மார்ஷ்மெல்லோ வேரின் நன்மைகள் 

மார்ஷ்மெல்லோ வேர்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? மார்ஷ்மெல்லோ என்று கேட்டதும், மிருதுவாக பல நிறங்களில்  காணப்படும் ஒரு இனிப்பு வகை தான் உங்கள் ஞாபத்திற்கு வரும். குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இந்த இனிப்பை மிகவும் பிடிக்கும். ஆனால் நாங்கள் இங்கே கூறியிருக்கும் இந்த வேருக்கும் இந்த இனிப்பிற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. இந்த இனிப்பு செயற்கை முறையில் செய்யப்படும் ஒரு இனிப்பு. பெயரில் மட்டுமே இந்த வேருக்கும் இனிப்பிற்கும் ஒற்றுமை உண்டு.

மார்ஷ்மெல்லோ வேரின் நன்மைகள் 

மார்ஷ்மெல்லோ என்பது ஒரு வற்றாத மூலிகை. பருவ கால மாற்றங்களால் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாமல், ஆண்டுதோறும் இந்த மூலிகை வளரும். 

ஐரோப்பா , மேற்கு ஆசியா , வட ஆப்ரிக்கா மற்றும் உலகின் மற்ற சில இடங்கிளில் இந்த மூலிகை பொதுவாகக் காணப்படுகிறது. இந்தியாவைப் போன்ற வெப்பமண்டல நாடுகளிலும் இந்த மூலிகை சில நேரங்களில் வளர்க்கப்படுகிறது. மார்ஷ்மெல்லோ மூலிகைகள் அற்புதமான மருத்துவ தன்மையைக்  கொண்டு வருகின்றன, அவை பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கின்றன, மேலும் பல நோய்களைக் குணப்படுத்துகின்றன மற்றும் இதன் கோந்து பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்டு குணமளிக்கிறது.

இயற்கை மருந்துகளின் தயாரிப்பில் இந்த மூலிகை பயன்படுத்தப்படுகிறது. பண்டைய கிரேக்க, ரோமானிய, அரபு மற்றும் எகிப்திய கலாச்சாரங்களின் வேத நூல்களில் மார்ஷ்மெல்லோ வேர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

இப்படி பல்வேறு வரலாறுகளைக் கொண்ட மார்ஷ்மெல்லோ வேர்களின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் இப்போது காணலாம். 


சளி மற்றும் வறண்ட இருமல்:
மார்ஷ்மெல்லோ வேர்களில் கோந்து  உள்ளது என்று நாம் மேலே கூறியுள்ளோம். இந்த கோந்து, மனிதனின் சுவாச மண்டலத்தில் உள்ள சளி சுரப்பிகளுக்குள் , வெளிப்புறம் இருந்து மனித உடலில் நுழையும் நீர் மற்றும் அழுக்குகள் நுழையாதவாறு தடுக்கும் ஒரு பாதுகாப்புத் தடையாக செயல்படுகிறது.  இந்த கோந்து, சளி சுரப்பிகளை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்திருப்பதன் மூலம் வறட்சியைப் போக்க உதவுகிறது. இதனால் வறண்ட இருமல் மற்றும் சளி குறைகிறது .


சரும எரிச்சலைப் போக்குகிறது :
2013 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இந்த மூலிகை எதிர்ப்பு அழற்சி குணங்கள் கொண்டிருப்பதால், ஒவ்வாமை அல்லது தீக்காயங்களால் ஏற்படும் தோல் வீக்கம் மற்றும் எரிச்சலைக் குறைப்பதற்கு மார்ஷ்மெல்லோ வேர்கள் பயன்படுத்த இயலும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது . மார்ஷ்மெல்லோ வேர்களைப் பயன்படுத்தி, இயற்கையான களிம்புகள் தயாரித்து இதன்மூலம் அழற்சி, எரிச்சல் மற்றும் சரும அரிப்பைக் குறைக்கலாம்.


காயம் வேகமாக குணமடைகிறது :
காயத்தை குணப்படுத்தும் ஆற்றல் மார்ஷ்மெல்லோ வேர்களுக்கு அதிகமாக இருப்பதாக 2015ம் ஆண்டு நடந்த ஒரு ஆய்வு கூறுகிறது. இவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கிராம் பாசிடிவ் கிருமிகளை அழிப்பதே  இதற்கு முக்கிய காரணம். மக்களுக்கு ஏற்படும் அதிகமான காயத்திற்கு காரணம் இந்த கிராம் பாசிடிவ் கிருமிகள் தான். ஆகவே மார்ஷ்மெல்லோ வேரின் சாற்றை காயங்களில் தடவுவதன்மூலம்  காயங்கள் விரைவில் குணமாகிறது. மருத்துவரின் ஆலோசனைக்கு பின் இந்த சாற்றை பயன்படுத்தவும்.

புறஊதா கதிர்களிடமிருந்து பாதுக்காக்கிறது :
சூரிய ஒளி மனித உடலில் நேரடியாக தாக்குவதால் அதன் புற ஊதா கதிர்கள் மூலம் பல சரும சீர்கேடுகள் உருவாகின்றன என்பதை நம்மில் பலரும் அறிவோம். சரும நிறமிழப்பு , கருதிட்டுக்கள், இளமையிலேயே வயது முதிர்ந்த தோற்றம் போன்றவை, சில நேரங்களில் சரும புற்று நோய் கூட ஏற்படும் பாதிப்பு உண்டு. ஆகவே மார்ஷ்மெல்லோ சாற்றை உடலில் தடவுவது அல்லது மார்ஷ்மெல்லோ சாறு கலந்த சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவது போன்றவை மூலம் உங்கள் சருமத்தை புற ஊதா கதிர்களிடமிருந்து சிறந்த முறையில் பாதுகாக்கலாம் .


வலியைக் குறைக்கிறது :
நோய்கள் அல்லது காயங்களால் ஏற்படுகின்ற தலைவலி, மூட்டு வலி, வயிற்று வலி போன்ற பல கடுமையான உடல் வலியால் பாதிக்கப்படும் போது, மக்கள் வலிநிவாரணிகளை பயன்படுத்துகின்றனர் . ஆனால் இவற்றை நீண்ட நாட்கள் பயன்படுத்துவதால் காலப்போக்கில் பல எதிர்மறை விளைவுகள் உண்டாகிறது. மார்ஷ்மெல்லோ வேர்கள் வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கின்றன, அவை வீக்கத்தை குறைக்கின்றன, இதனால் இயற்கையாகவே வலி குறைகிறது. மார்ஷ்மேல்லோ தேநீர் பருகுவது சிறந்த முறையில் உடல் ஆரோக்கியத்திற்கு  உதவும்.

செரிமானம் மேம்படுகிறது :
தினமும் மார்ஷ்மெல்லோ தேநீர் பருகுவது அல்லது மார்ஷ்மெல்லோ சாற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது போன்றவற்றால் உங்கள் செரிமான ஆரோக்கியம் மேம்படுகிறது. 2011 இல் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சி ஆய்வு, மார்ஷ்மெல்லோ சாற்றில், குடலில் உற்பத்தி செய்யப்படும் அமிலங்களைக் குறைக்கும் திறன் மற்றும் வயிற்றுப் புண்கள் இயற்கையாகவே சிகிச்சையளிக்கும் திறனைக் கொண்டுள்ளது, இதனால் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்று அறியப்படுகிறது 


அணுக்களின் முன்கூட்டிய முதிர்ச்சியைத் தடுக்கிறது

மார்ஷ்மெல்லோ வேர்களில் அன்டி ஆக்சிடென்ட் அதிகம் உள்ளது. உடலில் உள்ள உயிரணுக்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு சீர்குலையத் தொடங்குகின்றன. இதனால் வயது முதிர்வு மற்றும் முதிர்ச்சி தொடர்பான கோளாறுகள் உண்டாகின்றன. மார்ஷ்மெல்லோ வேர்களில் உள்ள அன்டி ஆக்சிடென்ட் , அணுக்கள் சீர்குலைவதைத் தடுக்கின்றன , இதனால் இளம் வயதில் ஏற்படும் முதிர்ச்சியும் தடுக்கப்படுகிறது.


இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது :

மார்ஷ்மெல்லோ சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை மருந்துகளை பயன்படுத்தி, தமனிகளை நன்கு நீர்த்துப்போகச் செய்து, உடலின் கொழுப்பு அளவைக் குறைக்க முடியும், இதனால் ஆரோக்கியமான மற்றும் வலுவான இதயத்தை தக்க வைத்துக்கொள்ளும் போது, அதிகமான ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தத்தை இதயம்  பெற அனுமதிக்கிறது. இதனால் இதயம் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருக்கிறது.

குறிப்பு:
மார்ஷ்மெல்லோ வேர்கள் பயனபடுத்துவதற்கு முற்றிலும் பாதுகாப்பானதாக இருந்தாலும், சிலருக்கு இந்த வேர்கள் ஒவ்வாமையை உண்டாக்கலாம். ஆகவே இதனை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசித்து மற்றும் சிறு அளவை எடுத்து உடலில் பரிசோதித்து பின்பு முழு அளவை பயன்படுத்தவும். கர்ப்பிணிப் பெண்கள், நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள், விரைவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பவர்கள் இதனைத் தவிர்ப்பது நல்லது.

மற்றும், மார்ஷ்மெல்லோ வேர்களை வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதுவும் ஒவ்வொரு நோய்க்கும் குறிப்பிட்ட அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.