கர்ப்பகாலத்தில் செய்யக்கூடாத சில செயல்கள் 

கர்ப்பகாலத்தில் நீங்கள் செய்ய வேண்டிய,செய்யக்கூடாத சில செயல்களை இங்கு பட்டியலிட்டு கூறியிருக்கிறோம், இந்த பட்டியலை நீங்கள் அறிந்து கொள்வதால், ஒரு சிறப்பான தாய்மைப் பருவத்தை நீங்கள் அடையலாம்.

கர்ப்பகாலத்தில் செய்யக்கூடாத சில செயல்கள் 

பெண்களுக்கு கர்ப்பகால அனுபவம் உணர்ச்சிகள் மிகுந்தது. ஒவ்வொரு நிமிட உணர்ச்சியையும் வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. மனதளவிலும் உடலளவிலும் பல வித அனுபவங்களை பெண்கள் கர்ப்பகாலத்தில் பெற்றிடுவார்கள். அதே சமயம் உடலளவில் பல சவால்களை சந்திக்க வேண்டிய சூழலும் உருவாகும். இந்த அனுபவம் முற்றிலும் மாயம் நிறைந்ததாக தோன்றும் . இந்த உடலியல் மாற்றம் பெண்களுக்கு ஒரு தனி அழகைக் கொடுக்கும். பல பெண்கள் இந்த 9 மாத காலங்களை மிகப் பெரிய சிக்கல்களுடன் கழிப்பதில்லை என்றாலும், ஒரு சில வாழ்வியல் மாற்றம் செய்து கொள்வதால் இந்த கர்ப்பகாலம் இன்னும் சிறப்பான முறையில் கழியலாம். மேலும் உங்கள் குழந்தையை ஆரோக்கியமாக இந்த உலகிற்கு வரவேற்க முடியும்.

1. மது அருந்துவதைத் தவிர்க்கவும்:
தாய்மை அடையும் நிலையில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் மது அருந்துவதை முற்றிலும்  தவிர்க்க வேண்டும் மது அருந்துவது வயிற்றில் உள்ள கருவிற்கு முழுக்க முழுக்க தீமையைத் தரும் . ஆகவே இதனைத் தவிர்ப்பது சிறந்தது. பெண்கள் ஒயின் அருந்துவதில் எந்த ஒரு தவறும் இல்லை என்று சிலர் கூறுவார்கள். ஆனால் இந்த 9 மாதங்களில் ஒயின் பருகுவதைத் தவிர்ப்பது கூட நல்லது. மது அருந்தும் தாய்மார்களின் கல்லீரல் ஆரோக்கியமாகவும் நல்ல செயல்பாட்டு நிலையிலும் இருக்கலாம், ஆனால் கருவில் உள்ள குழந்தையின் கல்லீரால் மதுவையும் அதன் ரசாயனத்தையும் கையாளும் வகையின் வளர்ச்சி பெறாமல் இருக்கும். தாய் அருந்தும் மது நஞ்சுக்கொடி வழியாக கருவை அடைவதால் குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பும், குறைபாடும் உண்டாகலாம். குழந்தை இறந்து பிறப்பது, மூளைச் சேதம், பிறப்பு குறைபாடு, கருச்சிதைவு போன்ற பாதிப்புகள் தாய்மார்கள் மது அருந்துவதால் ஏற்படலாம். உங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தையின் நலனுக்காக எந்த விதத்தில் மது அருந்துவதையும் தவிர்க்கவும்.

2. அதிகமான கபைன் :
பெட் காபி அல்லது காலை நேர காபிக்கு அடிமையாக இருப்பவர்களுக்கு இது ஒரு கெட்ட செய்தியாகும். கர்ப்பமாக இருக்கும்போது அதிக அளவு கபைன் எடுத்துக் கொள்வதால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. 200 மிகி அளவிற்கு குறைவாக கபைன் எடுத்துக் கொள்வது உங்கள் உடல்நலத்திற்கு நல்லது. ஆனால் அவ்வப்போது தேநீர், சாக்லேட் பார் அல்லது கோக் கூட பருகலாம். இவற்றையும் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே எடுத்துக் கொள்வது நல்லது. காலையில் எழுந்தவுடன் நீங்கள் பருகும் காபி அல்லது தேநீருக்கு மாற்றாக மூலிகை தேநீர், எலுமிச்சை மற்றும் வெந்நீர் , அல்லது மற்ற மூலிகைக் கலவை ஆகியவற்றை பருகலாம். கபைன் பருகுவதை இவற்றின் மூலம் தவிர்க்கலாம்.

3. நீண்ட நேரம் சூரிய குளியல் மேற்கொள்வது :
சூரிய குளியல் எடுத்துக் கொள்வதால் உடலில் நல்ல நெகிழ்ச்சி கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் கருவுற்றிருக்கும் பெண்கள் நீண்ட நேரம் சூரிய குளியல் எடுப்பது நல்லதல்ல. நீண்ட நேரம் சூரிய குளியல் எடுப்பதால் சூரியனின் வெப்பம் உங்கள் உடலில் தாக்கும் வாய்ப்பு உண்டாகும் மேலும் இதனால் கட்டிகள் அல்லது புண்கள் உண்டாகலாம். மிகவும் சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு வேனிர்கட்டி ஏற்படலாம். மேலும் அதிக வெயில் கருவில் உள்ள குழந்தையை பாதிக்கலாம். அதிக அளவு சூரிய குளியல் எடுத்துக் கொள்ளும் கர்ப்பிணிகளின் குழந்தைகள் பிறந்தவுடன் , அவர்களின் IQ அளவு குறைவாக இருப்பதாகவும், அவர்கள் குறைந்த எடையுடன் பிறப்பதாகவும் சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. வெயிலில் வெளியில் செல்லும்போது கர்ப்பிணிகள் அதிக கவனத்துடன் செல்வது முக்கியம். தலையில் தொப்பி அல்லது ஸ்கார்ப் அணிந்து வயிற்றை நன்றாக மூடி மறைத்துக் கொண்டு செல்லவும். உங்கள் குழந்தையின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம்.

4. வெந்நீர் குளியல் வேண்டாம்:
கர்ப்ப காலத்தில் உடலில் பல வித வலிகள் ஏற்படலாம். இதற்கு சூடான நீரில் குளிப்பதை சிலர் ஒரு தீர்வாக நினைக்கலாம். ஆனால் இது தவறு. சூடாக இருக்கும் நீரில் குளிப்பது மனதிற்கு மகிழ்ச்சியைத் தருவதாக இருந்தாலும் உங்கள் உடல் வெப்பத்தை அதிகரிக்கும். இதனால் உங்கள் கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு ஏற்படலாம். குழந்தைக்கு பிறப்பு குறைபாடு  மற்றும் முறையற்ற வளர்ச்சி ஆகியவை உண்டாகலாம். ஆகவே இவற்றைத் தடுக்கும் பொருட்டு, சூடான நீருக்கு மாற்றாக வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். உங்கள் உடல் வலி மற்றும் கால் வலியைக் குறைக்க வெதுவெதுப்பான நீர் அல்லது ஐஸ் பேக் கொண்டு உடலுக்கு ஒத்தடம் கொடுக்கலாம். இது ஒரு பாதுகாப்பான வலி நிவாரண முறையாக இருக்கலாம். மேலும் இதன் பலனும் எதிர்பார்த்தபடி இருக்கும்.

5. பயணம் செய்வதைத் தவிர்க்கவும்:
கர்ப்பிணிகள் தன்னை வீட்டுக்குள்ளேயே அடைத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. தேவை ஏற்பட்டால் மட்டும் அதிகம் பயணம் செய்யலாம் . மற்றபடி பயணம் செய்வதை தவிர்த்துக் கொள்ளலாம். இதன் காரணம் மிக எளிது. பயணத்திற்கான ஏற்பாடுகளை நீங்கள் கவனிக்க வேண்டும். உங்கள் குடும்பத்தினரின் பெட்டி படுக்கைகளை பேக் செய்ய வேண்டும். இவை எல்லாவற்றையும் முடித்து விட்டு, பயணிக்க தொடங்க வேடும். உங்களுக்கு அடுத்த சில மணி நேரங்கள் ட்ரைன் அல்லது கார் அலல்து ப்ளேனில் அசௌகரியமான சூழலில் அமர்ந்து கொண்டு செல்ல நேரலாம். மேலும் இதற்கிடையில் இயற்கை அழைப்புகள் வேறு.. பயணம் முடிந்து ஒரு ஹோட்டல் அல்லது வேறு இடத்தில்  உங்களை ஆசுவாசப்படுத்த நேர்ந்தாலும் உங்களுக்கு ஏற்ற விதத்தில் தலையணை கூட இருக்காது. மனஅழுத்தம் மிகுந்த தூக்கமில்லாத இரவுடன் உங்கள் பயணம் முடிவிற்கு வரும். ஆகவே உங்களுக்கு ஏற்ற விதத்தில் உங்கள் சௌகரியம் சற்றும் குறையாமல் இருக்கும் விதத்தில் வீட்டிலேயே ரிலாக்ஸ் செய்து கொள்வதால் உங்கள் மகிழ்ச்சியில் எந்த ஒரு குறையும் இருக்காது.

6. டயட் இருக்க வேண்டாம்:
கர்ப்பகாலம் என்பது மனஅழுத்தம் நிறைந்த ஒரு காலம். இதுவரை உடலை கனகச்சிதமாக நிர்வகித்த இளம் பெண்களுக்கு, அதிகரித்த உடல் எடை, உப்பிய வயிறு, இடுப்பு மற்றும் வயிற்று பகுதியில் கோடுகள் தென்படுவது, வீங்கிய மார்பு ஆகியவை சற்று மன உளைச்சலை உண்டாக்கலாம். குறிப்பாக எந்த நேரமும் டயட், வொர்க் அவுட் என்று பிட்னஸ் மீது ஈர்ப்புடன் இருக்கும் பெண்களுக்கு இந்த காலம் ஒரு வித அச்சுறுத்தலைக் கொடுக்கும். ஆனால் உங்கள் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்துகள் கிடைப்பதை உறுதி செய்வது உங்கள் அதிகரித்த உடல் எடை என்பதை நினைவில் கொள்ளுங்கள். தாய் சாப்பிடும் உணவின் மூலமாக மட்டுமே வயிற்றில் வளரும் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து, வைட்டமின், மினரல் ஆகியவை கிடைக்கும். ஆகவே இந்த உணவு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும், அது சாப்பிட்டால் கொழுப்பு அதிகரிக்கும் என்று தேவையற்ற யோசனைகளைத் தவிர்த்து, குழந்தைக்கு வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுகளை மருத்துவர் பரிந்துரைக்கும் வகையில் போதிய அளவு எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். நீங்கள் குழந்தையை ஈன்றெடுத்த பிறகு, உங்கள் உடல் எடையை தாராளமாக குறைத்துக் கொள்ள முடியும்.

7. இந்த உணவுகளைத் தவிர்க்கவும்:
முதன்முறையாக கருவுறும் பெண்களுக்கு எந்த உணவை சாப்பிட வேண்டும், எந்த உணவைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்த கவலைகள் இருக்கும். குறிப்பாக கருவுற்ற முதல் 3 மாதங்களில் கருவின் அளவு மிகச் சிறியதாக இருக்கும் நேரத்தில் தாயின் உணவில் கவனம் மிகவும் அவசியம். கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டிய உணவின் பட்டியல் இதோ உங்களுக்காக...

 . கடல் உணவுகள் மற்றும் சமைக்கப்படாத இறைச்சி
 . பப்பாளி
 . எள்ளு
 . கத்திரிக்காய்
 . வெந்தயம்
 . பைனாப்பிள்
 . மீன்
 . பதப்படுத்தப்படாத பால் பொருட்கள் 
 
8. பெயின்ட் அடிக்க வேண்டாம்:
நம் வீட்டில் ஒரு புதிய நபர் இணையப் போகிறார் என்பது ஒரு புதிய அற்புத அனுபவத்தைத் தரும். ஆகவே அந்த நபருக்காக ஷாப்பிங் போவது, வீட்டில் அவருக்கான ஒரு இடத்தை உருவாக்குவது என்று நாம் பல திட்டங்கள் போடுவோம். குழந்தைக்கான அறையை வடிவமைத்து வண்ணம் பூச வேண்டும் என்பது பல பெண்களின் ஆவலாக இருக்கலாம். ஆனால் பெயின்ட்டில் உள்ள ரசாயனம் தாய்க்கும் குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே பெயின்ட் வாசனையை நுகராமல் இருப்பது நல்லது.
 
9. ஹீல்ஸ் அணிய வேண்டாம்:
அடிக்கடி மாறும் உடல் எடையும், வயிற்றின் பாரமும் காரணமாக சௌகரியமான காலணிகளை அணிவது கர்ப்பிணிகளுக்கு நன்மை தரும். உங்கள் உடலின் மைய எடை மாறும் காரணத்தினால், ஹீல்ஸ் அதிகம் உள்ள காலணிகளை அணிவதால் சீராக நடப்பதில் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் உடல் வடிவத்தில் மாறுபாடுகளைத் தவிர்க்கவும், ஹீல்ஸ் அணிவதால் உண்டாகும் விபத்துகளைக் குறைக்கவும் இந்த 9 மாதத்திற்காவது ஹீல்ஸ் அணிவதைத் தவிர்க்கலாம். மேலும் ஹீல்ஸ் அணிவதால் கால்களில் வீக்கம் ஏற்படலாம். வயிறு பெரிதாக இருக்கும் காரணத்தினால் ,  உங்களால் குனிந்து கால்களை பிடித்து சிகிச்சை அளிப்பது இயலாத காரியம். கால்களில் உண்டாகும் வீக்கத்தைக் குறைக்க உங்கள் கணவர் உதவியுடன், கால்களை வெதுவெதுப்பான உப்பு நீரில் ஊற வைப்பதால் நன்மை உண்டாகும்.

10. புகை பிடிக்கும் இடத்தில் இருந்து  விலகி இருங்கள்:
கர்ப்பிணி தாய்மார்கள் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர் என்றால் அந்த பழக்கத்தை கர்ப்பகாலத்தில் தவிர்ப்பது நல்லது. கூடுதலாக, புகை பிடிப்பவர்கள் அருகில் கர்ப்பிணிகள் இருப்பதால் கூட குழந்தைக்கு பாதிப்பு ஏற்படலாம். தாய் மற்றும் சேய் இருவருக்கும் சிகரெட் புகை பாதிப்பை உண்டாக்கும். சிக்கல் இல்லாத உடல் நிலைக்கும் ஆரோக்கியமான உடல் நிலைக்கும் ஏற்ற ஒரு சூழலாக, புகை இல்லாத சூழல் இருப்பதால் புகை பிடிப்பவர்கள் மத்தியில் கர்ப்பிணிகள் இருப்பதைத் தவிர்க்கலாம்.

11. நீண்ட நேரம் உட்கார வேண்டாம்:
கர்ப்பகாலத்தில் நீண்ட நேரம் உட்காருவதால் அல்லது ஒரே நிலையில் படுப்பதால் சில தொந்தரவுகள் உண்டாகலாம். இப்படி செய்வதால் கர்ப்பிணி பெண்களுக்கு கால் மணிக்கட்டு, நரம்புகள் ஆகியவை வீக்கம் பெறுகின்றன. இந்த அசௌகரியங்களைத்  தவிர்க்க, அடிக்கடி உங்கள் உட்காரும்  நிலை மற்றும் அங்க நிலைகளை மாற்றிக் கொண்டே இருங்கள். தினமும் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். நடப்பதற்கு இடையில் சற்று நேரம் உட்கார்ந்து கொள்ளுங்கள். நீண்ட நேரம் நிற்பதால் உங்கள் கால்கள் வீங்கியிருந்தால் கால்களை மேலே தூக்கி உயரத்தில் வைத்துக் கொண்டு அமருங்கள். இதனால் உடலில் நீர் தங்குவது குறையும்.

12. உங்கள் மன அழுத்தத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டாம்:
கர்ப்பகாலத்தில் மனஅழுத்தம் உண்டாவது இயல்பான விஷயம். ஹார்மோன் அளவுகளில் மாறுபாடு காரணமாக பல வேளைகளில் மன உளைச்சல், மனச்சோர்வு மற்றும் மனஅழுத்தம் உண்டாகிறது. அந்த வேளைகளில், மன அழுத்தத்தைக் குறைக்க , உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம். உங்களை மகிழ்விக்கும் செயல்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். தினமும் 8-9 மணி நேரம் தூங்குங்கள். மற்றும் உங்களை முழுக்க முழுக்க நேர்மறை எண்ணத்துடன் வைத்துக் கொள்ளுங்கள். வேலைச் சூழலில் உண்டாகும் அழுத்தத்தைக் குறைக்க வேலை பளுவை குறைத்துக் கொள்ளுங்கள். தியானம், யோகா, நடைபயிற்சி போன்ற ஆன்மாவிற்கு மகிழ்ச்சியைத் தரும், செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்தலாம். இதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம் , இதனால் உங்கள் குழந்தையும் ஆரோக்கியமாக வளரும்.

மேலே கூறியவற்றை செய்யாமல் தவிர்ப்பதால் மட்டுமல்ல, கீழே உள்ளவற்றை செய்வதால் கூட கர்ப்பிணிகளுக்கு நன்மை உண்டாகும்.
கர்ப்பிணிகள் செய்யக்கொடாத செயல்கள் அதிகமாக இருந்தாலும், செய்ய வேண்டிய விஷயங்கள் மிகவும் குறைவாக மட்டுமே உள்ளன. அவற்றை இப்போது பார்க்கலாம்.
இந்த செயல்களைச் செய்வதால் கர்ப்பிணிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுவது மட்டுமல்ல, குழந்தையின் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

 . கர்ப்ப காலத்திற்கு ஏற்ற சௌகரியமான உடைகளை உடுத்துங்கள். இந்த உடைகள் அழகாக இல்லாமல் இருந்தாலும், உங்களுக்கு சௌகரியமாக இருக்கும்.
 . பலர் பலவிதமாகக் கூறும் எல்லா அறிவுரைகளையும் ஏற்க வேண்டாம். இது எல்லாமே கர்ப்பகால கட்டுக்கதைகள் ஆகும். எல்லா தகவலும் எல்லா கர்ப்பிணிகளுக்கும் ஏற்புடையதாக இருக்காது. ஆகவே உங்கள் மருத்துவர் கூறும் பரிந்துரைகளை மட்டுமே பழக்கத்தில் கொள்ளுங்கள். 
 . கர்ப்பகாலம் முழுவதும் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். இதனால் உங்கள் கால்கள் மற்றும் இடுப்பு ஆரோக்கியமாகவும் நெகிழ்வுத் திறனுடனும் இருக்கும்.
 . ஆரோக்கியமான குழந்தை பிறப்பிற்கும், பிரசவத்திற்கு பின் உடல்நலம் விரைந்து தேறி வரவும், தாய்மை தொடர்புடைய யோகா பயிற்சி செய்யலாம்.
 . ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள். அழகான உடைகள் மற்றும் பொருட்களை குழந்தைக்காக வாங்குங்கள்.
 . எந்த ஒரு சூழ்நிலையிலும் சந்தோஷமாக இருங்கள். இது உங்களை புதுப்பித்துக் கொள்ள உதவும். இந்த சிரிப்பு உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தரும். உங்களை ஒரு மகிழ்ச்சியான தாயாக மாற்றும்.

 ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான கர்ப்பகாலத்திற்கு எங்கள் வாழ்த்துக்கள்!!