நகங்கள் உடையாமல் தடுக்க சில வழிகள் 

அழகு பராமரிப்பில் நகங்களுக்கு ஒரு பங்கு இருக்கத்தான் செய்கிறது. பள்ளியில் படிக்கும்வரை நகங்களை ஓட்ட வெட்டி விடும் பிள்ளைகள் கல்லூரிக்குள் நுழைந்தவுடன் நகம் வளர்க்க தொடங்குகின்றனர்.

நகங்கள் உடையாமல் தடுக்க சில வழிகள் 

பெண்கள் நகத்தை அழகாக வளர்த்து அதனை ஷேப் செய்து நகப்பூச்சு போடுவதும் ஒருவித அழகுதான். நகங்கள் பல்வேறு காரணங்களால் வலிமை இழந்து உடைய தொடங்கும். இதனால் உங்கள் விரல்களின் அழகு பாதிக்க படுகிறது. இவற்றிற்கு சரியான ஊட்டச்சத்து கொடுக்கும்போது இந்த பாதிப்பு களையப்பட்டு நகங்கள் வலிமையாக வளர தொடங்குகிறது. 

இயற்கையான மூலப்பொருட்கள் கொண்டு நகத்தின் ஊட்டச்சத்துகளை அதிகரிக்கச்செய்ய சில வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை முயற்சித்து உடையாத நக அழகை பெறுவோம்.

கடல் உப்பு மற்றும் கோதுமை முளை :
கடல் உப்பு மற்றும் கோதுமை முளை மாஸ்க், உங்கள் நகங்களுக்கு கொழுப்பு அமிலம் மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட்டை அதிகரித்து பலவீனத்தை போக்குகிறது. இரண்டு மூல பொருட்களுமே இறந்த அணுக்களை களைந்து ஆக்சிஜெனேற்றத்தை ஊக்குவித்து , வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.

1 ஸ்பூன் கடல் உப்பு மற்றும் 2 ஸ்பூன் கோதுமை முளை எண்ணெய்யை எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும். அந்த பேஸ்டை நகத்திலும் நகத்தின் மேல் தோலிலும் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து நகங்களை கழுவவும். ஒரு வாரத்தில் 3 முறை இதனை செய்யலாம்.

குதிரை வாலி டீ :
குதிரை வாலியில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள்  நகங்களை உடையாமல் பாதுகாக்கும். நகத்திற்கு வலிமையை கொடுக்கும். வறட்சி மட்டும் தொற்றுக்களை தவிர்க்கும் . 

1 கப் தண்ணீரை கொதிக்க வைத்து 3 டேபிள் ஸ்பூன் குதிரை வாலியை இதில் போடவும். நன்றாக ஆற விடவும். ஆறிய  பின் அந்த நீரில் உங்கள் நகங்களை நனைத்தபடி 10 நிமிடங்கள் வைக்கவும். தினமும் இந்த முயற்சியை 2 வாரங்களுக்கு தொடரவும்.

விளக்கெண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ :
நகங்களை பாதுகாத்து நீர்ச்சத்தோடு வைப்பதில் விளக்கெண்ணெய் சிறப்பாக செயல்படுகிறது. இதில் கொழுப்பு அமிலங்களும் தரமான புரத சத்தும் உள்ளது. நகங்களின் வடிவத்தை வலிமையாக்க உதவுகின்றது . நகம் உடைவதை குறைத்து வளர்ச்சியை அதிகரிக்கிறது. வைட்டமின் ஈ சத்து, இரசாயன பொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் நச்சுக்களை நீக்குகிறது.

4 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் 1 ஸ்பூன் வைட்டமின் ஈ எண்ணெய்  ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஒரு மூடி  போட்ட பாத்திரத்தில் ஊற்றி கொள்ளவும். நகப்பூச்சு பிரஷ் எடுத்து  அந்த திரவத்தில் முக்கி நகத்தில் தடவவும். இந்த எண்ணெய்யை நகம் உறிஞ்சி கொள்ளும். கழுவ வேண்டாம். இதனை தினமும் செய்து வரலாம்.

பூண்டு மற்றும் கற்றாழை:
பூண்டு மற்றும் கற்றாழை கொண்டு தயாரிக்கப்படும் இந்த க்ரீம் ஆன்டிஆக்ஸிடென்ட் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்தது. இதனால் நகம் உடைவது தடுக்கப்படுகிறது. பூஞ்சை மற்றும் கிருமிகள் நகத்தை தாக்குவதை இவைகள் குறைக்கின்றன.

1 பூண்டு பல் மற்றும் 3 ஸ்பூன் கற்றாழை ஜெல் எடுத்துக் கொள்ளவும். பூண்டை மசித்து இரண்டையும் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும். இந்த பேஸ்டை உங்கள் நகம் மற்றும் அதனை சுற்றியுள்ள தோலில் தடவவும். 30 நிமிடங்கள் கழித்து நகத்தை கழுவவும். வாரத்திற்கு 3 முறை இதனை செய்து வரலாம்.

திராட்சை விதை எண்ணெய் மற்றும் பாதாம்:
திராட்சை விதையில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட் மற்றும் மினரல்கள் அழுக்கு மற்றும் இரசாயனத்தால் நகங்களில் சேதம் ஏற்படுவதை தடுத்து நிறுத்துகின்றன. பாதாம் எண்ணெய் ஈரப்பதம் மற்றும் வலிமையை கொடுக்கின்றது. 

2 ஸ்பூன் திராட்சை விதை எண்ணெய் மற்றும் 1 ஸ்பூன் பாதாம் எண்ணெய்யை சேர்த்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஊற்றி  நன்றாக கலந்து கொள்ளவும். பஞ்சை இந்த எண்ணெய்யில் நனைத்து உங்கள் நகங்களில் தடவவும். இந்த சிகிச்சையை தினமும் செய்து வரவும்.

உங்கள் நகங்களை பராமரிப்பதில் மேற்கூறிய முறைகளை முயற்சித்து நல்ல பலனை பெறலாம்.