ஆரோக்கிய உணவு - பொங்கல்

பொங்கலை ஆரோக்கியமான விருந்தாக மாற்ற உதவிக்குறிப்புகள்

ஆரோக்கிய உணவு - பொங்கல்

பொங்கல் என்பது அரிசி மற்றும் பச்சைப்பருப்பின் கலவையாகும். இந்த உணவு கார்போ - புரதம்  சமநிலையை உறுதி செய்கிறது. பொங்கல் எளிதில் ஜீரணமாகக்கூடிய ஒரு உணவாகும். இதில் கொழுப்பு மற்றும் கலோரி குறைவாக உள்ளது. வீட்டில் நெய் குறைவாக சேர்த்து தயாரிக்கப்படும்  பொங்கல் ஒரு சிறந்த  காலை உணவாகும். குறிப்பாக ஆரோக்கியமான உணவும் கூட. பொங்கலை ஆரோக்கியமான ஒரு விருந்தாக மாற்ற சில குறிப்புகள் இதோ உங்களுக்காக..

வெள்ளை அரிசிக்கு மாற்றாக பழுப்பு அரிசி பயன்படுத்தலாம்:

பொதுவாக வெண்பொங்கல் தயாரிக்க வெள்ளை அரிசி மற்றும் பச்சைப் பருப்பு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பழுப்பு அரிசி போன்ற மாற்று மூலப்பொருட்கள் கொண்டு ஆரோக்கியமான உணவு தயாரிப்பது தற்போது பிரபலமாகி வருகிறது. பழுப்பு அரிசி மற்றும் பச்சைப் பருப்பு சேர்த்து தயாரிக்கப்படும் பொங்கல் சுவை மற்றும் ஆரோக்கியம் கொண்ட ஒரு சிறப்பு உணவாகும். மேலும் தீட்டிய வெள்ளை அரிசியைக் காட்டிலும் சோடியம் அளவு குறைவாகக் கொண்டிருக்கும் பழுப்பு அரிசி. எனவே உப்பின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களுக்கு இது மிகுந்த நன்மையைத் தரும்.

ஆரோக்கிய நன்மைகளுக்கு சிறுதானியம் பயன்படுத்தலாம்:

பல நூற்றாண்டுகளாக  நமது  பாரம்பரியத்தில் சமையலில்  தினை அரிசி பயன்படுத்தும்  முறை இருந்து வருகிறது . குறைவான  கார்போஹைட்ரேட் கொண்ட தினை அரிசியில் க்ளைகமிக் குறியீடும்  குறைவாகவே உள்ளது . க்ளைகமிக் குறியீடு என்பது உணவுக்குப் பிறகு உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை அளவிட பயன்படும் ஒரு காரணி. தினைகளில் நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, ஆனால் ஆரோக்கியமான விளைபொருட்களை கூட அதிகமாக சாப்பிடக் கூடாது, எனவே சாப்பிடக் கூடிய அளவை கவனத்தில் கொள்வதால் மற்ற விளைவுகள் தடுக்கப்படலாம்.

கலப்படமற்ற வெல்லம் பயன்படுத்துங்கள்:

இனிப்புபொங்கல் தயாரிப்பதில் இது ஒரு சிறந்த குறிப்பாகும். சர்க்கரைப் பொங்கல் செய்வதற்கு கல்கண்டு அல்லது வெல்லம் பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரைப் பொங்கல் தயாரிக்கும்போது சுத்தமான வெல்லம் பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளுங்கள். வெல்லத்தில் ஒரு துண்டு எடுத்து சுவைத்து பாருங்கள்; அது இயற்கையானது என்றால் அது உப்பு அல்லது கசப்பாக இருக்கக்கூடாது. வெல்லத்தின் சுத்தத்தில் அதன் நிறம் கூட பங்குவகிக்கிறது. வெல்லம் அடர் பழுப்பு நிறத்தில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.  இது நல்ல தரம் வாய்ந்ததாக இருந்தால், அது ஒரு சிறந்த செரிமானப் பொருளாகவும், இரும்பு மற்றும் வைட்டமின் சி நிறைந்த பொருளாகவும் இருக்கலாம்.

கீரை பொங்கல்:

இந்த பருவத்தில் கீரைகள் அதிகமாக அறுவடை செய்யப்படுகின்றன. மற்றும் சிறு கீரை , தண்டுக்கீரை ஆகியவற்றைச் சேர்ப்பது சுவையான பொங்கலை அதிக சத்தானதாகவும் நிரப்பக்கூடியதாகவும் மாற்றும். இந்த கீரைகள், பல தாவர ஊட்டச்சத்துகள், ஆன்டிஆக்சிடெண்ட், மினரல் போன்றவற்றைக் கொண்டுள்ளன. மேலும் 100கிராம் அளவிற்கு 23 கலோரிகள் மட்டுமே கொண்டுள்ளன.