வேலை பார்க்கும் கர்ப்பிணிப் பெண்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துத்  கொள்ள வேண்டும்?

ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு நாளையும் ஆவலோடு எதிர்நோக்கி இருக்கும் காலம் கர்ப்ப காலம். கர்ப்ப காலத்தில் எல்லாப் பெண்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.

வேலை பார்க்கும் கர்ப்பிணிப் பெண்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துத்  கொள்ள வேண்டும்?

இன்றைய நவீன காலகட்டத்தில் பெண்களும் வேலைக்கு செல்வது இயல்பாக இருக்கிறது. அதனால் கர்ப்ப காலத்திலும் வேலையைத் தொடர வேண்டிய நிலை உள்ளது. கர்ப்ப காலம் உடல் அசௌகரியம் சற்று அதிகமாக இருக்கும் காலமாக இருக்கும். அந்த நேரத்தில் வேலைக்கு செல்வதால் உடல் அசௌகரியம் அதிகரிக்கும். ஆகவே உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது கர்ப்பிணிகளின் கடமையாகும். முழு நேர பணிக்கு செல்வதால் கருவில் உள்ள குழந்தைக்கு எந்த ஒரு தீங்கும் ஏற்படாது என்பதால், போதிய பராமரிப்புடன் வேலைக்கு செல்வதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை. ஆகவே கர்ப்பிணிகள் தங்களையும் தங்கள் வயிற்றில் வளரும் குழந்தையையும் கவனமான முறையில் பாதுகாத்துக் கொள்வது அவசியம்.

வேலை பார்க்கும் கர்ப்பிணிகளுக்கு வேலையில் சில நேரம் ஒரு வித அழுத்தம் மற்றும் வேலை பளு ஏற்படலாம், வேலையில் பல சவால்களை ஏற்றுக் கொள்ள நேரலாம். தங்கள் குடும்பத்தில் ஒரு புதிய உறுப்பினரை வரவேற்கும் இந்த கர்ப்ப காலத்தில் வேலை பார்க்கும் பெண்கள் சில குறிப்புகளை முயற்சிப்பதால் இந்த வேலை பளு, சவால்கள் ஆகியவற்றை சமாளித்து , ஆரோக்கியமான குழந்தையை பிரசவிக்க முடியும்.

வேலை பார்க்கும் கர்ப்பிணிகளுக்கான சில குறிப்புகள் 

1. தினமும் ஆரோக்கிய உணவை உட்கொள்ளுங்கள் 
கர்ப்பிணிகள் தினமும் உணவு  உட்கொள்ளும் நேரத்தில் ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிட முயற்சியுங்கள். பச்சைக் காய்கறிகள், யோகர்ட், பருப்பு, சீஸ், பழங்கள், பால், முட்டை, முளை விட்ட தானியம், சோயா போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இந்த உணவு வகைகள் வேலை பார்க்கும் கர்ப்பிணிகளுக்கு சிறந்த நன்மையைத் தருகின்றன.  தினமும் கால்சியம் எடுத்துக் கொள்வது கர்ப்பிணிகளுக்கு நன்மை செய்யும். கூடுதலாக, ஒமேகா 3 மற்றும் போலேட் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது அவசியம். கர்ப்பிணிகள் தங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அடிக்கடி பரிசோதனை செய்து கொண்டே இருக்க வேண்டும். கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு இவை யாவும் அத்தியாவசியமாக உள்ளன.

2. பணி இடங்களில் ஆரோக்கியமான சிற்றுண்டியை கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்:
அலுவலகத்தில் வேலை பார்க்கும் பொது பாப்கார்ன், வேர்க்கடலை வெண்ணெய், வேக வைத்த முட்டை, சீஸ், பழங்கள், க்ரகேர்ஸ் , போன்றவற்றை கைவசம் வைத்துக் கொள்வதால், நாள் முழுவதும் தேவைப்படும் நேரத்தில் இவற்றை உட்கொள்ள முடியும். பசி எடுக்கும் நேரத்தில் இரத்த சர்க்கரை அளவு குறைந்து குமட்டல் ஏற்படலாம் என்பதால் பசி வருவதற்கு முன் எதையாவது சாப்பிடலாம். கர்ப்பிணிகளில் சிலருக்கு காலையில் மற்றும் நாள் முழுவதும் வாந்தி  மற்றும் குமட்டல் காணப்படும். அதிக வாந்தி மற்றும் குமட்டல் இருப்பவர்கள், மருத்துவரிடம் ஆலோசித்து அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். அல்லது எளிய வீட்டுத் தீர்வுகளை முயற்சித்து, இவற்றைக் கட்டுப்படுத்தலாம். பார்லி நீர், குளிர்ந்த நீர் அல்லது எலுமிச்சை சாறு போன்றவற்றைப் பருகி, எந்த நேரமும் நீர்ச்சத்தோடு இருக்கலாம்.

3. உங்களை நீங்களே ஒழுங்கமைத்துக் கொள்ளுங்கள்:
வேலை பார்க்கும் இடங்களில் சரியான முறையில் உணவு அட்டவனையை பின்பற்றும் விதத்தில், ஒரு சிறு குறிப்பை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அதனை எப்போதும் உங்கள் கையோடு வைத்துக் கொ.ள்ளுங்கள். மருத்துவர் முன் அனுமதி பற்றிய தகவல், உங்கள் பொறுப்புகள் ஆகியவற்றை ஒரு பட்டியலிட்டு அதற்கேற்ற வகையில் உங்கள் வேலைக்கான அட்டவணையை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் அட்டவணைக்கு ஏற்ற விதத்தில் வேலையைத் தொடருங்கள். இதனால் அதிக சோர்வு மற்றும் வேலை பளுவை குறைத்துக் கொள்ள முடியும்.

4. மாத்திரைகள்:
வைடமின் சி சத்து போதிய அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கேற்ற விதத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளுங்கள். அல்லது மருத்துவரிடம் ஆலோசித்து அதற்கான மாத்திரைகளைப் பயன்படுத்துங்கள்.
போதிய அளவிற்கு ஊட்டச்சத்துகளை உங்கள் உணவின் வழியாகவே எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வேலை சில வகை உணவுகளை நீங்கள் விரும்பவில்லை என்றால் அதற்கான ஊட்டச்சத்துகளைப் பெற மருத்துவ ஆலோசனையுடன் மாத்திரையை பயன்படுத்துங்கள். 

5. இரவில் நன்றாக உறங்குங்கள்:
பொதுவாக கர்ப்பிணிகளுக்கு போதிய உறக்கம் மிகவும் அவசியம். வீட்டில் இருக்கும் கர்ப்பிணிகள் மதிய வேளையில் உறங்கக் கூடிய சூழல் இருக்கலாம். ஆனால் வேலை பார்க்கும் பெண்களுக்கு இது சாதகமாக இருக்க முடியாது, என்பதால் இரயில் நிச்சயம் ஆழ்ந்து உறங்க வேண்டும். நல்ல ஆழ்ந்த உறக்கம், குழந்தையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். நிறைய தூக்கம் மற்றும் தரமான தூக்கம் கருவில் உள்ள குழந்தைக்கு நன்மைகள் பல செய்யும். வேலை பார்க்கும் பெண்கள் விடுமுறை நாட்களில் பகல் நேரத்தில் சற்று கண் அயர்ந்து தூங்கலாம். இதனால் உங்கள் வேலை பளுவை மறந்து உங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ள முடியும். பிறக்க இருக்கும் குழந்தைக்கும் இது நன்மையைச் செய்யும்.

6. உடற்பயிற்சி:
யோகா பயிற்சியாளர், மற்றும் மருத்துவருடன் ஆலோசனை செய்து, யோகா மற்றும் இதர உடற்பயிற்சிகளை உங்கள் தினசரி அட்டவணையில் சேர்த்துக் கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்வதால் வேலைபளுவால் உண்டாகும் அழுத்தத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும். ஓய்வாக இருக்கும் நேரம் அல்லது அலைபேசியில் பேசும் நேரம், சற்று தூரம் நடக்கலாம். இதனால் கால்களில் ஏற்பட்டுள்ள வீக்கம், இரத்த உறைவு, வெரிகோஸ் வெயின்ஸ் போன்றவை குறையலாம். கடினமான பயிற்சி, எடை தூக்குதல், கடினமான வேலை போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

7. புகை பிடிக்க வேண்டாம்:
புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்பது நாம் அனைவரும் அறிந்ததே.. அதுவும் கர்ப்ப காலத்தில் புகை பிடிப்பதால் அதன் வினை மிகுந்த அபாயத்தை உண்டாக்கும். புகை பிடிப்பதால் தாயின் ஆரோக்கியம் மட்டுமல்ல, கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. புகை பிடிக்கும் பழக்கம் உள்ள கர்ப்பிணிகளுக்கு முன்கூட்டிய பிரசவம் அல்லது குறைப்பிரசவம், குழந்தை இறப்பு, கருக்கலைப்பு, குழந்தையின் எடை குறைப்பு, போன்ற பாதிப்புகள் உண்டாகலாம். தொடர்ந்து புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் முடிந்த வரை விரைவாக இந்த பழக்கத்தைக் கைவிடலாம்.

8. மது அருந்துவது:
புகை பிடிக்கும் பழக்கம் போலவே, மது அருந்தும் பழக்கமும் தாய் - சேய் ஆகிய இருவரின் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். ஆகவே கர்ப்ப காலத்தில் மது அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது. பெடல் அல்கஹால் சின்ட்ரோம் என்னும் பாதிப்பு, கருவில் உள்ள குழந்தைக்கு தீவிர சேதங்களையும், பிறப்புக் குறைபாடுகளையும் உண்டாக்குகிறது. மிகக் குறைந்த அளவு மது உட்கொள்வதாலும் இந்த பாதிப்பு ஏற்படலாம்.

9. வேலைக்கு நடுவில் இடைவேளை  :
உங்கள் வேலைக்கான அட்டவணையில் இடைவேளைக்கான நேரத்தையும் ஒதுக்குங்கள். வேலைக்கு இடையில் சிறிது இடைவேளை எடுத்துக் கொண்டு உங்களை நீங்களே ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். இப்படி இடைவேளை எடுத்துக் கொள்வதால், வேலைபளுவால் உண்டாகும் அழுத்தம் குறைந்து புது உற்சாகம் தோன்றும்.