அன்னையர் தினம் 

தன் குழந்தைகளிடம் எந்த குறைபாடு இருந்தாலும் அவர்களை சாதனையாளர் ஆக்கும் சக்தி ஒரு தாய்க்கு உண்டு. எடிசன் மேதையாக ஆனதிற்கு முழு காரணம் எடிசனின் அம்மா தான். உலகத்தில் உள்ள அனைத்து அன்னையருக்கும் நம் குரல் வாயிலாக அன்னையர் தின வாழ்த்துக்கள்.

அன்னையர் தினம் 

அன்னையை போற்றும் விதமாக  அன்னையர் தினம் ஒவ்வொரு வருடமும் மே இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அனா ஜார்விஸ் தனது தாயின் மீது கொண்ட அளவற்ற அன்பினால் முதன் முதலில் அன்னையர் தினத்தை கொண்டாடினார் மற்றும் அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று பல போராட்டங்களை நடத்தினார். அனா ஜார்விஸ் போராட்டத்தின் வெற்றி தான் அவரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சன் 1914ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அன்னையர் தினத்தை வருடந்தோறும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் என்று அறிவித்தார். அதன் பிறகு மற்ற நாடுகளும் இந்நாளையே அன்னையர் தினமாக கொண்டாடி வருகின்றனர். 

தாய் - விலை மதிப்பில்லா பொக்கிஷம்:

உருவமில்லாமல் இருந்த நமக்கு உருவத்தை கொடுத்து ஒரு முழு மனிதனாக மாற்றிய தெய்வம் தான் தாய். நம்மிடம் உண்மையான அன்பை கொடுப்பவள் தாய். நாம் தோல்வியில் துவண்டு போகும்போது அரவணைப்பவள் தாய். நம்மை நல்வழிப்படுத்த கண்டிக்கும் போது ஒரு ஆசானாக திகழ்பவள் தாய்.  தனக்காக எதையும் வைத்துக்கொள்ளாமல் குழந்தைகளுக்காக அனைத்தையும் தந்து அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்து அவர்களின் மகிழ்ச்சியை கண்டு தான் மகிழ்ச்சி அடைகிறாள் தாய். தனது வேதனைகளால் ஏற்படும் கண்ணீரை தனக்குள் அடக்கி கொண்டு குழந்தைகள் முன் காட்டாமல் அவர்களின் வளர்ச்சிக்காக தன் இறுதி மூச்சிருக்கும் வரை உறுதுணையாக இருப்பவர் தாய் . ஒருவர் எந்த நிலையில் இருந்தாலும் அவரை அப்படியே ஏற்றுக்கொள்ளும் ஒரே ஜீவன் தாய். தன் குழந்தைகளிடம் எந்த குறைபாடு இருந்தாலும் அவர்களை சாதனையாலர் ஆக்கும் சக்தி ஒரு தாய்க்கு உண்டு.  

 தாமஸ் ஆல்வா எடிசனின் தாய்:

எடிசன் மற்ற குழந்தைகள் போல் அல்லாமல் சிறிது மாறுப்பட்டவராகவே இருந்தார். அதனால் அவர் பெற்றோர் அவரை 8 வயதில் தான் பள்ளியில் சேர்த்தனர். ஒரு நாள் எடிசன் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த போது அவருடைய ஆசிரியர் கொடுத்ததாக ஒரு பேப்பரை அவரின் அம்மாவிடம் கொடுத்தார். அக்கடிதத்தை பிரித்து பார்த்த அவருடைய அம்மா கண்ணீருடன் அந்த கடிதத்தை படித்து எடிசனிடம் கூறியது "உங்களது மகன் ஒரு மேதை. இது அவன் படிப்பதற்கு உகந்த இடம் அல்ல மற்றும் அவனுக்கு சொல்லிக் கொடுக்க கூடிய அளவிற்கு திறமை வாய்ந்த ஆசிரியர்கள் இங்கே இல்லை" என்றார். அதன் பிறகு எடிசன் பள்ளிக்கு செல்லவில்லை. தனது தாயின் உதவியுடன் புத்தகங்களை வீட்டிலேயே படித்து தனது அறிவை பெருக்கிக் கொண்டு ஊரே வியக்கும்படி விஞ்ஞானி ஆனார். அவரின் அம்மா இறந்த பிறகு ஒரு முறை அலமாரியில் எதையோ தேடுகின்ற போது அவருக்கு கிடைத்தது அவருடைய ஆசிரியர் அவரிடம் கொடுத்து அனுப்பிய கடிதம். அதில்  "உங்களது குழந்தைக்கு மூளை வளர்ச்சி சரியாக இல்லை. ஆகவே அவனை இனிமேல் வகுப்பில் அனுமதிக்க முடியாது” என எழுதி இருந்தது. இதைப் பார்த்து தான் அவரது அம்மா கண்ணீருடன் மாற்றி கூறியுள்ளார் என்று அன்று அவருக்கு புரிந்த போது அவரின் கண்ணில் நீர் வடிந்தது. ஒருவேளை இக்கடிதத்தில் இருந்தபடியே அவரது அம்மா படித்திருந்தாலும், அவரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இல்லாமல் இருந்திருந்தாலும் எடிசன் என்ற விஞ்ஞானியை நாம் பார்த்திருக்க முடியாது. எடிசன் மேதையாக ஆனதிற்கு முழு காரணம் எடிசனின் அம்மா தான். 

ஒவ்வொருவரின் வளர்ச்சிக்கு பின்னாலும் அவர்களின் தாய் இருப்பார்கள். தனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று தெரிந்தும் தன் குழந்தைக்கு துணை வேண்டி மீண்டும் அடுத்த குழந்தையை பெற்றெடுக்கும் தாயின் தைரியமும், தன்னலமற்ற செயலும் போற்றதக்கது. நமக்காக வாழும் தெய்வம் அம்மா. அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது விலை உயர்ந்த பரிசுகள் அல்ல அவர்களுடன் நாம் இருப்பதையே விரும்புகிறார்கள். அதனால் நமக்காக வாழும் தெய்வத்திற்காக தினமும் சிறிது நேரம் ஒதுக்குவோம். உலகத்தில் உள்ள அனைத்து அன்னையருக்கும் நம் குரல் வாயிலாக அன்னையர் தின வாழ்த்துக்கள்.