கருப்பு சப்போட்டாவின் 11 அற்புத நன்மைகள் 

கருப்பு சப்போட்டா என்றால் என்ன?

கருப்பு சப்போட்டாவின் 11 அற்புத நன்மைகள் 

ஆற்றல் மற்றும் ஆரோக்கியம் அதிகரிப்பு, நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமை, வயது முதிர்வில் தாமதம், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கூறுகளை அழிப்பது, கண் ஆரோக்கியத்திற்கு ஆதரவு, செரிமானத்தை மேம்படுத்துவது, எடை குறைப்பை ஊக்குவிப்பது , இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது போன்றவை கருப்பு சப்போட்டாவின் நன்மைகள் ஆகும். இந்த நன்மைகள் தவிர, சிறுநீரக ஆரோக்கியத்திற்கு ஆதரவு, உடலுக்குத் தேவையான கனிமங்களை வழங்குவது, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது, ஹார்மோன் சமநிலைக்கு உதவுவது , கிருமிகளை எதிர்த்து போரிடுவது போன்றவையும் இந்த பழத்தின் நன்மைகள் ஆகும்.

இவ்வளவு நன்மைகளை ஒருங்கே தரும் இந்தப் பழம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? இல்லை என்றால் இந்த பதிவைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். ஏற்கனவே இந்தப் பழத்தைப் பற்றி நீங்கள் அறிந்திருந்தால், மேலும் இதன் சிறப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவைப் படித்திடுங்கள்.

கருப்பு சப்போட்டாவின் தாயகம் மெக்ஸிகோ. கருப்பு சப்போட்டா பழத்தை "சாக்லேட் புட்டிங் பழம்" என்றும் கூறுவர். இதற்குக் காரணம் இதன் நிறம் ஆகும். இந்த பழத்தில் மிக அதிக வைட்டமின் சத்து உண்டு. இந்த பழம் தற்போது பல நாடுகளில் பயிரிடப்படுவதால் இந்த பழத்தைப் பற்றி பரவலாகத் தெரிய வந்துள்ளது. இந்த பழம் உருண்டை வடிவத்தில் இருக்கும். பழுத்த கருப்பு சப்போட்டா, சாக்லேட் புட்டிங் சுவையை ஒத்து இருக்கும். ஆனால் பழுக்காமல் காயாக இருக்கும் கருப்பு சப்போட்டா கசப்பு தன்மை உடையதாகவும், உண்பவரை முக சுளிக்கவும் வைக்கும்.

ஆஸ்திரேலியா, ப்ளோரிடா, பிலிப்பின்ஸ் போன்ற நாடுகளில் பயிரிடப்படும் இந்த பழம், வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டல நாடுகளில் அதன் அளவிற்கு உகந்ததாக வளர்கிறது. சூரிய ஒளி  இருக்கும் இடங்களில் ஈரப்பதம் உள்ள மண் , இந்த பழம் பயிரிட ஏற்றதாக உள்ளது. அடிக்கடி தண்ணீர் விடுவதால் இதன் வளர்ச்சி தடைபடுகிறது,. 

கருப்பு சப்போட்டாவின் ஊட்டச்சத்து மதிப்பு :
இந்த பழத்தில் 111 கலோரிகள் உள்ளன. இந்த பழத்தில் பொட்டசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரெட், புரதம், கால்சியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்றவை அதிகமாக உள்ளன. அதே நேரத்தில் கொழுப்பு மிகவும் குறைவாக உள்ளது. இந்த பழத்தில் கொலஸ்ட்ரால் அளவு பூஜ்யம். இதனால் இதயத்திற்கு மிகவும் ஏற்றது, ஒட்டுமொத்த உடல் நலத்திற்கு மிகவும் ஏற்றது, 

கருப்பு சப்போட்டாவின் 11 அற்புத நன்மைகள் :

1. அதிகரித்த வைட்டமின் சி சத்தால், ஆற்றல் மற்றும் ஆரோக்கியம் அதிகரிக்கிறது:
வைட்டமின் சி சத்து, சருமத்திற்கு மிக அற்புத பலன்களைத் தருகிறது , உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. இந்த வைட்டமின் சி, கருப்பு சப்போட்டா பழத்தில் மிக அதிகம் உள்ளது. சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிப்பது மட்டுமில்லாமல், முழு உடலையும் நீர்ச்சத்தோடு இருக்க வைக்கிறது. கருப்பு சப்போட்டா மிகுந்த இனிப்புத் தன்மையுடன் இருக்கும் ஒரு பழம். பொதுவாக இனிப்பு சுவை உடனடி ஆற்றலைத் தரும். மேலும், இந்த பழம் சாப்பிடுவதால் உங்கள் மனநிலை சந்தோஷமாக இருக்கும். இதனால் உங்கள் மன ஆரோக்கியம் அதிகரிக்கும். மேலும், இந்த பழத்தில் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரெட் இருப்பதால் ஆற்றலைத் தந்து, உடல் செயல்பாடுகள் சிறந்த முறையில் நடக்க உதவுகிறது.

2. நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைகிறது :
வைட்டமின் சி சத்து அளவுக்கு அதிகமாக இருப்பதால் வெளியில் இருந்து உடலுக்குள் செல்லும் நச்சுகளை எதிர்த்து போராட உதவுகிறது . இதனால் பல சாத்தியமான நோய்களில் இருந்து உடலைப் பாதுகாக்கிறது. மேலும், உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

3. அன்டி ஆக்சிடென்ட் மற்றும் வயது எதிர்ப்பு தன்மை:
மாசுக்களால் உடலுக்குள் ஊடுருவும் ப்ரீ ரேடிகல்களை வெளியேற்ற உதவ கருப்பு சப்போட்டாவில் உள்ள அன்டி ஆக்சிடெண்ட்  காரணமாக உள்ளது. மேலும் உடலின் உட்பகுதிகளில் தீங்கு விளைவிக்கும் அணுக்களின் வளர்ச்சியை நிறுத்தவும் இது சிறந்த நன்மையைத் தருகிறது. இந்த நன்மைகளுடன் சேர்த்து, அன்டி ஆக்சிடென்ட் உட்கொள்வதால் ஒரு அமைதியான உணர்வுவும் மென்மையான மனநிலையும் உண்டாகிறது. இந்த வகையில் கருப்பு சப்போட்டா பாதுகாக்க வேண்டிய ஒரு பழமாக இருக்கிறது.

கருப்பு சப்போட்டாவில் அதிக அளவு அன்டி ஆக்சிடென்ட் இருப்பதன் காரணமாக, கொலோஜென் உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டு, சருமத்தின் தன்மை ஆரோக்கியமாக வளர்ச்சி அடைகிறது. இதனால் சருமம் இளமையாக காட்சி தருகிறது. மன அழுத்ததில் இருந்து விடுபடுவதால் கூடுதல் நன்மை சருமத்திற்கு கிடைக்கப்படுகிறது.

4. அதிகரித்த வைட்டமின் ஏ சத்து கண் ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது :
உடலின் ஆரோக்கியமான அணுக்கள் வளர்ச்சி மற்றும் புதிய அணுக்கள் உற்பத்திக்கு வைட்டமின் ஏ சத்து பெருமளவில் உதவுகிறது. மேலும் ஆரோக்கியமான கண் பார்வைக்கு வைட்டமின் ஏ சத்து மிகவும் அவசியம். வைட்டமின் ஏ சத்து மிக அதிகமாக உள்ள ஒரு அருமையான பழம் கருப்பு சப்போட்டா. இயற்கையான முறையில் வைடமின் ஏ சத்தைப் பெற நாம் இந்த பழத்தைப் பயன்படுத்தலாம். கண்பார்வைத் தொடர்பான எண்ணற்ற பிரச்சனைகளில் இருந்து உங்களைப் பாதுகாக்க , ஒரு முக்கிய ஆதாரமாக விளங்குவது கருப்பு சப்போட்டா. இந்த பழம் உங்கள் கண் ஆரோக்கியத்தையும் பார்வையையும் மேம்படுத்த உதவுகிறது.

5. செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலைப் போக்கி , எடை குறைப்பிற்கு உதவுகிறது:
கருப்பு சப்போட்டாவில் இருக்கும் அதிகமான நார்ச்சத்து, செரிமானத்தை மேம்படுத்தி , வயிறு மற்றும் குடல் பகுதிகளில் உண்டாகும் எண்ணற்ற செரிமானம் தொடர்பான பாதிப்புகளைத் தடுக்க உதவுகிறது. தொடர்ந்து கருப்பு சப்போட்டா சாப்பிடுபவர்களுக்கு குடல் இயக்கம் தொடர்பான தொந்தரவுகள் குறைந்து ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் அறியப்படுகிறது. கருப்பு சப்போட்டாவில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், மலமிளக்கியாக செயல் புரிந்து , வயிற்றில் இருக்கும் அமில அளவைக் குறைக்க உதவுகிறது. எனவே, செரிமானம் அதிகரித்து, மலச்சிக்கல் பாதிப்பு குறைகிறது. மேலும் குமட்டல் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகளைத் தடுக்கவும் பெருமளவில் பயன்படுகிறது.

கருப்பு சப்போட்டாவில் உள்ள உயர் நார்ச்சத்து சிறந்த செரிமானத்திற்கும் வளர்சிதை மாற்றத்திற்கும் வழி வகுக்கிறது. எடை குறைப்பு நிர்வாகத்தில் மேலே குறிப்பிட்ட இரண்டு செயல்பாடுகளும் மிகவும் முக்கியமானவை ஆகும். உடல் செயல்பாடுகளுக்குத் தேவையான எல்லா முக்கிய ஊட்டச்சத்துகளையும் கொடுக்கும் அதே நேரத்தில், தீங்கு விளைவிக்கும் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் கார்போ சத்து போன்றவை குறைவாக உள்ளன. கருப்பு சப்போட்டாவில் காணப்படும் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரெட் , நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தந்து, பசியுனர்வைக் குறைத்து, ஒரு நாளில் உணவு உட்கொள்ளும் அளவைக் குறைக்கிறது. மேலும் செரிமான நேரமும் அதிகமாகிறது. இதனால் நீண்ட நேரம் பசியுணர்வு இல்லாமல் இருக்க முடிகிறது.

6. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது :
கருப்பு சப்போட்டாவில் கொலஸ்ட்ரால் அளவு குறைவாக, அதாவது பூஜ்யமாக இருப்பதால், தமனிகளில் இரத்த ஓட்டம் சிறந்த முறையில் இருக்கிறது. இதனால் இதய செயலிழப்பு மற்றும் வாதம் போன்ற பாதிப்புகள் நம்ப முடியாத அளவிற்கு குறைகிறது. உடலில் நல்ல கொலஸ்ட்ரால் எனப்படும் HDL அளவை அதிகரிக்கவும், LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் இந்த பழம் உதவுகிறது.

7. அதிக மினரல் உள்ளது :
கால்சியம், பொட்டாசியம், இரும்பு, பாஸ்பரஸ், போன்ற கனிமங்கள் கருப்பு சப்போட்டாவில் மிக அதிகம் உள்ளது. கல்சியம் சத்து எலும்புகள் மற்றும் பற்களின் வலிமையை அதிகரிக்கிறது. தசைகளின் வளர்ச்சிக்கும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளின் சிகிச்சைக்கும் பொட்டாசியம் முக்கிய பங்காற்றுகிறது. இரத்தம் உறைவதைத் தடுக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு உதவுகிறது. உயர்ந்த அளவு கால்சியம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை எலும்புகளின் வலிமைக்கு சிறந்த முறையில் நன்மை புரிகின்றன. எலும்புகளின் அடர்த்தியை அதிகரிப்பதன் காரணமாக எலும்பு முறிவு ஏற்படுவதற்கான அபாயம் தவிர்க்கப்படுகிறது. 30 வயதைக் கடந்தவர்கள், இந்த ஒரு குணத்திற்காகவே கருப்பு சப்போட்டாவை எடுத்துக் கொள்வது அவசியம். இந்த வயதில், எலும்பு உடைவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளது.

8. சிறுநீரக ஆரோக்கியம்:
சிறுநீரகத்தின் சீரான செயல்பாடுகளை ஊக்குவிக்க , கருப்பு சப்போட்டாவில் உள்ள பொட்டாசியம் சிறந்த முறையில் உதவுகிறது. சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கவும் இது உதவுகிறது. சிறுநீரகத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளை மேம்படுத்த இந்த பழத்தில் உள்ள இதர கனிமங்கள் மற்றும் அன்டி ஆக்சிடென்ட் உதவுகின்றன.

9. இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கிறது:

கருப்பு சப்போட்டாவில் பல ஊட்டச்சத்துகள் இரத்த அழுத்தத்தைக் குறைத்து ஹைப்பர் டென்ஷன் வராமல் தடுக்கிறது. குறிப்பாக கருப்பு சப்போட்டாவில் உள்ள பொட்டாசியம் மற்றும் இரும்பு ஆரோக்கியமான இரத்த அழுத்த நிலையை நிர்வகிக்க உதவுகிறது.

10. ஹார்மோன் சமநிலைக்கு உதவுகிறது:
கருப்பு சப்போட்டாவில் உள்ள பல ஊட்டச்சத்துகள் , நரம்புகளை அமைதிபடுத்தி, மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வைக் குறைக்கிறது. மனஅழுத்தம் அதிகரிப்பதால், ஹார்மோன் சமச்சீரின்மை உண்டாகிறது. கருப்பு சப்போட்டா சாப்பிடுவதால் ஹார்மோன் சமநிலை ஏற்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

11.பக்டீரியா எதிர்ப்பு:

கருப்பு சப்போட்டாவில் அதிக அளவு வைட்டமின் சி சத்து இருப்பதால், வாயில் பக்டீரியா வளர்ச்சி ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. இதனால் பக்டீரியா தொடர்பான தொந்தரவுகள் வராமல் தடுக்கப்படுகிறது. வைட்டமின் சி சத்து, பக்டீரியா வராமல் தடுக்கவும், பாக்டீரியாக்களை அழிக்கவும் உதவுகிறது. இதன் காரணமாக கிருமிகள் தொடர்பாக உண்டாகும் எல்லா பிரச்சனைகளும் தவிர்க்கப்படுகின்றன. தீங்கு விளைவிக்கும் கிருமிகளை எதிர்த்து போராட வைடமின் சி உதவுகிறது. கருப்பு சப்போட்டாவில் உள்ள பக்டீரியா எதிர்ப்பு பண்பு , வறண்ட தொண்டை போன்ற அழற்சி பாதிப்புகள் உடலில் தோன்றுவதைக் குறைக்க உதவுகிறது. 

முடிவுரை:
கருப்பு சப்போட்டாவை ஒரு இயற்கை மருத்துவர் என்று சொல்வது மிகையல்ல. இன்றைய மக்களின் பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற உணவுகள அதிகம் உட்கொள்வது அல்லது ஆரோக்கியமான பழங்களை குறைத்து உட்கொள்வது போன்ற பழக்கங்களாகும். இவ்வளவு நன்மைகள் அடங்கிய இந்த சிறு பழத்தை உங்கள் தினசரி உணவில் இணைத்துக் கொள்வது உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.