தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே!

மனித உடலின் திறன், ஆற்றல் மற்றும் மன நிலையை பாதிக்கும் தன்மை தூக்கத்திற்கு உண்டு. 

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே!

இரவில் ஆழ்ந்த உறக்கம்  இல்லாத போது மறுநாள் நல்ல நாளாக  இருக்க முடியாது. தூக்கமின்மையால் நீரிழிவு, இதய நோய் மற்றும் உடல் பருமன் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. 


ஒவ்வொரு நாளும் சராசரியாக  7- 8 மணி நேர இரவு நேர உறக்கம் மிகவும் இன்றியமையாதது. போதுமான அளவு இரவு உறக்கம் இல்லாதவர்கள், ஒரே தூங்கும் அட்டவணையை தொடர்வது, காஃபின் பொருட்களை சேர்க்காமல் இருப்பது, ஆல்கஹால், நிகோடின் , அதிக அளவு உணவு போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. மற்றும் ஒரு விஷயம்! சில பொருட்களை சேர்த்து கொள்வதால் தூக்கம் உங்கள் கண்களை எளிதாக தழுவும். அவை என்ன என்பது பற்றியது தான் இந்த தொகுப்பு. 

புளிப்பு செர்ரி :
ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் இந்த பழத்தில் அதிகம் உள்ளன. இவை தூக்கத்தை அதிக படுத்துகின்றன . செர்ரி பழச்சாறை அருந்தியவர்களுக்கு  தூக்கம், அதிகமாகவும், ஆழமாகவும் இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. 

இதனை உட்கொள்வதால் தூக்கம் அதிகரிப்பதன் ரகசியம் மெலடோனின் ஆகும். இது மனித உடலில் இருக்கும் ஒரு வகை ஹார்மோன் ஆகும். அடர்ந்த இருட்டில் இருக்கும்போது, மனித உடல் இந்த ஹார்மோனை உற்பத்தி செய்கிறது, இதனால் தூக்க சுழற்சி சரியாக ஊக்குவிக்கப்படுகிறது. இந்த மெலடோனின் உற்பத்தி அதிகமாக இருக்கும் போது, தூக்கம் வருகிறது, அதுவே பகல் நேரத்தில், இதன் உற்பத்தி குறையும் போது, தூக்கம் தொலைகிறது. இந்த மெலடோனின், செர்ரி பழத்திலும் இருக்கிறது.  ஆகவே தூக்கம்  வராமல் இருக்கும்போது, இந்த புளிப்பு செர்ரி பழ ஜூஸை  பருகினால், இயல்பாக தூக்கம் உங்களை தழுவும். ஒரு நாளில் பகலில் ஒரு முறை மற்றும் இரவில் உறங்குவதற்கு முன் ஒரு முறை இந்த ஜூஸை பருகலாம்.

பூசனிக்காய் விதை:
பூசணி விதைகளில் ட்ரிப்டோபன் என்ற அமினோ அமிலம் அதிகமாக உள்ளது. இது தூக்கத்தை அதிகப்படுத்துகிறது. ட்ரிப்டோபன் என்பது, செரோடோனின் தொகுப்பில் மிக முக்கிய பங்காற்றுகிறது. இந்த செரோடோனின் தான் உடலில் மெலடோனினாக மாற்றம் பெறுகிறது. இன்சோம்னியா என்னும் தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்கள், ட்ரிட்டோபான் அதிகமாக இருக்கும் பூசணி விதைகளை கார்போஹைட்ரேட்டுடன் சேர்த்து சாப்பிடுவதால் அவர்கள் விழித்திருக்கும் நேரம் குறைவதாக ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. கார்போஹைட்ரேட்டுடன் ட்ரிப்டோபனை சேர்த்து உண்பதால் ட்ரிப்டோபன் மூளைக்கு  செல்ல அவை எளிதில் உதவுகிறது. ஆகவே பூசணி விதைகளுடன் வேக வைத்த உருளை கிழங்கை உண்பதால் ஆழ்ந்த தூக்கத்தை பெறலாம்.

பசும்பால்:
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பால் நல்ல தூக்கத்தை கொடுக்கிறது. பாலில் தூக்கத்தை தரும் மெலடோனின் மற்றும் ட்ரிப்டோபன் என்னும் அமினோ அமிலம் ஆகிய இரண்டும் உள்ளது. பசுவிடம்  இருந்து இரவில் கறந்த பாலை பருகுவது, பகலில் கறந்த பாலை பருகுவதை விட பல மடங்கு அதிக பலனை தருகிறது. இரவில் உறங்குவதற்கு முன் 1 க்ளாஸ் பால் பருகுவது தூக்கத்தை வரவழைக்கும்.

வாழைப்பழம்:
இரவில் நல்ல தூக்கத்தை பெற உதவும் மற்றொரு பொருள் வாழை பழம். வாழைப்பழத்தில் ட்ரிப்டோபன் மற்றும் கார்போ அதிகமாக உள்ளது. ஆகவே இது ஒரு சிறந்த இரவு சிற்றுண்டியாக செயல்பட்டு நல்ல தூக்கத்தை தருகிறது. ஆகவே இரவில் உறங்குவதற்கு முன் ஒரு வாழை பழத்தை உண்பது நல்லது.

வால்நட் :
இந்த ஊட்டச்சத்து மிக்க பருப்பில் மெலடோனின் மற்றும் செரோடோனின் அதிகமாக உள்ளது. இவை இரண்டும் இரவில் ஆழ்ந்த உறக்கத்திற்கான சாவியை போல் செயல்படுகிறது.

ஜாஸ்மின் அரிசி:
ஜாஸ்மின் அரிசி கொண்டு சமைத்த உணவை இரவில் உட்கொள்வதால் எளிதில் தூக்கம் வருகிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. ஆனால் இதனை உறங்க செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன் உண்பதை விட 4மணி நேரம் முன்னால்  உண்ணும்போது நல்ல தூக்கம் பெறலாம். இதில் கார்போ அதிகமாக  உள்ளது. இவை ட்ரிப்டோபன் அளவை அதிகரிக்க உதவுகிறது. தொடர்ந்து இந்த அரிசியை பயன்படுத்துவதால் இரத்த சர்க்கரை அளவில் மாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.  நீரிழிவு நோயாளிகள் இதனை எடுத்துக் கொள்வது நோயின் அளவை அதிகரிக்க செய்யும். 

சால்மன் :
1 துண்டு மீன் உங்கள் தூக்கத்தை அதிகமாக்கும். சால்மன் மீனில், வைட்டமின் டி மற்றும் ஒமேகா கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளது. இவை இரண்டிற்கும் ஆழ்ந்த தூக்கத்திற்கும் தொடர்பு உண்டு. DHA  என்று சொல்லப்படும் டோக்கோசா ஹெக்சானிக் அமிலம் (docosahexaenoic acid) ஒரு வகை ஒமேகா கொழுப்பு அமிலமாகும். இதனை குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அவர்களுக்கு சராசரியாக 58 நிமிடம் அதிக தூக்கம் கிடைப்பதாகவும், 7 மடங்கு குறைவாக தூக்கத்தின் இடையில் விழிப்பதாகவும் ஒரு ஆய்வு கூறுகிறது. 

கிவி பழம்:
கிவி பழத்தில் செரோடோனின் மற்றும் உறக்கத்தை அதிகரிக்கும் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் உள்ளன. உறங்க செல்வதற்கு 1 மணி நேரம் முன்னதாக 2 கிவி பழத்தை எடுத்துக் கொள்பவர்கள் எளிதில் உறங்குகின்றனர் என்றும் நீண்ட நேரம் உறங்குகின்றனர் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. தூங்கத்தின் இடையில் விழிப்பதும் குறைகிறது. 

லெட்டூஸ் :
லெட்டூஸ் என்னும் பச்சை காய்கறி, உடல்  ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த லெட்டூஸ், தூக்கத்தை அதிகரிப்பதில்  பெரும் பங்கு வகிப்பது யாரும் அறியாத  ஒன்று தான். இதனை சாலட்டில் சேர்த்து உண்பதால் ஆழ்ந்த உறக்கம் பெறலாம். இது ஒரு வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது. 

கடற்பாசி :
பழுப்பு கடற் பாசியில் பிளோரோட்டனின் என்ற துவர்ப்பு பொருள் உள்ளது. இவை தூக்கத்தை சீராக்க  உதவுகிறது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. ஜப்பானியர்கள் அவர்களின் முன்னோர்களை பற்றி ஆராய்கையில், கடற்பாசியை அதிகம் உட்கொண்டவர்கள் உறக்கம், அதனை குறைவாக உட்கொண்டவர்கள் உறக்கத்தை விட அதிகமாக உள்ளதை கண்டறிந்துள்ளனர். ஆகவே இரவில் உறக்கமில்லாமல் தவிக்கும் போது இந்த கடற்பாசியை எடுத்துக் கொள்ளலாம் .

மேலே கூறிய உணவுகளை தூக்கமின்மையால் அவதி போடுகிறவர்கள் உட்கொண்டு நீண்ட உறக்கத்தை பெறலாம்.