குழந்தைக்கு மசாஜ் செய்ய பயன்படுத்த கூடிய எண்ணெய்கள்

புதிதாக இந்த உலகுக்கு வந்த குழந்தைக்கு எல்லாமே புதிது தான். குழந்தையின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சிக்கும் ஒரு தாய் தான் பொறுப்பு.

குழந்தைக்கு மசாஜ் செய்ய பயன்படுத்த கூடிய எண்ணெய்கள்

குறிப்பாக குழந்தையின் உடல் வளர்ச்சியில் உணவின் முக்கியத்துவத்தை அடுத்து, குழந்தைக்கு செய்யப்படும் மசாஜ் கூட முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. இதனால் தான் பிறந்த குழந்தைக்கு எண்ணெய் மசாஜ் செய்வது உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. ஒரு சரியான எண்ணெய் மசாஜ், குழந்தையின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. வயிற்று வலிக்கு நல்ல ஒரு சிகிச்சையாக உள்ளது, குழந்தையின் உடல் வளர்ச்சியை வேகப்படுத்துகிறது. சில நேரம் குழந்தை பயந்தால் கூட மசாஜ் செய்வதன் மூலம் அந்த குழந்தையின் பயத்தைப் போக்கலாம். எண்ணெய் மசாஜ் மூலம் குழந்தையின் வளர்ச்சியை அதிகரிப்பது பெற்றோர் கையில் மட்டும் தான் உள்ளது.

குழந்தையின் நாசுக்கான சருமத்தில் எதாவது ஒரு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது குழந்தையின் சருமத்தில் தவறான பாதிப்புகளைத் தரும். எந்த ஒரு எண்ணெயையும் குழந்தைக்கு தடவுவதற்கு முன்னர், குழந்தையின் கை அல்லது கால் பகுதியில் ஒரு சிறிய பகுதியில் தடவி, சோதித்து, ஒரு மணி நேரம் கழித்து தடிப்பு, ஒவ்வாமை போன்ற எந்த ளரு பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்து பின்னர் முழு உடலிலும் தடவலாம். 

குழந்தை மசாஜ் செய்வதற்கு ஏற்ற நிலையில் இல்லாமல் இருக்கும் போது மசாஜ் செய்வதை தவிர்ப்பது நல்லது. எண்ணெய் மசாஜ் செய்வதற்கு, குழந்தையின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். இவற்றை உறுதி செய்த பின்னர், எந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும் என்ற கேள்வி வரும். இந்த கேள்விக்கான பதில் தான் இந்த பதிவு. குழந்தையின் உடல் வளர்ச்சியை அதிகரிக்கும் எண்ணெய் மசாஜ் செய்வதற்கு ஏற்ற எண்ணெய்களை அறிந்து கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.

தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணெயில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் கிருமி எதிர்ப்பு தன்மை உள்ளது. இந்த தன்மை, குழந்தையின் சருமத்திற்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம், கப்ரிளிக் அமிலம் மற்றும் அதிகமான அன்டி ஆக்சிடென்ட் போன்றவை உள்ளதால், உங்கள் குழந்தைக்கு இந்த எண்ணெய் மிகவும் ஏற்றது.

குழந்தைகளின் தோல் அழற்சி , தடிப்பு, தோல் வியாதி, தொட்டிலில் படுப்பதால் ஏற்படும் தோல் பிரச்சனைகள் போன்றவற்றை போக்க கடுமையான ரசாயனங்கள் கொண்ட க்ரீம் அல்லது லோஷன் பயன்படுத்துவது நல்லது அல்ல. இத்தகைய சூழ்நிலைகளில் அன்டி ஆக்சிடென்ட் தன்மை உள்ள தேங்காய் எண்ணெய் குழந்தைகளின் பிரச்சனைகளுக்கு நல்ல ஒரு தீர்வைத் தரும்.

குழந்தை குளித்து முடித்த பிறகு, சிறிதளவு தேங்காய் எண்ணெய்யை கொண்டு மசாஜ் செய்யுங்கள். இதனால் சருமம் ஈரப்பதம் கொள்கிறது. வெயில் காலங்களில், இந்த எண்ணெய் மசாஜ், குழந்தைக்கு மிகவும் உகந்தது. 

நல்லெண்ணெய் :

கருப்பு எள்ளில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் கொண்டு குழந்தைக்கு மசாஜ் செய்யலாம். இந்திய பாரம்பரியத்தில் குழந்தைக்கு நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது மிகவும் முக்கியமான செயலாக பார்க்கப்படுகிறது. இது மருத்துவ ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றதாகவே உள்ளது.

கலேண்டுலா எண்ணெய்:

கலேண்டுலா` எண்ணெய் அதன் மிருதுவான தன்மைக்கு பெயர் பெற்றது. இது குழந்தையின் சருமத்திற்கு மிகவும் பாதுகாப்பானது. குழந்தையை குளிப்பாட்டிய பின் இந்த எண்ணெய் மசாஜ் செய்வது நல்ல பலனைத் தரும். இந்த எண்ணெயின் நறுமணம் குழந்தைக்கு மிகவும் பிடிக்கும். இந்த நறுமணம் இயற்கையான ஒன்று என்பதால் குழந்தைக்கு இதனை நுகர்வதால் எந்த ஒரு தீங்கும் ஏற்படுவதில்லை. மிகவும் மிருதுவான மனம் என்பதால் குழந்தையின் மூக்கிற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுவதில்லை.

சூரியகாந்தி எண்ணெய் :

சூரியகாந்தி எண்ணெயில் மிகவும் அதிக அளவு வைட்டமின் ஈ மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இரண்டின் ஒருங்கிணைந்த தன்மை, சரும புத்துணர்ச்சிக்கு மிகவும் ஏற்றது. சூரியகாந்தி எண்ணெய் பொதுவாக சமையலில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதனை பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் உடலில் தடவும்போது மிகவும் பாதுக்காப்பானது என்று பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மிகவும் சென்சிடிவான சருமம் அல்லது சருமத்தில் ஏற்கனவே தடிப்புகள் இருந்தால், குழந்தைக்கு இந்த எண்ணெய்யை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

விளக்கெண்ணெய் :

குழந்தைகளின் சருமம் வறண்டதாக இருந்தால், விளக்கெண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்யலாம். நகங்கள் மற்றும் தலை முடிக்கும் இந்த எண்ணெய்யை பயன்படுத்தலாம். இதனால் தலைமுடி மற்றும் விரல்கள் மிகவும் பளபளப்பாக மாறுகின்றன.

குழந்தையின் உடலில் விளக்கெண்ணெய் தடவி, 10-15 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யுங்கள். பிறக்கு வெதுவெதுப்பான நீரில் குழந்தையை குளிக்க வைப்பதால் நல்ல தீர்வுகள் கிடைக்கும். குழந்தையின் உடல் பளபளப்பாக மினுமினுப்பாக மாறும். 

விளக்கெண்ணெய் பயன்படுத்தும் போது ஒரு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். குழந்தையின் உதடு மற்றும் கண் பகுதிக்கு அருகில் எண்ணெய் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

பாதாம் எண்ணெய் :

பாதாம் எண்ணெய் வைட்டமின் ஈ நிறைந்த ஒரு எண்ணெய். இதனால் குழந்தைக்கு மசாஜ் செய்ய மிகவும் ஏற்ற எண்ணெய்களில் இதுவும் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் மசாஜ் எண்ணெய்களில் பாதாம் எண்ணெயும் ஒரு மூலப் பொருளாக பயன்படுத்தப் படுகிறது. இந்த எண்ணெய்களை பயன்படுத்துவதைவிட, சுத்தமான பாதாம் எண்ணெய்யை பயன்படுத்தி மசாஜ் செய்வது குழந்தைக்கு நல்லது. மேலும் எந்த ஒரு நறுமணமும் இல்லாத பாதாம் எண்ணெய்யை தேர்வு செய்வது குழந்தைக்கு பாதுகாப்பானது. நறுமணம் கொண்ட பாதாம் எண்ணெய் சில நேரங்களில் குழந்தைக்கு ஒவ்வாமையை உண்டாக்கலாம். அதனால் வாசனைப் பொருட்கள் சேர்க்கப்பட்ட பாதாம் எண்ணெய்யை வாங்காமல் சுத்தமான பாதாம் எண்ணெய்யை வாங்கி பயன்படுத்துவது நல்லது.

ஆலிவ் எண்ணெய் :

குழந்தைக்கு மசாஜ் செய்ய ஆலிவ் எண்ணெய் மிகவும் ஏற்றது. ஆலிவ் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதால் குழந்தையின் தசை வேகமாக வளர்ச்சி அடைகிறது. ஆனால் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி குழந்தைக்கு மசாஜ் செய்யும்போது சில விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். 

குழந்தைக்கு தோல் அழற்சி, வெட்டு அல்லது தடிப்புகள் இல்லாமல் இருக்கும்போது மட்டும் ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தவும்.

வறண்ட மற்றும் சென்சிடிவ் சருமம் கொண்ட குழந்தையின் சருமத்திற்கு இந்த எண்ணெய்யை பயன்படுத்தக் கூடாது .

ஆலிவ் எண்ணெயின் சில பண்புகள் தோலின் ஊடுருவலை மேம்படுத்துகிறது, இதனால் தோல் வேகமாக வறண்டுவிடும். குழந்தையின் சருமம் ஈரப்பதத்தை இழப்பதால், தோல் வெடிப்பு மற்றும் பல்வேறு தோல் பிரச்சினைகள் ஏற்படுகிறது.

டீ ட்ரீ எண்ணெய் :

டீ ட்ரீ எண்ணெய் ஒரு சிறந்த கிருமிநாசினி. சருமத்தின் ஒவ்வாமை தொடர்பான பிரச்சனைகளுக்கு சிறந்த ஒரு தீர்வாக இந்த எண்ணெய் செயல்படுகிறது. எல்லாவிதமான குழந்தையின் சருமத்திற்கும் இந்த எண்ணெய் ஏற்றது. இந்த எண்ணெய் மசாஜ் செய்வதால் குழந்தைகள் அமைதியாக சௌகரியமாக உணர்வார்கள். குழந்தைகள் ஆழ்ந்த தூக்கம் பெறுவது இந்த எண்ணெயின் சிறப்பு அம்சமாகும். இந்த எண்ணெய் மிகவும் லேசான தன்மை உடையதால், வருடத்தின் எல்லா நாட்களிலும் இதனை பயன்படுத்தலாம். குழந்தை குளிக்கும் முன்பும் இதனை பயன்படுத்தலாம். அல்லது குளித்து முடித்த பின்னரும் இதனை பயன்படுத்தி மசாஜ் செய்யலாம். இரண்டு விதங்களுக்கு ஏற்ற ஒரு எண்ணெய்யாக இதன் தன்மை உள்ளது. குழந்தைக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை கூட இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம்.