தலை முடி வளர்ச்சியும் ஊட்டச்சத்துள்ள உணவும் 

தலை முடி வளர்ச்சிக்கு வெளிப்புற பராமரிப்பு எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு உடலுக்குள் நாம் செலுத்தும் அக்கறையும் முக்கியம்.

தலை முடி வளர்ச்சியும் ஊட்டச்சத்துள்ள உணவும் 

தலைக்கு தினமும் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வதும், தலை முடி வளச்சிக்காக தலைக்கு பலவிதமான இயற்கை வைத்தியங்களை செய்வதால் மட்டும் முடி வளர்ச்சி அடையாது. தலை முடி வளர்வதற்கான ஊட்டச்சத்துகளை கொண்ட உணவுகளை நாம் உண்ணும்போது தான் சத்துக்கள் முழுமை அடைந்து தலை முடி ஆரோக்கியமாக  வளரும்.

இந்த பதிவில் முடி கொட்டாமல், ஆரோக்கியத்துடன் வளர உதவிடும் சில உணவுகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை  படித்து தெரிந்து கொண்டு , பின்பற்றும்போது  ஆரோக்கியமான முடி வளர்ச்சியை பெறுவீர்கள்.

கீரை:
* தாவர உணவுகளில் முடி வளர்ச்சியை அதிகரிக்கும் தன்மை கீரைக்கு உண்டு. இதில் இரும்பு சத்து, வைட்டமின் ஏ ,வைட்டமின் சி மற்றும் புரத சத்தும் அதிகமாக உள்ளது. முடி கொட்டுவதற்கு முக்கிய காரணம் இரும்பு சத்து குறைபாடுதான் . கீரையில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதுடன், சீபம் என்ற ஒரு கூறு உள்ளது. இது ஒரு இயற்கை கண்டிஷனராக செயல்பட்டு முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் , மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவை கீரையில் உள்ளதால் ஆரோக்கியமான தலைமுடியை இது தருகிறது.

முட்டை மற்றும் பால் பொருட்கள்:
* முடி அடர்த்தியாக வளர்வதற்கு முட்டை மற்றும் பால் பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். பால், தயிர், முட்டையில் புரதம், வைட்டமின் பி 12 , ஜின்க் , ஒமேகா 6 கொழுப்பு அமிலம் போன்றவை உள்ளன. முடி கொட்டுவதை எதிர்க்கும் பயோட்டின்  (வைட்டமின் பி 7 ) பால் பொருட்களில் அதிகமாக உள்ளது.

அக்ரூட்  :
* அக்ரூட் பருப்பில் பயோட்டின் ,வைட்டமின் பி , வைட்டமின் ஈ மற்றும் ஏராளமான புரத சத்து,மெக்னீசியம், ஆகியவை உள்ளன. உங்கள் தினசரி உணவு அட்டவணையில் சிறிது அக்ரூட் பருப்பை சேர்த்து கொள்வதன் மூலம், முடி கொட்டுவதை கட்டாயம் குறைக்கலாம். உங்கள் உச்சந்தலையை உறுதியாக்கி , வேர்க்கால்களுக்கு  பலத்தை கொடுக்கும்.

கொய்யா :
* வைட்டமின் சி , தலை முடி வலுவிழந்து உடையாமல் தடுக்கும். கொய்யா பழத்தில் ஆரஞ்சு பழத்தை விட வைட்டமின் சி அதிகமாக உள்ளது. கொய்யாவின் இலைகளிலும் வைட்டமின் சி மற்றும் பி அதிகமாக இருக்கிறது. இந்த ஊட்டச்சத்துகள் முடி வளர்ச்சிக்கு உதவும் கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது .

பயறு வகைகள் :
* பயறு வகைகளில் புரதம், பயோட்டின் , இரும்பு, ஜின்க் போன்ற சத்துகள் அதிகமாக உள்ளன. இவை முடிகளுக்கு ஊட்டச்சத்தை கொடுக்கின்றன. குறிப்பாக இவற்றில் போலிக் அமிலம் அதிகமாக உள்ளது. இந்த போலிக் அமிலம், சிவப்பு இரத்த அணுக்களின் ஆரோக்கியத்தை மீட்டு  தர உதவும். . இந்த அணுக்கள் தான் சருமத்திற்கும் தலைக்கும் ஆக்சிஜெனைக்கொண்டு செல்ல உதவுகின்றன. ஆகையால் முடி உடையாமல் வலிமையடைகின்றன.

பார்லி :
* முடியின் அடர்த்தி குறைவிற்கு பார்லி ஒரு தீர்வாக கருதப்படுகிறது. பார்லியில் இரும்பு மற்றும் தாமிரம் அதிகமாக உள்ளது. இவை சிவப்பு இரத்த அணுக்கள் உற்பத்திக்கு உதவுகின்றன மற்றும் முடியின் வேர்க்கால்களை வலிமை ஆக்குகின்றன.

ஆளி விதைகள்:
* ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாக இருப்பது ஆளி விதைகளில்தான். இவை முடியின் வேர்கால்களுக்கும் செல் சவ்வுகளுக்கும் நல்ல ஊட்டச்சத்தை கொடுக்கின்றன. முடிக்கு சுருங்கி விரியும் தன்மையை தருவதால் முடி உடைவது தடுக்கப்படுகிறது.  ஆகவே ஆளி விதைகள் முடி வளர்ச்சிக்கு அத்தியாவசியமான ஒரு பொருள்.

சிக்கன் :
* முடிகள் புரதத்தால் ஆனவை. ஆகையால் இயற்கையாக புரதம் அதிகம் இருக்கும் உணவுகளை சேர்த்துக்கொள்வது முடி வளர்ச்சியை அதிகரிக்கும். சிக்கனில் புரதம் அதிகமாக  உள்ளது. ஆகையால் இதனை உங்கள் உணவில் சேர்த்து கொள்வதால் முடி வளர்ச்சி அதிகரிக்கும். சைவ பிரியர்களாக இருக்கும் போது, tofu அல்லது வேர்க்கடலை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

கேரட்:
* கேரட் கண்களுக்கு மட்டும் நல்ல உணவு இல்லை. இவை முடி வளர்ச்சிக்கும் உதவுகின்றன. வைட்டமின் ஏ சத்து அதிகமாக இருப்பதால், இவை ஒரு கண்டிஷனராக செயல்படுகிறது, மற்றும் முடி உடைவதை தடுக்கிறது. 

முடி வளர்ச்சியை குறைக்க ரசாயன பொருட்கள், அதிகமான  வெயில், மாசு போன்றவை காரணமாக இருக்கலாம். ஆனால் ஊட்டச்சத்து மிகுந்த இந்த உணவுகளை உட்கொண்டு நமது தலை முடியின் வளர்ச்சியை நாம் அதிகப்படுத்தலாம்.