முருங்கை விதைகளின் 5 அற்புத நன்மைகள்

முருங்கை மரத்தின் காய்களில்  இருந்து கிடைக்கும் விதைகள் முருங்கள் விதைகள் ஆகும். இந்த முருங்கை விதைகள் பல வியாதிகளைக் கையாளும் விதமாக அறியப்படுகிறது, மற்றும் பல்வேறு நன்மைகளை ஒருங்கே கொண்டுள்ளது.

முருங்கை விதைகளின் 5 அற்புத நன்மைகள்

முருங்கைக்காய் என்பது மிகப் பிரபலமாக பயன்படுத்தப்படும் ஒரு உணவுப்பொருள். இந்திய சமையலில் மட்டுமல்ல பல வித அயல்நாட்டு உணவு வகைகளிலும் இந்த முருங்கைக்காயை பயன்படுத்தி வருகின்றனர். ஒட்டுமொத்த சமையலுக்கு ஒரு தனிச் சுவையைத் தரும் தன்மை முருங்கைக்காய்க்கு உண்டு என்பதை நாம் அனைவரும் அறிவோம். முருங்கைக்காயை சாப்பிட வேண்டாம் என்று நினைப்பவர்கள், ஒரே நேரத்தில் அதன் அத்தனை ஊட்டச்சத்துகளையும் பெற ஒரு மாற்று உணவாக இந்த விதைகளைத் தேர்வு செய்யலாம். இந்த விதைகளின் மருத்துவ தன்மைகள் ஏராளமாக உள்ளது. ஒரு விதை பல உடல் பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் என்பதால் இந்த பதிவைப் உங்களுடன் இன்று பகிர்ந்து கொள்கிறோம். முருங்கை விதைகளின் நன்மைகளைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள, இந்த பதிவை முற்றிலும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

முருங்கை விதைகளின் அற்புத நன்மைகள் :

1. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது
2. நீரிழிவு காலத்தில் உதவுகிறது 
3. எடை குறைப்பில் உதவுகிறது 
4. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது
5. தலை முடி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது 

இந்த நன்மைகள் குறித்து விளக்கமாகக் காண்போம்.

1. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது:
இன்றைய நாட்களில் பலரும் பாதிக்கப்படக்கூடிய ஒரு கோளாறுகளில் ஒன்று, உயர் இரத்த அழுத்தம். வாழ்வின் ஒரு கட்டத்தில் எல்லா நபரும் இந்த உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகளை அனுபவிக்க நேரலாம். உயர் இரத்த அழுத்தம் ஏற்பட பல்வேறு காரணிகள் உண்டு, அவற்றுள் சீரற்ற உணவுப் பழக்கம், மனஅழுத்தம், ஒழுங்கற்ற உடற்பயிற்சி, பாரம்பரிய பிரச்சனை போன்றவை சில. இருப்பினும், உயர் இரத்த அழுத்தத்தின் வெளிப்பாடுகள் மிகவும் அபாயகரமானவை, சில நேரம் இறப்பைக் குறி வைக்கும் நோய்களையும் ஏற்படுத்துகிறது. இதய நோய்க்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உயர் இரத்த அழுத்த நிலை பரிந்துரைக்கப்படுகிறது என்று சில ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. ஆகவே சரியான தீர்வுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த பிரச்சனையில் இருந்து எளிதாக விடுபட முடியும். உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மைக் கொண்ட முருங்கை விதைகள் இந்த பிரச்சனைக்கு சிறந்த ஒரு தீர்வாக அறியப்படுகிறது. இதனால் ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஆரோக்கியமும் அதிகரிக்கிறது.

2. நீரிழிவு காலத்தில் உதவுகிறது :
உயர் இரத்த அழுத்தம் போலவே பலபேரை பாதிக்கும் மற்றொரு உடல் நிலை கோளாறு, நீரிழிவு. உலகம் முழுவதும் பல லட்சம் மக்கள் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலகையே அச்சுறுத்தும் ஒரு மோசமான நோயாக இந்த நோய் வளர்ச்சி கண்டு வருகிறது. நீரிழிவு நோய்க்கு பல்வேறு செயற்கை மருந்துகள் கண்டுபிடிக்கபட்டாலும், உடலின் சர்க்கரை அளவைக் கட்டுபாட்டில் வைக்க உதவும் சில இயற்கை தீர்வுகள் அவசியம் தேவை. இரத்தத்தில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும் ஒரு பொருளைத் தேர்ந்தெடுப்பதால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க முடியும். முருங்கை விதைகள் இந்த தேவையை பூர்த்தி செய்ய உதவுகின்றன. இவற்றில் மிக அதிக அளவு ஜின்க் இருப்பதால் இன்சுலின் ஹார்மோன் இரத்தத்தில் சுரக்க இந்த விதைகள் சிறந்த முறையில் உதவுகின்றன.

3. எடை குறைப்பில் உதவுகிறது:
உடல் எடை குறைப்பில் முருங்கை விதைகள் நல்ல பலன் அளிப்பதாக சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. எனவே, தங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்புவோர், முருங்கை விதைகளை தவறாமல் எடுத்துக் கொள்ளலாம். இதற்குக் காரணம், இந்த விதைகளில் இருக்கும் நார்ச்சத்து சாப்பிடும் போது ஒரு வித திருப்தியைத் தருவதால் மீண்டும் பசி எடுக்கும் உணர்வு கட்டுப்படுகிறது, மேலும் செரிமானத்திற்கும் இது சிறந்த முறையில் உதவுகிறது. கூடுதலாக, முருங்கை விதைகளில் காணப்படும் ஓலிக் அமிலம், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை எரிக்க உதவுகின்றன. இதய நோய் தாக்கத்திற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது கொலஸ்ட்ரால்.

4. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது:
இறப்பைக் குறி வைக்கும் பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராடும் அளவிற்கு மனிதனின் நோயெதிர்ப்பு மண்டலம் சக்தி மிகுந்து, சிறந்த செயல்பாட்டுடன் இருப்பது அவசியம். ஒருவேளை ஒரு நபரின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருந்தால், எளிதில் அவன் உடல் கிருமிகளின் தாக்கத்திற்கு பலியாக நேரலாம். முருங்கை விதைகளில் அதிக அளவு வைட்டமின் சி சத்து உள்ளது. உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் கூறுகளுடன் போராடி அவற்றை வெளியில் தள்ளும் குணம், வைடமின் சி சத்துக்கு உண்டு. 

5. தலை முடி ஆரோக்கியம்:
முருங்கை விதைகளில் உள்ள அன்டி ஆக்சிடென்ட் பண்புகள், தலை முடியை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றன. மேலும் பல்வேறு நன்மைகளை இவை கூந்தல் வளர்ச்சிக்கு அளிக்கின்றன.