பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திட்டப்படி அர்ஜுனன் மற்றும் சுபத்ராவின் காதல் மற்றும் திருமண கதை 

இந்து தர்ம புராணங்களில் ஏராளமான கதாப்பாத்திரங்கள் உள்ளன. அவற்றுள் பல கதாப்பாத்திரங்கள் புதிராக இருந்து நமக்கு குழப்பத்தை உண்டாக்குகின்றன.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திட்டப்படி அர்ஜுனன் மற்றும் சுபத்ராவின் காதல் மற்றும் திருமண கதை 

 வருங்கால தலைமுறைகளுக்கு ஆர்வத்தைத் தூண்டும் செய்தி என்னவென்றால் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் இடையில் ஆழமாக நெய்யப்பட்ட உணர்ச்சிகள் மற்றும் மோதல்கள். இப்படி பல கதாப்பத்திரங்களுக்கு நடுவில், சுபத்திரை என்ற கதாப்பாத்திரம் உண்டு. இவள் பலராமர் மற்றும் கிருஷ்ணரின் இளைய தங்கை ஆவாள். பாண்டவர்களில் அர்ஜுனனின் மனைவியும் இவளே. மகாபாரத காவியத்தில் அர்ஜுனன்- சுபத்திரையின் காதல் கதை தியாகத்தை விளக்கும் ஒரு கதையாக விளங்குகிறது.

12 ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டு காட்டில் வாழ்ந்து வந்த பின்னர், பாண்டவ இளவரசன் அர்ஜுனன், தன்னுடைய நேரத்தை அதிகமாக பிரயாணங்களிலும், புனித யாத்திரைகளிலும், தவ வாழ்விலும் செலவிட்டு வந்தான். இப்படி அவன் வாழ்நாளை ஆன்மீக பயணத்தில் கடத்திக் கொண்டு வந்தான். இப்படி ஒரு பயணத்தில் அவன் பிரபாசா என்ற வரலாற்று சிறப்புமிக்க நகரை அடைந்தான். தற்போது இந்திய துணைக்கண்டம் என்று அழைக்கப்படும் பாரத பிரசாவின் மேற்கு கரையோரத்தில் இந்த நகரம் அமைந்திருந்தது. இந்த பிரபாசாவிற்கு அருகில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், துவாரகா என்னும் ஒரு அழகிய நகரை கட்டியெழுப்பி இருந்தார். இந்த நகரத்தில் தான் ஒரு காதல் கதை அரங்கேறி பதிவுசெய்யப்பட்டது.

துவாரகையின் இளவரசி :
ஒப்பிட முடியாத அழகுடனும், பெண்ணுக்கான சர்வ இலக்கணமும் நிறைந்த துவாரகையின் இளவரசியைப் பற்றி அதிகம் கற்பனை செய்து கொண்டிருந்தான் அர்ஜுனன். ஆனால் அர்ஜுனன் ஏமாறும் விதமாக ஒரு செய்தியை வெளிப்படுத்தினார் ஸ்ரீ கிருஷ்ணர். அதாவது, இளவரசி சுபத்திரையை இளவரசன் துரியோதன் மணமுடிக்க ஏற்பாடுகள் நடைபெறுவதாகக் கூறினார். பகவான் கிருஷ்ணரின் தமையன் பலராமர், துரியோதனனுடன் சுபத்திரை திருமணம் புரிவதை விரும்புவதாக கிருஷ்ணர் கூறினார். 

சந்நியாசி வேடத்தில் அர்ஜுனன்:
மேலும் ஸ்ரீ கிருஷ்ணரின் யோசனைப்படி, அர்ஜுனன், ஒரு கைவிடப்பட்ட வைஷ்ணவ சந்நியாசி போல் மாறுவேடம் பூண்டு அந்த நகருக்குள் நுழைந்தான். எதிர்பார்த்தபடி, துறவிகள் மற்றும் முனிவர்களுக்கு சேவை செய்வதை அதிகம் விரும்பும் பலராமர், சந்நியாசி போல் மாறுவேடத்தில் இருந்த அர்ஜுனனை வரவேற்று பணிவிடைகள் செய்தார். சந்நியாசி போல் மாறுவேடத்தில் இருப்பவர் பாண்டவ இளவரசன் அர்ஜுனன் என்பதை பலராமர் அறிந்திருக்கவில்லை. 

சந்நியாசியுடன் காதலில் விழுந்த சுபத்திரை:
சுபத்திரையின் அழகால் கவரப்பட்ட அர்ஜுனன் அவள் மேல் அதீத காதல் வயப்பட்டான். அதிர்ஷ்டவசமாக , பழம் நழுவி பாலில் விழுந்தது போல் எல்லா விஷயங்களும் அர்ஜுனனுக்கு சாதகமாகவே நடந்தது. அந்த சந்நியாசியை கூர்ந்து கவனிக்கையில் சுபத்திரைக்கு அவரிடம் ஒரு இளவரசனின் தன்மைகள் இருப்பதாக உணர்ந்தாள். தனக்கு நிச்சயிக்கப்பட்ட குரு வம்ச இளவரசன் துரியோதனனுடன் ஒப்பிடும்போது இந்த சந்நியாசி சிறப்பானவனாக இருக்க முடியும் என்று நினைத்தாள். வாரங்கள் செல்லச் செல்ல இருவரும் ஒருவர் மேல் ஒருவர் அதிக ஈடுபாடு கொண்டனர். 

ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு வித நம்பிக்கையுடன், ஸ்ரீ கிருஷ்ணர் சுபத்திரையிடம் பேசினார். அவளும், அந்த புதிய சந்நியாசின் மேல் அவளுக்கு இருந்த விருப்பம் மற்றும் உணர்வு பற்றி தெரிவித்தாள். அப்போது தான் கிருஷ்ணர், அந்த சந்நியாசி பாண்டவ இளவரசன் அர்ஜுனன் என்ற உண்மையை சுபத்திரைக்கு வெளிப்படுத்தினார். சுபத்திரையால் அவர் கூறியதை நம்ப முடியவில்லை. அன்று முதல் அர்ஜுனன் மீது ஆழமாக காதல் கொண்டாள்.

கிருஷ்ணரின் திட்டம்:
பருவமழை முடியும் காலத்தில் , அர்ஜுனன் துவாரகையை விட்டு கிளம்ப வேண்டிய நேரம் நெருங்கியது. தன் காதலி சுபத்திரையை விட்டு பிரிய வேண்டும் என்ற எண்ணம் அர்ஜுனனுக்கு மிகுந்த வேதனையைத் தந்தது. மறுபடியும் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உதவியாக வந்தார். ரைவதக மலையில் நடக்க விருக்கும் ஒரு திருவிழா பற்றி அர்ஜுனனுக்கு அவர் தெரிவித்தார். அந்த திருவிழாவிற்கு யாதவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வருவார்கள் என்று கூறினார். இதனை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ளுமாறு அர்ஜுனுக்கு கிருஷ்ணர் கூறினார். மேலும், காதலர்கள் இருவரும் இணைய ஒரு வழி, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் இளவரசியைக் கடத்திச் செல்வது மட்டுமே என்பதையும் அவர் கூறினார்.

சுபத்திரையை கடத்திச் சென்றான் அர்ஜுனன்:
திருவிழா நாளன்று ராஜா உக்ரசேனர் உட்பட எல்லா பெரிய பிரமுகர்களும் துவாரகாவில் இருந்தனர், அந்த சபை கடவுளின் சபைக்கு ஒத்திருந்தது. யாதவர்கள் அனைவரும் ரைவதாக மலையின் வனப்பில் மகிழ்ந்து விளையாடி மகிழ்ச்சியுடன் இருந்து வந்தனர். அர்ஜுனன் தன்னுடைய உண்மையான வடிவத்தில் தேரின் மீது ஏறி அமர்ந்தான். சுபத்திரை தன்னுடைய தோழிகள் மற்றும் உறவினர்கள் மத்தியில் விஷ்ணு கோயில் அருகில் இருப்பதைக் கண்டு கொண்டான். எந்த ஒரு தாமதமும் இல்லாமல், அவனுடைய குதிரைகளை ஒட்டி, இளவரசியின் அருகில் சென்றான். சிறிதும் தாமதிக்காமல் , அவளுடைய கைகளைப் பற்றி தேருக்குள் இழுத்தான். மற்றவர்கள் அனைவரும் என்ன நடந்தது என்பதை உணரவதற்கு முன் வடக்கு நோக்கி பறந்து இந்திரப் பிரஸ்தத்தை அடைந்தான்.

போர் அறிவிப்பு:
தங்கள் இளவரசி கடத்தப்பட்டதை உணர்ந்த யாதவர்கள் சினம் கொண்டனர். நமது கண்முன்னே நம் நாட்டு இளவரசியை கடத்தும் அளவிற்கு யாருக்கு தைரியம் உள்ளது என்று கோபம் கொண்டு தங்கள் படைகளைத் திரட்டத் தொடங்கினர். யாதவர்கள் நீதிமன்றத்தில் போருக்கான அறிவிப்பு பற்றி விவாதிக்க குழு கூடியது. குழுமி இருந்த கூட்டத்தினர் மத்தியில் பலராமர் மிகுந்த கோபத்துடன் காணப்பட்டார். அவருடைய கண்கள் நெருப்பை உமிழ்ந்தன. பாண்டவர்களுடன் போர் செய்வது கிட்டத்தட்ட உறுதியானது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பேச்சுவார்த்தை:
அந்த நேரத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அங்குக் கூடியிருந்த குழுவை அமைதிப் படுத்தினார். ராஜ்ஜியத்தின் இளவரசியை கவர்ந்து சென்றதன் மூலம், தனது ராஜ்ஜியத்தை பாண்டவ இளவரசன் அவமானப்படுத்திவிட்டதாக பலராமர் எண்ணினார். இதற்கு மாற்றாக சமாதானமான வழியில் அரசரை அணுகி விவாகம் குறித்து பேசி இருக்கலாம் என்று கூறினார். அவரை இடைமறித்த கிருஷ்ணர், "பலம் பொருந்திய வீர நாயகர்கள் எப்போதும் இந்த முறையைத் தான் பின்பற்றுவார்கள், இதில் வெட்கப்படுவதற்கு ஒன்றும் இல்லை, மாறாக இந்த நிகழ்ச்சியை நினைத்து பெருமைப்பட வேண்டும்" என்று கூறினார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பாண்டவர்களுடன் குறிப்பாக அர்ஜுனனுடன் திருமணத்திற்கான ஒப்பந்தத்தை முன் வைத்தார். அர்ஜுனன் பரத இனத்தில் பிறந்தவன். மேலும் அவன் சிறப்பு மிக்க குந்தியின் மகன் ஆவான். உலகில் எந்த ஒரு மனிதனாலும் அர்ஜுனனை போரில் வெற்றி கொள்ள முடியாத அளவிற்கு பலசாலி. தற்போது கிருஷ்ணரின் சொந்த ரதத்தில் ஏறி சென்றுக் கொண்டிருக்கிறான். ஒருவராலும் அவனைப் பிடிக்க முடியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, சுபத்திரை மற்றும் அர்ஜுனன் ஒரு சிறந்த ஜோடியாக இருக்கின்றனர். சமாதான முறையில் அர்ஜுனனை திரும்ப அழைத்து சரியான முறையில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வதற்கு தூதுவர்களை அனுப்புவதே சரியானது.. அர்ஜுனனுடன் போர் செய்து அவமானப்பட்டு தோற்றுபோவதைத் தவிர்க்க இதுவே சரியான தீர்வு என்று கூறி முடித்தார் கிருஷ்ணர். இதனை அனைவரும் ஏற்று திருமண ஏற்படுகளைச் செய்யத் தொடங்கினர்.

திருமணம் நடந்தேறியது:
நகர் முழுவதும் விழாக் கோலம் பூண்டு, கொடிகளும் தோரணங்களும் கட்டப்பட்டு ஒரு பெரிய விழாவை எதிர் நோக்கிக் காத்திருந்தது. அர்ஜுனன் சுபத்திரையின் கரம் பிடித்து நெருப்பை வலம் வந்து ரிஷி முனிவர்களின் ஆசிர்வாதத்தைப் பெற்று இனிய இல்லறத்தைத் தொடங்கினர்.