வொரு பரிசோதனை மையமும் ஒவ்வொரு பரிசோதனைக்கும் ஒரு  இயல்பான வரம்பு அளவை நிர்ணயித்து வைத்திருக்கும். ஆகவே பரிசோதனை முடிவுகளை அந்தந்த மையத்தின் இயல்பான அளவுடன் ஒப்பிட்டு பார்க்கும்படி மைய ஆய்வாளர்கள் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பார்கள். அந்த ஆய்வகத்தில் முன்பு சோதனை செய்யப்பட்ட பல நபர்களிடமிருந்து எடுக்கப்பட்ட சோதனை முடிவுகள் அடிப்படையில் ஆய்வின் குறிப்பு வரம்பு உள்ளது. இந்த இயல்பான அளவும் மற்றொரு மையத்தின் இயல்பு அளவும் ஒன்றாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று FDA குறிப்பிடுகிறது. ஆகவே நீங்கள் முந்தைய பரிசோதனையை ஒரு ஆய்வகத்திலும் தற்போதைய பரிசோதனையை மற்றொரு ஆய்வகத்திலும் செய்திருந்து அதன் முடிவுகள் வெவ்வேறாக இருந்தால் அது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. 

9. அசாதாரண முடிவுகள் நோயின் காரணமாக இல்லாமல் இருக்கலாம்:
இயல்பு அளவிற்கு மீறிய சோதனை முடிவுகள் உண்மையில் உங்களுக்கு அந்த நோய் அல்லது கோளாறு இருப்பதை உறுதி செய்கிறது என்று நம்ப வேண்டிய அவசியமில்லை. வேறு சில காரணத்தினாலும் முடிவுகள் அசாதாரணமாக வெளிப்படலாம். உதாரணதிற்கு, சர்க்கரை நோய் இருப்பதை கண்டுபிடிக்க உணவுக்கு முன் ஒரு பரிசோதனை செய்யப்படும். அந்த நேரத்தில் நீங்கள் தவறாக உணவு அருந்திவிட்டு சோதனை செய்வதால் அல்லது முந்தைய இரவு மது அருந்தி இருப்பதால் அல்லது சில குறிப்பிட்ட மருத்துகள் எடுத்துக் கொண்டு சோதனை செய்வதால் அதன் முடிவு இயல்பான அளவை விட அதிகமாக வெளிப்படலாம். ஆனால் உண்மையில் இந்த பாதிப்பிற்கான சாத்தியக்கூறுகள் இல்லாமல் இருக்கலாம். ஆகவே எந்த ஒரு பரிசோதனைக்கு முன்னும் மருத்துவரிடம் பேசி அதற்கான முன் ஏற்பாடுகள் குறித்து அறிந்து கொண்டு சோதனைக்கு உட்படுவது சரியான முடிவுகளை வெளிப்படுத்தும். 

10. தவறுகள் நடக்கலாம்:
இரத்த மாதிரிகள் ஆய்வகத்தில் கலந்து விடும் வாய்ப்பு அரிது என்றாலும், அது நிகழும் வாய்ப்பும் உண்டு. பகுப்பாய்வு செய்யப்படுவதற்கு முன்பு உங்கள் இரத்த மாதிரி எவ்வாறு கையாளப்படுகிறது என்பதும் உங்கள் முடிவுகளை பாதிக்கலாம் . உதாரணத்திற்கு, உங்கள் இரத்த மாதிரி தவறான கன்டைனரில் சேகரிக்கப்படும்போது , தவறான முறையில் குலுக்கப்படும்போது , நீண்ட நாட்கள் சேமிக்கப்படும்போது, தவறான வெப்பநிலையில் வைக்கப்படும்போது, முடிவுகளும் தவறாக வெளிப்படலாம்.