அடிப்படை முதலுதவி குறிப்புகளை உங்கள் குழந்தைகளுக்கு கற்பியுங்கள்

நோய் பாதிக்கப்பட்ட ஒருவரை அல்லது காயம் அடைந்த ஒருவரை மருத்துவமனை அழைத்து செல்வதற்கு முன் அவரது உயிரை காப்பதற்கான செயலை செய்வது மிகவும் அவசியம். அந்த அவசர காலத்தில், அவரது உயிரை காப்பதற்கு , அந்த நிலைக்கு தகுந்த முதலுதவி செய்வது மிகவும் முக்கியம்.

அடிப்படை முதலுதவி குறிப்புகளை உங்கள் குழந்தைகளுக்கு கற்பியுங்கள்

முதலுதவிக்கான முக்கியத்துவத்தை தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர் புரிய வைப்பது அவசியம். அவர்கள் சிறுவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு முதலுதவி செய்வதற்கான சூழ்நிலை ஏற்படாது என்று திட்டவட்டமாக கூற முடியாது. பொதுவாக பிள்ளைகள் விளையாடும்போது அங்கும் இங்கும் கீழே விழுவது வழக்கமான செயலாகும். ஆகவே ஓவ்வொரு குழந்தையும் முதலுதவி குறித்த அடிப்படை அறிவை பெற்றிருப்பது மிகவும் அவசியமாகும். 

குறிப்பாக அவசர காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை விட என்ன செய்யக்கூடாது என்பது குறித்த தெளிவு வேண்டும். ஏனென்றால் தவறான சிகிச்சை, பாதிக்கப்பட்ட நபரின் உயிரில் எந்த அபாயத்தையும் ஏற்படுத்த முடியும். பின்வரும் அவசர கட்டங்களில் முதலுதவி வழங்கப்படலாம் - மூச்சுத்திணறல் (தண்ணீரில் மூழ்குதல், தூக்கிட்டுக் கொள்ளுதல் அல்லது தொண்டையில் சிக்கித் தவித்தல்), மாரடைப்பு, இரத்தப்போக்கு, விஷம், எரிச்சல், வெப்ப பக்கவாதம் (அதிக வெப்பத்தால் உடலில் நீர் இழப்பு ஏற்படுவது), மயக்கம், சுளுக்கு, எலும்பு முறிவுகள் மற்றும் விலங்கு கடி.

குழந்தைகள் கற்றுக்கொள்ளக்கூடிய முதலுதவிக்கான 5 முக்கிய குறிப்புகள்:

யாராவது ஒரு நபர் மூர்ச்சையாகி இருந்தால்:

ஒரு சிறுவனின் முன்பு யாரவது ஒரு நபர் மயங்கிய நிலையில் , எந்த ஒரு அசைவும் இல்லாமல் இருக்கிறார்,  பலமுறை அழைத்தும் , கைகால்களை அசைத்தும் அசைவின்றி இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். மயங்கிய நிலையில் இருப்பவரை தரையில் படுக்க வைக்க குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். அவர் மூச்சு விடுகிறாரா என்பதை சோதிக்கச் சொல்லுங்கள். நெஞ்சில் அழுத்தம் கொடுத்து வேகமாக தேய்க்கச் சொல்லுங்கள். ஒருவேளை அவர் மூச்சு விடுவதை குழந்தையால் அறிந்து கொள்ள முடியவில்லை என்றால் உடனே அவசர சிகிச்சை எண்ணுக்கு அழைக்க சொல்லிக்கொடுங்கள்.

மூச்சு விடுகிறார் ஆனால் எந்த ஒரு  அசைவும் இல்லை:

ஒருவர் மூச்சு விடுகிறாரா இல்லையா என்பதை அறிந்துகொள்ள உங்கள் குழந்தைக்கு சொல்லிக்கொடுங்கள். ஒருவேளை அந்த நபர் மூச்சு விடுகிறார் என்றால் அவரை சௌகரியமாக ஒரு இடத்தில் அமர வைத்து தலையை மட்டும் சாய்வாக வைத்து மற்ற பகுதிகளை மேல்நோக்கியபடி உட்கார வைக்கச் சொல்லுங்கள் இதனால் அந்த நபர் எளிதாக மூசசு விட முடியும் மற்றும் இரத்த ஓட்டம் எல்லா இடங்களுக்கும் சீராக  செல்ல உதவும்.

அதிகரித்த இரத்தப்போக்கு:

ஒரு காயத்திற்கு மருந்து தடவி கட்டுப்போடும் அடிப்படை வழியை குழந்தைக்கு சொல்லிக் கொடுங்கள். அதிகரித்த இரத்தப்போக்கு ஏற்பட்டால் இரத்தம் வழியும் இடத்தில் இறுக்கமாக துணியை கட்ட வேண்டும். மேலும் காயம் அடைந்தவர் ஏற்கனவே அதிக பீதியுடன் இருக்க நேரலாம் என்பதால் அந்த சூழலை எந்த அளவிற்கு கூலாக அணுகலாம் என்பதனையும் குழந்தைக்கு சொல்லிக்கொடுங்கள். காயம் பட்ட இடத்தில் ஐஸ் பேக் அல்லது ஐஸ் பாட்டில் வைப்பதால் இரத்தப்போக்கு நிறுத்தப்படும்.

தலையில் காயம் ஏற்பட்டால்:

தலையில் ஏற்பட்ட காயம் பெருத்த அபாயத்தையும் சில நேரங்களில் உண்டாக்கலாம். தலையில் காயம் ஏற்பட்டால், உடனே காயம் அடைந்த இடத்தில் குளிர்ச்சையான பொருளை வைக்கவும். குளிர்ச்சியாக இருக்கும் இலையுடைய காய்கறிகளை ஒரு டவலில் சுற்றி காயம் உள்ள இடத்தில் வைத்து அழுத்த உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள். காயம் பட்ட பகுதி வீங்காமல் இருக்க இது ஒரு சிறந்த வழியாகும். மேலும் அந்த நேரத்தில் சத்தமின்றி அமைதியாக  இருக்க வேண்டும் என்பதை பிள்ளைகளுக்கு கற்றுத் தாருங்கள்.

மூச்சுத்திணறல்:

மார்பு பகுதி அல்லது கழுத்து பகுதியில் ஏற்படும் இறுக்கம் காரணமாக சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம். இந்த சூழ்நிலையில் மூச்சு விடுவது அல்லது இருமுவது கடினமாக இருக்கலாம். இந்த சூழ்நிலையில் நோயாளியின் முதுகு பகுதியை தடவி கொடுத்து மென்மையாக தட்டவும். இதனால் அவர் மூச்சு விடுவதில் இருக்கும் சிரமம் குறையலாம்.