குடிப்பழக்கத்தை விடுவதால் உண்டாகும் விளைவுகள்

குடிப்பழக்கம் உடலுக்கு எந்த ஒரு நல்ல பலனையும் தரப்போவதில்லை.இன்றைய நவீன யுகத்தில் ஆண் பெண் இருவரும் மது அருந்தும்  பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

குடிப்பழக்கத்தை விடுவதால் உண்டாகும் விளைவுகள்

இதற்கு அவர்களின் நவீன கால நடைமுறைகள் காரணமாக இருக்கின்றன. பார்ட்டி, ட்ரீட் , டிஸ்கோ என்ற பல இடங்களுக்கு போக ஆரம்பிக்கும்போது மது பழக்கமும் அவர்களுக்கு எளிதாக தொடங்கி விடுகின்றன. மேட்ரிமோனி வலைத்தளத்தில், சோசியல் ட்ரிங்கர் என்ற பிரிவை தைரியமாக பதிவு செய்யும் ஆண்களும், அதனை ஏற்று மணமுடிக்க விருப்பம் தெரிவிக்கும் பெண்களும் இந்த சமூகத்தில் உள்ளது மது பழக்கம் சர்வ சாதாரணமாக எல்லா வகுப்பு மக்களையும் சென்றடைந்திருக்கிறது என்பதை காட்டுகிறது.

மிதமான அளவு மது பழக்கம் கூட நமது பாரம்பரியத்தில் வேண்டாத ஒன்றுதான். புகை மற்றும் மது இல்லாத ஒருவரின் வாழக்கை ஆரோக்கியமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. எதோ ஒரு சூழ்நிலையில் குடிப்பழக்கத்தை முற்றிலும் அல்லது ஒரு குறைந்த கால இடைவெளிக்காக விட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கான ஒரு பதிவு இது. அவர்கள் குடிப்பழக்கத்தை விட்டவுடன், கீழே கூறப்படும் மாற்றங்கள் ஏற்படும். இவற்றை கண்டு பயம் கொள்ளலாம் அதன் முடிவில் ஏற்பட போகும் ஆரோக்கியத்திற்காக மட்டும் இந்த முடிவை தொடர வாழ்த்தி, இந்த பதிவை மேலும் தொடர்கிறேன்.
 
நல்ல ஆழ்ந்த தூக்கம்:
தூக்கத்தை பற்றிய ஆய்வு ஒன்றில் கூறுவது என்னவன்றால், உறங்குவதற்கு முன் மது அருந்துவதனால் மூளை ஆல்பா நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆல்பா நிலை என்பது விழித்து கொண்டிருக்கும்போது ஓய்வெடுப்பதற்கு சமமான ஒரு நிலை. ஆகவே ஆழ்ந்த தூக்கம் இல்லாமல் தூக்கத்தில் ஒரு தொய்வு ஏற்படுகிறது. மது அருந்துபவர்கள் தூக்கத்தின் ஆரம்ப நிலையில் அயர்ந்து தூங்குவதுபோல் இருந்தாலும் போக போக அவர்களின் தூக்கம் ஆழமாக இல்லாமல் சில தொந்தரவுகள் இருந்து கொண்டு தான் இருக்கும். குடி பழக்கத்தை விட்டவுடன் முதல் ஓரிரு நாட்கள் தூக்கம் வராமல் புறண்டு புறண்டு  படுத்தாலும் அடுத்த சில நாட்களில் நல்ல ஆழமான தூக்கமும் மறுநாள் சிறந்த புத்துணர்ச்சியும் கிடைக்கும். இதன்மூலம், தெளிவான மன நிலை, கவன திறன் அதிகரிப்பு  மற்றும் சிறந்த மூளை செயல்பாடுகள் வெளிப்படும்.

இனிப்புகள் பிடிக்க ஆரம்பிக்கும்:
சர்க்கரை அல்லது இனிப்பை சுவைக்கும்போது மூளையில்  டோபமைன் என்ற இரசாயனம் உருவாகிறது. மது அருந்தும்போது இதே இரசாயனம் வெளிப்படுகிறது. ஆகவே மதுவை விடும்போது, மூளை அந்த இரசாயன தேடலில் ஈடுபடும்போது இனிப்புகள்  அந்த இடத்தை பிடிக்கிறது. 

எடை குறையும்:
மது அருந்தும்போது, உங்களுக்கே தெரியாமல் அதிகமான கலோரிகளை எடுத்து வந்ததால் உங்கள் உடல் எடை அதிகரித்து காணப்படும். மது அருந்தும் ஆண்களுக்கு  ஒரு நாளில் 433 கலோரிகள் மதுவால் மட்டுமே கிடைக்கிறது. பெண்களுக்கு 300 கலோரிகள் அதிகரிக்கிறது. ஆகவே மது பழக்கம் விடுபடும்போது  மேலே குறிப்பிட்ட கலோரிகள் குறையும். இதனால் உடல் மெலிவடையும். இதனை பற்றி கவலை படாமல், ஆரோக்கிய உணவுகளையும் சிறிதளவு இனிப்புகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

தெளிவான சருமம்:
ஆல்கஹால், சிறுநீர் குறைப்பி ஹார்மோன் உற்பத்தியை குறைக்கிறது. ஆகவே மது அருந்தும்போது அதிகமாக சிறு நீர் கழிக்க நேரிடும். இதனால் உடல் வறண்டு காணப்படும். மது பழக்கத்தை விட்ட சில நாட்களில் உங்கள் சருமத்தில் நல்ல மாற்றம் தென்படும்.  இது உடலில் நீர்சத்து அதிகம் இருப்பதால் உண்டாகும்  மாற்றமாகும். கன்னம்  மற்றும் மூக்கு பகுதியில் தோன்றிய சொரசொரப்பும் மறைய தொடங்கும். எக்ஸிமா. பொடுகு, ரோசாசியா போன்ற சரும பிரச்சனைகளும் நீங்கும்.

கையில் காசு புழங்கும்:
மது அருந்துவதற்காக நீங்கள் அதிக பணத்தை செலவு செய்திருப்பீர்கள். அந்த பணம் முழுதும் இப்போது மிச்சமாய் உங்கள் கைகளில் இருக்கும். இதனை வீட்டு உபயோகத்திற்காக கொடுக்கும்போது உங்கள் வாழக்கை தரம் உயரும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

புற்று நோய் வாய்ப்பை குறைக்கும்:
ஆல்கஹால் அருந்துவதால் வாய், கல்லீரல், குடல், போன்ற இடத்தில் புற்று நோய் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு . அதிகம் மது அருந்துபவர்களுக்கு புற்று நோய் வரும் வாய்ப்பும் அதிகம். ஆகவே மது அருந்துவதை விடும்போது புற்று நோய் ஏற்படுவதின் அபாயம் குறைகிறது.

நல்ல செயலை செய்யும்போது அதனை இன்றைக்கே  செய்யவேண்டும். அதனையும் இந்த நொடியே செய்ய வேண்டும் என்று முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். ஆகவே இப்போதே மது பழக்கத்தில் இருந்து மீண்டு வாழ்க்கையின் மற்றொரு பக்கத்தை இன்பமாக அனுபவிக்க வாழ்த்துக்கள்!