பூண்டின் பக்க விளைவுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சிலருக்கு பூண்டு வாசனை சுத்தமாக பிடிக்காது. ஆனால் சிலரோ பூண்டு வாசனை இல்லாமல் எந்த ஒரு உணவையும் சுவைக்க மாட்டார்கள். அந்த மாதிரி பூண்டு பிரியர்களுக்கான பதிவு தான் இது

பூண்டின் பக்க விளைவுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

இந்திய சமையலறையின் முக்கியமான உணவுப் பொருட்களுள் ஒன்று பூண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பூண்டை மக்கள் உணவில் சேர்த்து வருகின்றனர். பூண்டு ஒரு சமையல் பொருள் மட்டுமல்ல, இது ஒரு சிறந்த மருந்து. இதன் மருத்துவ குணத்தால் பல நோய்களைத் தடுக்கிறது. ஆனால் உலகில் எல்லாவற்றிலும் நல்லது கெட்டது என்று இரண்டு பக்கங்கள் உண்டு. அதே போல் தான் பூண்டும் . இந்த பதிவு அதிக அளவு பூண்டு உட்கொள்வதால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி உங்களுக்கு கூறவிருக்கிறது. வாருங்கள் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

துர்நாற்றம் :
ஒருவரின் உடலை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்காமல் இருப்பதால் அவரிடம் ஒரு வித துர்நாற்றம் வீசும். ஆனால் இது சுகாதார சீர்கேடால் மட்டும் அல்ல, பூண்டும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். உடல் மற்றும் வாயில் துர்நாற்றம் வீசுவதற்கான பல்வேறு ரசாயனங்களை பூண்டு வழங்குகிறது. ஆகவே உங்களுக்கு பிடித்தமான பூண்டு வாசனையுடன் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது தவறாமல் வாயை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும் ஸ்ப்ரே பயன்படுத்த மறக்க வேண்டாம். இதனால் மற்றவர் எதிரில் தர்மசங்கடம் தவிர்க்கப்படும்.

சரும தடிப்புகள்:
அதிகமாக பூண்டு சாப்பிடுவதால் சருமத்தில் அரிப்பு மற்றும் தடிப்பு உண்டாகலாம். பூண்டில் உள்ள அல்லிநேஸ் என்னும் என்சைம், பொதுவாக சரும தடிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும். ஆகவே பூண்டு உறிக்கும்போது அல்லது வெட்டும்போது, கையில் க்ளௌஸ் அணிந்து கொண்டு செய்யலாம். இல்லையேல் இந்த என்சைம் உங்கள் சருமத்தில் அரிப்பு மற்றும் தடிப்பை உண்டாக்கலாம்.

தலைவலி:
பச்சையாக பூண்டை எடுத்துக் கொள்வதால் தலைவலி உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. சாப்பிட்டவுடன் தலைவலி ஏற்படாது. ஆனால் அந்த செயல்பாட்டை ஊக்குவிக்கலாம். பச்சை பூண்டை சாப்பிடுவதால், முக்கோண நரம்பு தூண்டப்பட்டு ந்யுரோபெப்டிடு வெளியாவதை ஊக்குவிக்கிறது. இது மூளையை மூடியிருக்கும் தோல் பகுதியை அடைந்து தலைவலியை உண்டாக்குகிறது.

பிறப்புறுப்பு தொற்றை அதிகரிக்கலாம்:
பிறப்புறுப்பு ஆரோக்கியத்தை பேணிக் காப்பது ஒவ்வொரு பெண்ணின் முக்கிய கடமையாகும். பிறப்புறுப்பு தொற்று பாதிப்பால் நீங்கள் அவதிப்படும் நேரம் பூண்டை தவிர்ப்பது நல்லது. பூண்டு பயன்பாடு,  பிறப்புறுப்பில் உள்ள மெல்லிய திசுக்களை எரிச்சலடையச் செய்து, பூஞ்சை தொற்று பாதிப்பை அதிகரிக்க வைக்கும்.
 
வாந்தி மற்றும் நெஞ்செரிச்சலை உண்டாக்கும் :
அதிக அளவு பூண்டு பற்களை சாப்பிடுவதால் வாந்தி மற்றும் நெஞ்செரிச்சல் பாதிப்பு ஏற்படலாம் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே இதனை தடுக்க பூண்டை அதிக அளவு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருளாக இருந்தாலும், அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால் பல ஆரோக்கிய சீர்கேட்டை தருவதால் அதிக அளவு பூண்டு சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளலாம்.