பதின் பருவம் எனப்படும் டீன் ஏஜ்

பதின் பருவத்தில் உடலிலும் மனதிலும் பல மாற்றங்களை உணர முடியும். இன்னும்  சொல்ல  போனால் இது அதிகமான குழப்பங்களை பிள்ளைகளுக்கும் பெற்றவர்களுக்கும் கூட உருவாக்கும் ஒரு பருவம் எனலாம்.

பதின் பருவம் எனப்படும் டீன் ஏஜ்

இந்த தலைப்பு பற்றி எழுதும்போது நிச்சயமாக ஒரு சிலிர்ப்பு இருக்கவே செய்கிறது. உலகில் பெரும்பாலான மக்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் பிடித்த பருவம் இதுவாகத்தான் இருக்க முடியும். குழந்தையாய் இருந்து சிறுவராய் வளர்ந்து, பெரியவராவதற்கு இடையில் வரும் பருவம். ஒரு குடும்பத்தில் நமக்கான அங்கீகாரம் , ஏன்  நாட்டில் கூட நம்மை விஷயம் தெரிந்தவராக நினைத்து  வோட்டு போடும் உரிமை இந்த பதின் பருவத்தில் தான் வழங்க படுகிறது. 

பலவித ஹார்மோன்களை உடல் இந்த பருவத்தில் சுரக்கும். இதன் மூலம் நமது மனமும் மூளையும் அலை பாயும். இந்த மாற்றங்களை ஏற்க முடியாமல் மனமும் உடலும் தடுமாறும். இந்த குழப்பமான  பதின் பருவத்து அனுபவம் ஒரு நல்ல ஆடவனை  அல்லது பெண்மணியை உருவாக்கும்.

பதின் பருவத்து உணர்வுகளை புரிதல்:
பெற்றோர்கள்  தங்கள் பிள்ளைகளின் இந்த பதின் பருவ உடல் மற்றும் மன நிலை மாற்றங்களின் விளைவுகளை புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக பெண்கள் அவர்களின்  உணர்வுகளை வெளிப்படையாக கூறுவதற்கு பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும்.  

உடல் கூறுகள் வளரவும் மாறவும் தொடங்குவதால் ஒரு வித வினோத உணர்ச்சிக்கு அவர்கள் ஆளாவார்கள். 

ஹார்மோன்கள் மற்றும் உடல் மாற்றங்களை சமாளிக்கும் விதத்தில், இளைஞர்கள் தங்கள் வீட்டு வாழ்க்கையிலும் பள்ளியிலும் அதிக அழுத்தம் மற்றும் பொறுப்பைக் கொண்டிருப்பது அவசியம். இந்த சமூகத்தோடு இணைவதற்கான கருவியாக படிப்பு இருப்பதால் , அதை சமாளிப்பதற்கு ஒரு மிக பெரிய அழுத்தம் அவர்களுக்கு ஏற்படும்.

இந்த வயதில்  பிள்ளைகளின்  பள்ளிகள் மாற்றப்படும் போது அல்லது வாழ்க்கையின் கண்ணோட்டம் மாற்றப்படும் போது அவர்களின்  நண்பர்கள் வட்டம் மாறுபடும். இதனால் இந்த காலத்தில் அவர்கள் ஒரு வித வெறுப்பாகவும் தனிமையாகவும் உணர்வார்கள்.

பெற்றோர்கள் வீட்டில் குறைந்த பட்ச பொறுப்பை பிள்ளைகள் இப்போது ஏற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். பள்ளி படிப்புடன் கூடிய இந்த வீட்டு பொறுப்புகள் பிள்ளைகளுக்கு பளுவை ஏற்றலாம். இதனை குறைக்கும் வகையில் அவர்களுக்கு நேர நிர்வாகத்தை பயிற்றுவிக்கலாம்.வேலைக்கான அட்டவணையை உருவாக்குதல், எந்த வேலையை முதலில் செய்வது எந்த வேலையை பின்னால் செய்வது என்பதை முன்னுரிமை அடிப்படையில் புரிய வைத்தல்  போன்றவை  இவற்றுள் அடங்கும்.

இந்த உடல் மற்றும் மனநிலை மாற்றங்கள் மற்றும் சமுதா மாற்றங்களால் பிள்ளைகள் ஒரு வித விரக்தி நிலைக்கு செல்லலாம். பெற்றோர்கள் இந்த நேரத்தில் அவர்களை சரியான விதத்தில் வழி நடத்த வேண்டும். இந்த சரியான வழிநடத்துதலால் மட்டுமே,பிற்காலத்தில் எந்த ஒரு சூழலையும் சமாளிக்கும் தெளிவு அவனுக்கு ஏற்படும்.

பதின் பருவ உணர்ச்சிகளை கையாள்வது எப்படி?
பதின் பருவத்தினருக்கு அவர்களின் உணர்ச்சிகளை கையாள்வதற்கு  பெற்றோரின் துணை மிகவும் அவசியம். ஆரம்பத்தில் பெற்றோருக்கு பிள்ளைகளின் இந்த நடவடிக்கை  ஒரு எரிச்சலூட்டும் சம்பவமாக இருக்கலாம் . ஆனால் சூழ்நிலையை மாற்ற இந்த  கோபம் உதவாது. பெற்றோர்கள் பிள்ளைகளோடு ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.

பிள்ளைகளின் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்க வேண்டும். அவர்கள் பிரச்சனைகளை உங்களுடையதாக உணர்ந்தால் மட்டுமே அவர்களின் நடவடிக்கையின் மாற்றத்தை புரிந்து கொள்ள முடியும். புரிதல் ஏற்பட்டால், அதிலிருந்து பிள்ளைகளை எளிதில் வெளிக்கொணர முடியும்.

பிள்ளைகள் தங்களை அபிவிருத்தி செய்யவும், அவர்கள்  தங்களை யார் என்று உணரவும்,குண நலன்களை மேம்படுத்தவும்  பெற்றோர்கள் அவர்களுக்கான ஒரு வெளியை உருவாக்க வேண்டும். பிள்ளைகளின் எல்லா செயலிலும் குற்றம்   காண்பது இந்த தேடலின் நல்ல முடிவை கொடுக்காது. அவர்களின் முடிவுகளை கேட்பதும், பிரச்சனைகளை பற்றி  கலந்துரையாடுவதும்,அவர்களுக்கு துணை நிற்பதும் நல்ல பலனை கொடுக்கும்.

சில சமயங்களில் பிள்ளைகள் மிகவும்  கோபப்படுவர். அந்த நேரத்தில் அவர்கள் நல்லது கெட்டது என்று எதையும் யோசிக்காமல் சத்தமாக பேச நேரிடலாம். அப்போது பெற்றோர்கள்  அதை உணர்ந்து அவர்கள் பேசுவதற்கு அனுமதியுங்கள் . இதன் மூலம் அவர்களின் எரிச்சல் கட்டுப்படலாம்.  அவர்களுக்கான எல்லையை உணர்த்துங்கள். அவர்கள் எல்லையை தாண்டும்வரை நீங்கள் அமைதியோடு இருங்கள். அதன் பிறகு நீங்கள் தலையிட்டு அவர்களுக்கு தெளிவை ஏற்படுத்துங்கள்.

பதின் பருவம் ஒரு  சவாலான பருவம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. பெற்றோரின் துணையுடன் மற்றும் புரிதலுடன் இந்த சவாலை எளிதில் சமாளிக்க முடியும். இதன் மூலம் அன்பு வெறுப்பு இரண்டையுமே சம்பாதிக்கும் நிலை வரும் ஆனால் இந்த பருவத்திற்கு பிறகு பெற்றோரும் பிள்ளைகளும் இன்னும் நெருக்கமாக இருப்பதை  நிச்சயம் உணர முடியும்.