இறைவன் எழுதி கையொப்பமிட்ட சிறப்பு மிக்க நூல்கள்

இன்றும் சிவத்தலங்களில் ஓங்கி ஒலிக்கும் "தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்பது மாணிக்கவாசகரால் பாடப்பட்ட திருவாசக பாடல் வரிகளாகும்.

இறைவன் எழுதி கையொப்பமிட்ட சிறப்பு மிக்க நூல்கள்

இறைவன் எழுதி கையொப்பமிட்ட சிறப்பு மிக்க நூல்கள் 

மாணிக்கவாசகர் ஒரு சிறந்த சிவ பக்தர். இவருடைய பாடல்கள் நமக்கு உணர்த்துவது இவர் கடவுளுடன் இருந்த போது ஏற்பட்ட மகிழ்ச்சி மற்றும் கடவுளிடமிருந்து பிரிந்த வேதனையின் வெளிப்பாடே ஆகும். தான் பெற்ற பேரருளை உலகத்தில் உள்ள அனைவரும் பெற பக்தி பாடல்களான திருவாசகம் மற்றும் திருக்கோவையார் பாடியருளினார்.

தல யாத்திரை:

மாணிக்கவாசகர் பெருமான் பல ஊர்களில் உள்ள கோயில்களுக்கு சென்று இறைவனை நினைத்து மனமுருக பல பாடல்கள் பாடி வழிபட்டார். பின் தில்லையில்  (சிதம்பரம்) அமர்ந்தார். அங்கு சொற்போருக்கு வந்த இலங்கை பௌத்தர்களைத் திருவருளால் வென்று சைவ மதத்தை பெருக்கினர். பிறகு அவர்களுடன் இலங்கை வந்து யாழ்ப்பாணத்து அரசர் வேண்டுகோளின் படி அவர் மகளின் ஊமையை போக்கி அருளினார்.

மாணிக்கவாசகர் இறைவனுக்காவே பாடியது:

திருவாசக பாடல்கள் ஏட்டில் எழுதப்படாமல் இருந்தன. தில்லையில் ஆனி மாத ஆயில்ய தினத்தில் அம்பலவானர் அந்தணர் ரூபத்தில் வந்து மாணிக்கவாசரிடம் தாங்கள் பாடிய பாடல்களை நான் எழுதிக் கொள்கிறேன் என்று கேட்டார். அதற்கு அவரும் ஒப்புக்கொண்டு பாடல்களை பாட ஆண்டவனும் எழுதிக் கொண்டார். பின் பாவை (திருவெம்பாவை) பாடிய வாயால் ஒரு கோவை (திருக்கோவையார்) பாட வேண்டும் என்றார் சிவபெருமான். மாணிக்கவாசகர் அங்கணமே பாடினார். அதுவே திருச்சிற்றம்பலக்கோவையார் ஆகும். ஓலைச்சுவடியின் முடிவில் 'மாணிக்கவாசகர் சொற்படி அம்பலவாணன்' என்று கையொப்பமிட்டுத் திருமுறையைக் கோவிலின் திருவாயிற்படியில் வைத்து மறைந்தார். கோயிலில் இருந்த ஏட்டினைக் கண்ட மக்கள் பேரின்பம் கொண்டு மாணிக்கவாசகரை அழைத்து அந்த ஏட்டை காட்டி பொருள் விளக்கி அருள வேண்டும் என்றனர். அவரும் அம்பலவாணரே இதன் பொருள் என்று கூறிய உடனே அங்கு  தோன்றிய அருட்பெரொளியுடன்   மாணிக்கவாசகப் பெருமான் இரண்டறக் கலந்து இறைவனடி சேர்ந்தார்.

மாணிக்கவாசகர் பாடல்கள்:

மாணிக்கவாசகரால் பாடப்பட்ட எட்டாம் திருமுறையில் மொத்தம் 1056 பாடல்கள் உள்ளது. இதில் திருவாசகத்தில் 656 பாடல்களும், திருக்கோவையாரில்  400 பாடல்கள் உள்ளன. திருவாசகம் 51 திருப்பதிகமும், 656 பாடல்கள் கொண்டு திகழ்கின்றது. இம்மந்திர பாடல்கள் 6 +5+ 6 கூட்டினால் 17 ஆகும். மீண்டும் கூட்டினால் 8 ஆகும். இவ்வெட்டு ஆண்டவனின் எண் குணங்களைக் குறிப்பாகும். சிவனைப் பற்றிய பக்திப் பாடல்களின் தொகுப்பே திருவாசகம் மற்றும் திருக்கோவையார். 

திருவாசகத்தில் உள்ள திருப்பதிகங்கள்:

 1. சிவபுராணம்,
 2. கீர்த்தித் திருஅகவல்,
 3. திருவண்டப்பகுதி,
 4. போற்றி திருஅகவல்,
 5. திருச்சதகம்,
 6. நீத்தல் விண்ணப்பம்,
 7. திருவெம்பாவை
 8. திருஅம்மானை,
 9. திருப்பொற்சுண்ணம்,
 10. திருக்கோத்தும்பி,
 11. திருத்தெள்ளேணம்,
 12. திருச்சாழல்,
 13. திருப்பூவல்லி,
 14. திருஉந்தியார்,
 15. திருத்தோணோக்கம்,
 16. திருப்பொன்னூசல், 
 17. அன்னைப்பத்து,
 18. குயிற்பத்து,
 19. திருத்தசாங்கம்,
 20. திருப்பள்ளியெழுச்சி,
 21. கோயில் மூத்த திருப்பதிகம்,
 22. கோயில் திருப்பதிகம்,
 23.  செத்திலாப்பத்து,
 24. அடைக்கலப்பத்து,
 25. ஆசைப்பத்து,
 26. அதிசியப்பத்து,
 27. புணர்ச்சிப்பத்து,
 28. வாழாப்பத்து,
 29. அருட்பத்து,
 30. திருக்கழுகுன்றப்பதிகம்,
 31. கண்டபத்து,
 32. பிரார்த்தனைப்பத்து,
 33. குழைத்தப்பத்து,
 34. உயிருண்ணியப்பத்து,
 35. அச்சப்பட்டு,
 36. திருப்பாண்டியப்பதிகம்,
 37. பிடித்தப்பத்து,
 38. திருஏசறவு,
 39. திருப்புலம்பல்,
 40. குலாப்பத்து,
 41. அற்புதப்பத்து,
 42. சென்னிப்பத்து,
 43. திருவார்த்தை,
 44. எண்ணப்பதிகம்,
 45. யாத்திரைப்பத்து,
 46. திருப்படையெழுச்சி,
 47. திருவெண்பாவை,
 48. பண்டாய நான் மறை
 49. திருப்படை ஆட்சி,
 50. ஆனந்த மாலை,
 51. அச்சோப் பதிகம்.

மாணிக்கவாசகரின் பாடல்களின் சிறப்பு:

 1. நமசிவாய என்னும் ஐந்தெழுத்தில் திருவாசகம் தொடங்குகிறது.
 2. சிவபெருமான் எழுதி கையொப்பமிட்டது இதன் சிறப்பாகும்.
 3. இவருடைய பாடல்கள் 900 ஆண்டுகளாக சைவக் கோவில்களில் ஓதப்படும் பெருமை உடையது.
 4. திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருகார் என்ற பழமொழி உண்டு.
 5. கரும்புச் சாற்றில் தேன் கலந்து, பால் கலந்து, கனியின் சுவை கலந்து இனிக்கும் திருவாசகப் பாடல்கள் உயிரில் கலந்து உவகை தரும் என்று இராமலிங்க வள்ளலார் கூறுவார்.
 6. திருவாசகத்தின் பொருளுணர்ந்த டாக்டர் ஜி.யூ. போப் ‘எலும்பை உருக்கும் பாட்டு’ என்று பலரிடம் கூறினார். உலக மக்கள் அனைவரும் இந்த இன்பத்தை அடைய வேண்டும் என்பதற்காக திருவாசகத்தை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்துள்ளார்.
 7. திருக்கோவையார் சிறந்த சிவானுப நூலாகவும்‌, காம நன்னூலாகவும்‌ மிகச்சிறந்த இலக்கணக்‌ கருவூலமாகவும்‌ திகழும்‌ சிறப்பு மிக்க நூல்‌.
 8. இறந்தவர் உடல் முன் திருவாசகத்தை பாடினால் அந்த இறந்தவரின்  ஆத்மாவானது இறைவன் அடி சேரும் என்பது ஐதீகம்.

இன்றும் சிவ தலங்களில் ஓங்கி ஒலிக்கின்றன இவருடைய பாடல்கள். திருக்கோயில்களுக்கு செல்பவர் திருவாசகத்தை உடன் கொண்டு செல்ல வேண்டும். இந்த திருமுறை மந்திர பாடல்களை பாடி வழிபடுவது ஆண்டவனுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தரும் உயர்வழிபாடாகும்.