உங்கள் மகனை சிறப்பாக வளர்ப்பதற்கான வழிகள்

தன் மகன் சிறந்த மனிதனாக வளர்வதற்கு தந்தை கற்பிக்கும் நான்கு உதவிக்குறிப்புகள்

உங்கள் மகனை சிறப்பாக வளர்ப்பதற்கான வழிகள்

“ஒரு மனிதன் போரில் பல்லாயிரக்கணக்கானவர்களை வெற்றி கொள்ளலாம், ஆனால் எவன் ஒருவன் தன்னைத்தானே வெற்றி கொள்கிறானோ அவனே மிகச் சிறந்த வெற்றியாளன்” என்று புத்தர் குறிப்பிடுகிறார். சமீபத்திய நாட்களில் நாட்டில் ஒரு செய்தி மிகப் பொதுவான ஒரு செய்தியாக அன்றாடம் நமது செவிகளை அறைந்து கொண்டிருக்கிறது. 7 ஆண்டுகள்  நிறைவடைந்த நிர்பயா வழக்கு, சமீபத்தில் நடந்த மருத்துவர் பிரியங்கா ரெட்டியின் கற்பழிப்பு வழக்கு என்று நாடு போகும் பாதை மிகவும் பயங்கரமாக இருப்பதை உணர்த்துகிறது

இருப்பினும், பெரும்பாலான சூழ்நிலைகளில், இது போன்ற கொடூரமான சம்பவங்களுக்குப் பின்னால் இருப்பது ஒரு ஆண். இத்தகைய சம்பவங்கள் அவர்களின் பின்னணி குறித்து  ஒரு பெரிய கேள்விக்கு வழிவகுக்கிறது. பெற்றோருக்கு மிக முக்கியமான பொறுப்பு, ‘இல்லை’ மற்றும் ‘ஆம்’ ஆகியவற்றுக்கு இடையிலான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு சரியான வளர்ப்பை வழங்குவதாகும். தார்மீக கல்வி மற்றும் நீதி போதனைகள் குறித்த ஒரு கல்வியை குழந்தைகளின் ஆரம்பகட்டத்தில் பயிற்றுவிப்பது மிகவும் அத்தியாவசியம் ஆகும். 

இந்த வகை கல்வி குழந்தைகளை நெறிசார்ந்த வழியில் கட்டமைக்க உதவும். 

உங்கள் மகனை ஒரு பொறுப்பான மனிதனாக மாற்றுவதில், பெற்றோர்,  இன்னும் குறிப்பாக தாயை விட தந்தைக்கு மிகப்பெரிய தாக்கம் உண்டு. ஆமாம், பெரும்பாலான மகன்கள் தங்கள் தாயுடன் அதிகம் இணைந்திருக்கிறார்கள், தாய் சொல்வதை அதிகம் கேட்கிறார்கள் என்பது உண்மைதான், ஆனால் அவர்களின் சிந்தனையில் தந்தை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியும். மகன்கள் இந்த உலகில் சிறந்த மனிதர்களாக மாறுவதற்கு தந்தை எவ்வாறு உதவமுடியும்  என்பது குறித்து இந்த பதிவில் நாம் இப்போது காணலாம்.  

சுய ஒழுக்கம் மற்றும் சுய கட்டுப்பாடு:

இப்போது, இந்த இரண்டு சொற்களின் அர்த்தம் என்ன? சுய ஒழுக்கம் என்பது சில சூழ்நிலைகளில் எல்லைகளைப் புரிந்துகொள்வதும், சுய கட்டுப்பாடு என்பது அந்த எல்லைகளைக் கடக்காத நிலையும் ஆகும். இந்த இரண்டு விஷயங்களும் ஒரு மனிதனின் இன்றியமையாத பண்புக்கூறுகளாக விளங்குகின்றன. தந்தைகள் தங்கள் மகன்களுக்கு அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கக்கூடும் சில அம்சங்களில் சுய கட்டுப்பாடு வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை கற்பிக்க வேண்டும். புகைபிடித்தல், அதிகப்படியான குடிப்பழக்கம், சூதாட்டம் போன்ற பழக்கவழக்கங்களில் சுய கட்டுபாட்டைக் கொண்டிருக்கும்படி தந்தைகள் தங்கள் மகன்களுக்குக் கற்பிக்க முடியும். சுய ஒழுக்கத்தையும், சுய கட்டுப்பாட்டையும் ஒரு குழந்தைக்கு இளம் பருவத்தில் கற்பிப்பதால், வளர்ந்த பின் வேலைக்கு செல்லும்  நேரத்தில் வேலை இடத்தில் அவசர சூழ்நிலையை சிறப்பாக கையாள உதவும் , நேரம் தவறாமை பின்பற்றக் கூடும், மற்றும் வாழ்க்கை இலக்குகளை நோக்கி அர்ப்பணிப்பு உண்டாகும். 

நேர்மை:

உங்கள் பிள்ளைக்கு நேர்மையை கற்றுத் தாருங்கள். உங்கள் மகன் மற்றவர்களுக்கு நேர்மையாக இருப்பதைக் காட்டிலும் அவனுக்கே அவன் நேர்மையாக இருக்க வேண்டும். என்பதை உணர்த்துங்கள்.  தனக்குத்தானே நேர்மையாக இருக்கும் ஒரு மனிதன் தானாகவே மற்றவர்களுக்கும் நேர்மையாக இருப்பான். நேர்மையின் முக்கியத்துவத்தைப் பற்றியும், நல்ல பழக்கவழக்கங்களைப் பற்றியும் மகன்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும். வாழ்க்கையில் கூறப்படும் ஒரு சிறு பொய்யை விட நேர்மை மிக நீண்ட தூரம் அவர்களை இட்டுச் செல்லும் என்பதை அவர்களுக்கு கற்றுத் தாருங்கள். வாழ்க்கையில் உறவுகளின் மத்தியில் நேர்மை மிகவும் அவசியமானது என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.

இரக்கம்:

ஒரு ஆண்மகன் தனது உணர்ச்சிகளை மறைக்க வேண்டும் ”, என்ற இந்த மேற்கோள் உறவுகளுக்கு இடையூறாக உள்ள ஒரு மேற்கோள் ஆகும். சில நேரங்களில் அழுவதும், உணர்ச்சிகளை வெளியேற்ற அனுமதிப்பதும் சரி என்று உங்கள் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள். உங்கள் மகன் பலவீனமானவர்களை அடக்கும்போது அவன் பலவீனமாக மாறுகிறான் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியாதவர்களைப் பாதுகாக்கும் மனிதனாக உங்கள்  மகன் இருக்க வேண்டும் என்பதை அவனுக்கு புரிய வையுங்கள். பலவீனமானவர்களையும் உதவியற்றவர்களையும் பாதுகாப்பது ஒரு உன்னதமான காரியம் என்று அவனிடம் சொல்லுங்கள்.

நம்பகமான மனிதன்:

உங்கள் மகன் எந்த ஒரு சூழ்நிலையிலும் பின்வாங்காத ஒரு நபராக இருக்கும்படி வளருங்கள். உண்மையான ஆண்கள் தங்கள் வாக்குறுதிகளைக் கடைப்பிடிப்பவர்கள், அவர்கள் கவனிக்கப்படுவதில்லை என்று தெரிந்தாலும் நேர்மையானவர்கள் என்று அவர்களுக்கு சொல்லித் தாருங்கள். நம்பிக்கை இல்லாததால் உண்டான சிக்கல்கள் தொடர்பான சில கடந்தகால அனுபவங்கள் உங்களிடம் இருந்தால் அவற்றை அவர்களுக்கு விளக்குங்கள், அது உங்கள் வாழ்க்கையை எவ்வாறு பாதித்தது என்பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள். உங்கள் பிள்ளையிடம்  நம்பிக்கையின்மை குறித்த ஏதேனும் அறிகுறியைக் கண்டால் அவற்றை சரிசெய்ய எப்போதும் தயாராக இருங்கள்.

பெற்றோர் தன்னுடைய மகன் அல்லது மகள் சக மனிதர்களிடம் நிறைய மரியாதை கொண்ட ஒரு சிறந்த மனிதராக வளர கற்பிக்க வேண்டும்.  இதனால் பெண்கள் பாதுகாப்பாகவும் இன்னும் சிறப்பாகவும் வாழும் ஒரு இடமாக இந்த உலகம் மாறும்.