அக்கி ரொட்டி

தினமும் என்ன சிற்றுண்டி செய்வது என்ற கேள்வி எல்லா குடும்ப தலைவிக்கும் உண்டு. அந்த கேள்விக்கான பதில் தான் இந்த பதிவு.

அக்கி ரொட்டி

நாம் உண்ணும் உணவு ஊட்டச்சத்து உள்ளதாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் சுவையானதாகவும் இருக்க வேண்டும். இப்படி சுவையும், ஊட்டச்சத்தும் நிறைந்த ஒரு உணவை பற்றி நாம் இன்று அறிந்து கொள்வோம். இதனை காலை உணவாக அல்லது இரவு உணவாக சமைத்து உண்ணலாம். இதன் பெயர் அக்கி ரொட்டி.

அக்கி ரொட்டி என்பது கர்நாடகாவில் தயாரிக்கப்படும் ஒரு சுவையான ரொட்டியாகும். இது அரிசி மாவில் செய்யப்படுவதாகும். மகாராஷ்ட்ராவில் செய்யப்படும், தாளிபீத் என்ற உணவை ஒத்த சுவை உடையது இந்த அக்கி ரொட்டி. கர்நாடகாவின் பாரம்பரிய உணவான அக்கி ரொட்டி, பல்வேறு ஊட்டச்சத்துகள் கொண்ட ஒரு உணவு. இதன் சுவை அலாதியானது. அக்கி ரொட்டியை அரிசி மாவு மற்றும் காய்கறிகள் மற்றும் காரம் சேர்த்து தயாரிக்கலாம். அக்கி ரொட்டியில் மிக முக்கியமாக சேர்க்கப்படும் ஒரு பொருள் சீரகம். சிறிய அளவு சீரகம் சேர்க்கப்பட்டாலும் , இந்த ரொட்டியின் சுவையில் இதன் பங்கு மிக பெரியது. செரிமானத்திற்கு சீரகம் பெரிதும் உதவுகிறது, மேலும் இந்த ரொட்டியின் சுவை சீரகம் சேர்ப்பதால் மேலும் அதிகரிக்கிறது. பெரும்பாலும், அக்கி ரொட்டியை காலை உணவாக உண்ணலாம் . இதனுடன் தேங்காய் சட்னி சேர்த்து பரிமாறலாம். சட்னி தயாரிக்க நேரமில்லாத போது ஊறுகாய் அல்லது தயிர் சேர்த்தும் சாப்பிடலாம். 

அக்கி ரொட்டி தயாரிப்பதில் 2 விதங்கள் உண்டு. ஒரு விதம், வெறும் அரிசி மாவு மட்டும் சேர்த்து செய்யப்படும் ரொட்டி. இதில் எந்த ஒரு காய் கறியும் மசாலா பொருட்களும் சேர்க்கப்படுவதில்லை. மற்றொரு விதம், காய் கறிகள் மற்றும் மிளகாய் போன்றவற்றை சேர்த்து தயாரிக்கப்படுவது. அக்கி ரொட்டியை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள், இந்த விடியோவை பார்க்கலாம். மேலும் இதன் தயாரிப்பை ஒவ்வொரு கட்டமாக விவரிப்பதை கீழே பார்க்கலாம். 

அக்கி ரொட்டி ரெசிபி / அக்கி ரொட்டியை செய்வது எப்படி /அரிசி மாவு ரொட்டி ரெசிபி /அரிசி மாவு கேக் ரெசிபி / தாளிபீத் ரெசிபி / 

தயாரிப்பு நேரம் - 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் - 20 நிமிடங்கள்
மொத்த நேரம் - 30 நிமிடங்கள்
ரெசிபி தயாரித்தவர் - காவ்யாஸ்ரீ. எஸ்
ரெசிபி வகை - முக்கிய உணவு 
பரிமாறும் அளவு - 5 பேருக்கு

தேவையான மூலப் பொருட்கள் :
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 2 
எண்ணெய் - வேக வைக்கும்போது ஊற்றுவதற்கு 
அரிசி மாவு - 3/4 கிண்ணம்
கொத்துமல்லி - 1/2 கப்
பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 6 
சீரகம் - 3/4 ஸ்பூன்
கேரட்(துருவியது)  - 3/4 கப்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

தயாரிக்கும் முறை :
1. ஒரு பெரிய கிண்ணத்தில் அரிசி மாவை சேர்க்கவும். 
2. மாவுடன், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்துமல்லி தழைகளை சேர்க்கவும். 
3. பிறகு, அதனுடன், பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், துருவிய கேரட் மற்றும் சீரகத்தை சேர்க்கவும். 
4. ஒரு ஸ்பூன் கொண்டு இந்த கலவையை நன்றாக கிளறவும். 
5. இதனுடன் உப்பு சேர்த்து மீண்டும் கிளறவும். 
6. பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு, கையால் கிளறி கொண்டே இருக்கவும். 
7. மிதமான அளவு மென்மையாக சப்பாத்தி மாவு பதத்தில் தயாரித்துக் கொள்ளவும்.
8. பிறகு ஒரு கை அளவு மாவை எடுத்து சிறிய சிறிய உருண்டைகளாக பிரித்து உருட்டிக் கொள்ளவும். 
9. அதனை ஓரமாக வைத்துக் கொள்ளவும். 
10. ஒரு பேக்கிங் பேப்பரில் எண்ணெய் தடவி கொள்ளவும். 
11. சிறிய உருண்டையாக  உருட்டி வைத்துள்ள அரிசி மாவை, எடுத்து அந்த பேப்பரில் வைத்து கைகளால் அடை போல் தட்டவும்.
12. அடை போல் தட்டப்பட்ட மாவின் நடுவில் 3 ஓட்டைகளை போடவும். இதனால் ரொட்டி, எல்லா இடங்களிலும் சரியாக வேக முடியும். 
13. தோசை கல்லை அடுப்பில் போடவும். 
14. தோசை கல்லில் சிறிதளவு எண்ணெய்யை தடவவும்.
15. கல் சூடானதும், அதில் தட்டி வைத்துள்ள ரொட்டியை போடவும் , 
16. சுற்றி எண்ணெய் ஊற்றவும். 
17. 3-4 நிமிடங்கள் நன்றாக வேக விடவும். 
18. ஒரு பக்கம் வெந்தவுடன், அடுத்த பக்கம் திருப்பி போட்டு 2 நிமிடம் வேக விடவும்.
19. இரண்டு பக்கமும் பொன்னிறமாக மாறியவுடன், எடுத்து தட்டில் வைத்து சூடாக பரிமாறவும். 

குறிப்பு:

மாவை மிகவும் மென்மையாக பிசைய வேண்டாம். அதில் இருக்கும் கேரட் மற்றும் வெங்காயம் போன்ற காய்கறிகளில் இருந்து தண்ணீர் வெளியேற நேரிடும்.  
அக்கி ரொட்டி மற்ற ரொட்டிகளை விட எண்ணெய்யை அதிகமாக இழுக்கும். 
நான்-ஸ்டிக் பேப்பர் அல்லது ஃபாயில் பயன்படுத்தி மாவை அடை போல் தட்டலாம். 
நேரடியாக தோசை கல்லில் கூட தட்டி கொள்ளலாம். இந்த முறையை தான் முந்தைய காலங்களில் பின்பற்றி வந்தனர். 
நேரடியாக கல்லில் தட்டும்போது, கைகளில் நன்றாக எண்ணெய்யை தடவி கொண்டு பின்பு தட்டலாம். 

ஊட்டச்சத்து விபரம்:
பரிமாறும் அளவு - 1
கலோரி - 152
கொழுப்பு - 2.4 கிராம்
புரதம் - 2.9 கிராம்
கார்போஹைட்ரெட் - 29.3 கிராம்
சர்க்கரை - 0.9 கிராம்
நார்ச்சத்து - 1.8 கிராம்