இளமையாக மாற வாழைப்பழ க்ரீம் 

பலரும் விரும்பி சுவைக்கும் பழத்தில் வாழை பழம் முக்கிய  இடத்தை பிடிக்கிறது. சுவையான பழம் மட்டும் அல்ல. பலவித ஊட்டச்சத்துகளை ஒருங்கே கொண்ட பழமும் இந்த வாழை பழம்.

இளமையாக மாற வாழைப்பழ க்ரீம் 

சருமம் மற்றும்  தலை முடி பராமரிப்பில், வாழை பழம் ஒரு சிறந்த மூலப்  பொருளாக பார்க்க படுகிறது.வாழை பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது , சரும அழகை கூட்டும் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் , வைட்டமின் ஏ , பி , சி, பயோட்டின் மற்றும் மினரல்கள் போன்றவை அதிகம் உள்ளதால் இயற்கையான முறையில் சருமம் மற்றும் தலைமுடியை அழகு படுத்த உதவுகிறது. 

வாழை பழத்தை பயன்படுத்தி அழகை அதிகரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

சரும முடியை அகற்ற :
1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸுடன் ½ வாழைப்பழத்தை  சேர்த்து கலக்கவும் . முகத்தில் தேவையற்ற முடிகள் இருக்கும் இடத்தில்  இந்த கலவையை தடவவும். முழுவதும் காயும் வரை அப்படியே விடவும். நன்றாக காய்ந்தவுடன் கைகளை நீரில் நனைத்து கொண்டு மென்மையாக அந்த இடங்களில் சூழல் வடிவில் தேய்க்கவும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவவும். தினமும் இந்த  செய்முறையை பின்பற்றி முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றலாம். முகமும் பொலிவாகும். 

கால் வெடிப்புகளை  போக்க :
வறண்ட, சேதமடைந்த , வெடிப்புகள் உள்ள பாதங்களுக்கு வாழை பழம் ஒரு சிறந்த தீர்வாகும். புதிதாக வாங்கப்பட்ட வாழைப்பழம் அதிகமான ஊட்டச்சத்தையும் ஈரபதத்தையும் கொண்டிருக்கும். ஷியா பட்டர் அல்லது நெய்யுடன் 1 வாழைப்பழத்தை சேர்க்கவும். இந்த வாழைபழக் கலவையை வெடிப்புகள் உள்ள இடத்தில் தடவவும். தடவியவுடன் இரண்டு பாதங்களையும் தனித்தனி பிளாஸ்டிக்  கவரால் மூடவும். 30 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு கவரை பிரித்து, வெந்நீரால் கால்களை கழுவவும். பாதங்களை துடைத்து பிறகு சிறிது வாசலின் தடவவும். 2 நாட்களில் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.

சரும பொலிவிற்கு:
சருமத்திற்கு உடனடி பொலிவை பெற வாழை பழ ஸ்கரப்பை  பயன்படுத்தலாம். நன்கு கனிந்த ஒரு வாழை பழத்துடன் ¼ கப் பழுப்பு சர்க்கரையை சேர்த்து கலக்கவும் . இந்த ஸ்கரப்பை  உடல் முழுதும் தடவி,  மென்மையாக மசாஜ் செய்யவும். 2-3 நிமிடங்களுக்கு பிறகு நல்ல ஒரு குளியல் போடவும். இதனால் உங்கள் சருமம் மென்மையாகி பார்ப்பதற்கு பொலிவாக காணப்படும்.

சுருக்கத்தை போக்க:
வாழைப்பழ க்ரீம் கொண்டு முகத்தில் உள்ள கோடுகள் மற்றும் சுருக்கத்தை போக்கலாம். ½ வாழைப்பழத்துடன் 1 ஸ்பூன் தேன்  கலந்து கலக்கி கொள்ளவும். இந்த கலவையை விரல்களால் முகம் முழுவதும் தடவி  கொள்ளவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை வெந்நீரால் கழுவவும். இதனை தொடர்ந்து செய்வதால் முகம் இளமையாக மாறுவதை உங்களால் உணர முடியும்.

கருமையான திட்டுக்கள் குறைய:
நன்கு கனிந்த வாழை பழத்தின் சதை பகுதியை உண்டு விடுங்கள். அதன் தோலின் உட்பகுதியை  கொண்டு கருந்திட்டுக்கள் உள்ள இடத்தில் தேய்க்கவும். 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும். ஒரு நாளில் 2 முறை என்று 4 நாட்களுக்கு தொடர்ந்து இதனை செய்து வரவும். முடிவில் கருந்திட்டுக்கள் மறையும்.

வாழைப்பழ ப்ளீச்:
நன்கு கனிந்த வாழைப்பழம் , சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். இந்த கலவையை நன்றாக முகத்தில் தடவவும். 10 நிமிடங்கள் கழித்து வெந்நீரால் முகத்தை கழுவவும். இந்த ப்ளீச் முகத்திற்கு உடனடி பொலிவையும் அழகையும் கொடுக்கிறது. சென்சிடிவ் சருமத்தை தவிர மற்ற எல்லா சருமத்திற்கும் பொருந்தும்.

வாழைப்பழ ஹேர் கண்டிஷனர் :
தலைமுடியை ஆழமாக கண்டிஷன் செய்யவும் தலைக்கு ஈரப்பதத்தை கொடுக்கவும் வாழைப்பழம் பயன்படுகிறது. முடி வறட்சியை குறைக்கும் ஒரு சிறந்த பழம் இது. 1 கனிந்த பெரிய வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் 2 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் உப்பில்லாத பட்டர் , 2 ஸ்பூன் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். எல்லா பொருட்களையும் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து, தலையின் வேர்க்கால்கள் முதல் நுனி வரை தடவவும். ஷவர் கேப்  அணிந்து 20 நிமிடங்கள் ஊற விடவும். பின்பு ஷாம்பூவால் தலையை அலசவும். இதுவரை நீங்கள் கண்டிராத பளபளப்பான மற்றும் மென்மையான கூந்தலை நீங்கள் பெறலாம்.

வாழை பழத்தை கொண்டு உங்களது அழகை அதிகரிக்கும் வழிகளை அறிந்து கொண்டீர்களா? இனி வாழைப்பழம் வாங்கும்போது உண்பதோடு சேர்த்து இந்த முறைகளை முயற்சித்து பார்க்கவும்  பயன்படுத்துங்கள்.