உங்கள் எலும்புகளுக்குத் தீங்கு உண்டாக்கும் 7 தினசரி பழக்கங்கள்

எலும்பு தொடர்பான பாதிப்புகள் வயது முதிர்ந்த நிலையில் தான் உண்டாகிறது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிலவி வருவது மட்டுமே. இங்கு தான் நாம் தவறு செய்கிறோம்.

உங்கள் எலும்புகளுக்குத் தீங்கு உண்டாக்கும் 7 தினசரி பழக்கங்கள்

உடல் ஆரோக்கியம் என்று வரும்போது எலும்புகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தத் தவறி விடுகிறோம் என்பது உண்மை. தினசரி நாம் செய்யும் எண்ணிலடங்கா சிறு தவறுகள் எலும்புப்புரை போன்ற எலும்பு தொடர்பான பாதிப்புகள் உண்டாகக் காரணமாக அமைகின்றன. உடனடியாக  இவ்வித பழக்கங்களுக்கான முடிவுகள்  தெரியவிட்டாலும், சில காலம் கடந்து பாதிப்புகள் வெளிப்படும்.

எலும்புப்புரை பாதிப்பு ஏற்படுவதால் எலும்புகள் மிகவும் பலவீனமாகி, எளிதில் உடையும் தன்மை உண்டாகிறது. இதனால் அடிக்கடி காயம் உண்டாகும் நிலை ஏற்படுகிறது. இந்த பாதிப்பு உடலில் மெதுவாக வளர்ச்சி அடைந்து பிற்காலத்தில் ஏதாவது காயம் ஏற்படும்போது வெளிப்படுகிறது. சில எளிய தினசரி பழக்கவழக்கங்கள் எலும்புப்புரை பாதிப்பு ஏற்படக் காரணமாக உள்ளன. இவற்றைத் தவிர்த்துக் கொள்வதால் இந்த பாதிப்பை எளிதில் தடுக்க முடியும்.

அந்த 7 தினசரி பழக்க வழக்கங்கள் பின்வருமாறு..
1. சூரிய வெளிச்சம் குறைவது 
2. சோம்பேறியாக இருப்பது
3. புகை பிடிப்பது
4. மது மற்றும் சோடா
5. சமச்சீரில்லாத உணவை உண்ணுவது
6. எடை இழப்பு
7. தூங்கும் நிலை

இவற்றைப் பற்றி இனி விரிவாகக் காண்போம்.

1. சூரிய வெளிச்சம் குறைவது :
சூரிய வெளிச்சம் உடலுக்கு மிகவும் தேவை என்பது அனைவரும் அறிந்தது. சூரிய வெளிச்சத்தில் வைட்டமின் டி சத்து இருப்பதால் எலும்புகளுக்கு வலிமை அளிக்க உதவுகிறது. வைட்டமின் டி சத்து எலும்புகளைப் பாதுகாத்து , உடல் கால்சியத்தை உறிஞ்ச உதவுகிறது. அமெரிக்க தேசிய எலும்புப்புரை பவுண்டேஷன் , வயதிற்கு ஏற்றார் போல் வைட்டமின் டி சத்தின் தினசரி தேவையை வலியுறுத்துகிறது. 50 வயதிற்கு குறைவாக இருக்கும் பெரியவர்களுக்கு ஒரு நாளில் 400-800 IU வைட்டமின் டி சத்து தேவைப்படுகிறது. 50 வயதிற்கு மேலே இருக்கும் முதியவர்களுக்கு ஒரு நாளில் வைட்டமின் டி சத்து 800-1000 IU தேவைப்படுகிறது. ஒருவேளை உங்களுக்கு சூரிய வெளிச்சத்தில் இருந்து போதிய வைட்டமின் டி சத்து கிடைக்கவில்லை என்றால் மருத்துவரிடம் ஆலோசித்து இதற்கான மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தலாம்.

2. சோம்பேறியாக இருப்பது:
எலும்புகளை எந்த அளவிற்கு அசைக்கிறீர்களோ அந்த அளவிற்கு அவை வலிமையாகின்றன. உடற்பயிற்சி செய்வதால் தசைகள் வலிமையாவதுடன் எலும்புகளும் உறுதியாகின்றன. வலிமையான எலும்புகள் உண்டாவதற்கு ஒரு நாள் முழுக்க படுக்கையில் படுத்துக் கிடக்காமல் அடிக்கடி ஓடியாடி வேலை செய்ய வேண்டும். ஓடுவது, நடப்பது, நடனம் ஆடுவது இப்படி எதை வேண்டுமானாலும் செய்யலாம். சோம்பேறியாக இல்லாமல் எதாவது ஒரு வேலையைச் செய்வதால் எலும்புகள் பலமாகின்றன.

3. புகை பிடிப்பது:
சிகரெட் புகைப்பதால் நுரையீரல் பாதிக்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் எலும்புகளும் மோசமாக பாதிக்கப்படுகிறது. புகை பிடிப்பதால் எலும்புப்புரை பாதிப்பு அதிகரிப்பதாக பல்வேறு ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. புகை பிடிப்பதால் எலும்பு விழுங்கி அணுக்களின் செயல்பாடுகளான பழைய எலும்புகள் நொறுக்கப்படுவது , எலும்பு உயிரணுக்களின் செயல்பாடுகளான புதிய எலும்புகள் கட்டமைப்பை உருவாக்குவது போன்றவை பாதிக்கப்படுகின்றன . இதனால் எலும்புகள் பலவீனமாகின்றன.

4. மது மற்றும் சோடா:
சோடா மற்றும் மது அருந்தும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? ஆம் என்றால், இதனால் உங்கள் எலும்புகள் பலவீனமாகிறது என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள். அதிகமாக மது அருந்துவதால், எலும்புகளின் கால்சியம் உறிஞ்சும் செயல்பாட்டை ஊக்குவிக்கும் ஹார்மோன் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. அதிக அளவு கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்களை அருந்துவதால் எலும்பு அடர்த்தி குறையும் வாய்ப்பும் உள்ளது.

5. சமச்சீரில்லாத உணவை உண்ணுவது:
வலிமையான மற்றும் அடர்ந்த எலும்புகள் உருவாக்கத்திற்கு கால்சியம் மிகவும் அவசியம். அதனால் போதுமான அளவு கால்சியம் சத்து உடல் செயல்பாடுகளுக்கு  மிகவும் முக்கியம். பொதுவாக நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து கால்சியம் சத்து உடலுக்குக் கிடைக்கிறது . எனவே நாம் உட்கொள்ளும் உணவு சமச்சீர் உணவாக இல்லாதபோது, ஊட்டச்சத்து குறைப்பாடு ஏற்படுகிறது. உங்கள் எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ள சமச்சீரான மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மிகவும் அவசியம்.

6. எடை இழப்பு :
உங்கள் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் பேணுவது மிகவும் முக்கியம். அதற்காக ஒரே நேரத்தில் அதிக எடையைக் குறைபப்தும் உடலுக்குத் தீங்கானது. உடல் எடையைக் கணக்கிட உதவும் BMI 18.5 என்ற அளவை விட குறைவாக இருந்தால் எலும்புப்புரை பாதிப்பின் அபாயம் அதிகரிக்கிறது என்று சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

7. தூங்கும் நிலை:
தூக்கம் தொடர்பான பிரச்சனைகளைப் புறக்கணிப்பது என்பது நம்மில் பலரும் செய்யும் ஒரு செயலாகும். ஆனால் தூக்கம் தொடர்பான பிரச்சனைகள் உடலின் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. வேலைப்பளுவின் காரணமாக அல்லது  தொலைக்காட்சியில் மூழ்கிப் போவதின் காரணமாக நாம் தூக்கத்தைத் தொலைத்து விடுகிறோம். இது ஒரு பொதுவான பழக்கமாக உள்ளது. ஆனால் தூக்கமின்மை மற்றும் எலும்பு பிரச்சனைகளுக்கு தொடர்பு இருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.