அழகு பொருட்களில் பயன்படுத்தும் முக்கிய மூல பொருட்கள்

அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்.

அழகு பொருட்களில் பயன்படுத்தும் முக்கிய மூல பொருட்கள்

பண்டிகை காலங்கள் நெருங்கி விட்டன. நம்மை அழகாக பராமரித்து கொள்ள தேவையான அழகு சாதனங்களை வாங்க கடைகளுக்கு செல்வோம் .  வாங்கும்போது  அதன் மூல  பொருட்கள் என்ன உள்ளது என்பதை அறிந்து கொண்டு    வாங்குவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். இதனால் அந்த அழகு சாதனத்தை பற்றிய தெளிவு நமக்கு கிடைக்கும். அதில் சேர்க்கப்பட்டிருக்கும் சில மூல பொருள்களின் ஒவ்வாமை நமக்கு இருக்கும்போது, அதனை வாங்காமல் இருப்பது நல்லது. அழகு சாதனத்தில் பயன்படுத்தும் மூல பொருட்களை பற்றிய தகவல் தான் இந்த தொகுப்பு. படித்து பயனடையுங்கள்.

கொலாஜென் :
சருமத்தை சேர்த்து பிடிப்பதற்காக செல்கள் உற்பத்தி செய்யும் புரதம் தான் இந்த கொலாஜென். சருமம் இளமையாக இருக்க இது உதவுகிறது. சருமத்திற்கு  ஸ்திரத்தன்மையும் , விரி திறனும் கொடுக்கிறது. சிறிய வயதில் நமது சருமம் கொழுகொழுப்பாக மற்றும் மென்மையாக இருப்பதற்கு காரணம். கொலாஜென் உற்பத்தியால் சருமம் தன்னைத்தானே  அடிக்கடி  புதுப்பித்து கொள்வதுதான். வயது அதிகமாகும்போது இந்த கொலாஜென் உற்பத்தி குறைகிறது , உடலில் இருக்கும் கொலோஜன்கள், சூரிய ஒளியின் தாக்கத்தால் மற்றும் ஆரோக்கியமற்ற பழக்கங்களால்   சேதமடைந்துவிடுகின்றன. இதனால் உடலில் சுருக்கமும், வயது மூப்பும் ஏற்படுகிறது. கொலாஜென் சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்கள், சருமத்தை மென்மையாக மாற்றி சுருக்கங்களையும்  வயது மூப்பையும் தடுக்கின்றன.

எலாஸ்டின் :
கொலாஜென் போல ஒரு முக்கியமான புரதம் தான்  இந்த எலாஸ்டின் .  இந்த வகை புரதம் உடலில் மீள்திசுக்களில் காணப்படுகின்றன. உடல் விரிக்கப்படும் போது , மீண்டும் இயல்பு நிலைக்கு வருவதற்கு இது பொறுப்பேற்கிறது.  பருவ வயதிலும், வாலிப வயதிலும் எலாஸ்டின் அளவு அதிகமாக இருக்கும். அதன்பிறகு குறைய தொடங்கும். எலாஸ்டின் உள்ள பொருட்கள், சருமத்திற்கு இயற்கையான ஸ்திரத்தன்மையை கொடுக்கும் 

ஹையலூரோனிக் அமிலம்:
கொலாஜென் உடலில் குறையும் போது, சுருக்கங்கள் தோன்றுவதும், சருமம் நிறமிழப்பதும் தொடங்கும். இது நேரும்போது உடலின் கொலாஜென் அளவை அதிகரிப்பது சருமத்தை சீராக்கும் . இந்த கொலாஜென் உற்பத்தியை  அதிகரித்து சருமத்தை ஈரப்பதமாக வைத்திருப்பது இந்த அமிலம். 

க்லைக்கோலிக் அமிலம்:
AHA குழுவில் மிக சிறிய கூறுகளை கொண்டது இந்த க்லைக்கோலிக் அமிலம்.சருமத்தில் எளிதாகவும் ஆழமாகவும் ஊடுருவும் தன்மையை கொண்டுள்ளது. சருமத்தில் வரிகள், கட்டிகள், கரும்புள்ளிகள்,சோர்வு மற்றும் எண்ணெய்த்தன்மை போன்றவற்றை களைவதற்கு இது ஒரு மிக சிறந்த மூல பொருளாகும். 

சாலிசிலிக் அமிலம்:
இந்த அமிலத்தில் தயாரிக்கப்படும் லோஷனை எல்லோராலும் பயன்படுத்த முடியாது. ஆனால் சரியாக பயன்படுத்தப்படும் போது சருமத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். இந்த லோஷனை பயன்படுத்தும்போது, சருமத்தில் வீக்கம் ஏற்பட்டு பின்பு மென்மையாகி தோல் உரியும் . இதனால் இறந்த செல்கள் அழிக்கப்பட்டு சருமம் புதிதாகவும், பிரகாசமாகவும் மாறும்.

நியாசினாமிட் :
வைட்டமின் ஒரு கூறாகிய இந்த நியாசின், சருமத்தில் செராமைடு மற்றும் இலவச கொழுப்பு அமிலங்களை அதிகரித்து சருமம் ஈரப்பதத்தை இழக்காமல் பார்த்துக் கொள்கிறது. அடிச்சருமத்தில் நுண்குழல் இரத்தஓட்டத்தை தூண்டுகிறது. நிற சீரமைப்பில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது மற்றும் கட்டிகளை குறைக்கிறது.

ரெட்டினொல் :
இது சருமத்தின் கொலாஜென் மற்றும்  கிளைகோசமினோக்லைக்கன்  (glycosaminoglycan) உற்பத்தியை அதிகரிக்கிறது . இதனால் எடுப்பான தோற்றமும், உறுதியான சருமம் கிடைக்கிறது. 

AHA மற்றும்  BHA:
AHA ,உலர்ந்த மற்றும் சாதாரண சருமத்திற்கு சிறந்தது. சூரிய ஓளியால் சேதமடைந்த சருமத்தை ஈர்ப்பதத்தின்மூலம் கட்டுவதற்கும், சீரற்ற சருமத்தை மென்மையாக்குவதற்கும்  பயன்படுகிறது. BHA சாதாரண மற்றும் எண்ணெய்  சருமத்திற்கும் வேறு பாதிப்புகளுக்குள்ளான சருமத்திற்கும் நன்மை பயக்கிறது. ரோசாசியாவால்  ஏற்படும் சிவப்புதன்மையை குறைக்கிறது. 

ரீசேர்வட்டால் : 
சருமத்திற்கு பல விதமான பாதுகாப்பை தரும் ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும். சருமத்தின் மேல் புறத்தில் தடவும்போது சூரிய ஓளியால் ஏற்படும் சேதங்கள் தவிர்க்கப்படுகிறது . கொலாஜென் உற்பத்தியை  அதிகரிக்கிறது. செல்கள்  சேதமடைவது குறைகிறது. 

குர்குமின்: 
இது மஞ்சளில் அதிகமாக காணப்படுகிறது. உள்ளுறுப்புகளிலும்  வெளியுறுப்புகளிலும்  வீக்கத்தை குறைக்கும் ஆற்றலை கொண்டது.  சூரிய வெளிச்சத்தால் ஏற்படும் மெலனின் உற்பத்தியை குறைக்கிறது . நாள்பட்ட வீக்கம்,எரிச்சல் மற்றும் சரும சேதங்கள் குறைகிறது.

மேற்குறிப்பிட்டுள்ள விளக்கங்களை நன்கு அறிந்து, உங்கள் அழகு சாதனங்களை வாங்கி பயன்படுத்துங்கள். முக அழகை நிரந்தரமாக்குங்கள்!