புதினாவை பற்றி உங்களுக்கு தெரியாத 10 நன்மைகள்

மூலிகை இலைகளில் பொதுவாக எல்லோராலும் அறியப் படுவது புதினா இலைகள். சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படும் இந்த இலைகள் பல்வேறு ஆரோக்கியத்தை உள்ளடக்கியது. அவற்றை பற்றி அறிந்து கொள்ள இந்த தொகுப்பை தொடர்ந்து படியுங்கள்.

புதினாவை பற்றி உங்களுக்கு தெரியாத 10 நன்மைகள்

புதினா இலைகள் , இந்திய துணை கண்டத்தில் பழங்காலம் முதல் பயன்படுத்தப்படும் ஒரு வகை மருத்துவ குணம் கொண்ட உணவு பொருள். சமயலறையில் இதனை நாம் அதிகம் கண்டிருப்போம். எலுமிச்சை டீயுடன் சிலர் இதனை சேர்த்து பருகுவர். துவையல், ஜூஸ், சாலட், சூப் போன்றவற்றில் இதனை பெரும்பாலும் பயன்படுத்துவர். இதன் நறுமணம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.

பற்பசை, சூயங் கம் போன்றவற்றில் புதினாவின் சாறை பயன்படுத்துகின்றனர். இதற்கு காரணம் புதினா ஒரு கிருமிநாசினி.

இவற்றை தாண்டி, புதினாவின் ஆரோக்கிய நன்மைகள் பல உண்டு. நமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வாய் துர்  நாற்றத்தை களைகிறது, இன்னும் பல...

புதினா, ஆசிய மற்றும் ஐரோப்பிய துணை கண்டத்தில் பெருமளவு பயிர் செய்யப் படுகிறது. மத்திய கிழக்கின் சில பகுதிகளிலும், இவை காணப்படுகின்றன. புத்தனா புதிதாக பறித்த இலை  வடிவத்திலும், காய்ந்த இலைகளாகவும், எண்ணெய் வடிவிலும் அதிகமாக பயன்படுத்தபடுகின்றன. ஒவ்வொரு விதமாக பயன்படுத்தும் புதினாவில் பல்வேறு  நன்மைகள் இருக்கின்றன.

புதினாவின் ஆரோக்கிய பலன்களை தவிர்த்து, இது ஒரு அதி சிறந்த கொசு விரட்டியாகும், பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது. இப்படி நமக்கு தெரியாத எவ்வளவோ நல்ல பலன்களை பெற்ற புதினாவை பற்றி தொடர்ந்து காண்போம்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:
புதினாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இதனால் புதினா நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நாம் தினமும் சாப்பிடும் உணவில் சிறிதளவு புதினாவை சேர்த்துக் கொள்வது நமது உடல் நலத்தை அதிகரிக்கும்.

துர்நாற்றத்தை எதிர்த்து செயல்படுகிறது:
புதினாவிற்கு கிருமிகளை எதிர்த்து போராடும் தன்மை உண்டு. இது அனைவரும் அறிந்ததே. புதினா இலைகளை வெறும் வாயில் மென்று விழுங்கும் போது, அவை வாயில் உள்ள கிருமிகளை எதிர்த்து போராடுகிறது. வாய் நறுமணத்துடன் இருக்க பெரிதும் உதவுகிறது.

அஜீரணத்தை குறைக்கிறது:
அஜீரணத்தால் அவஸ்தை படும்போது, புதினா ஒரு சிறந்த தீர்வாகிறது. புதினாவை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது , செரிமானத்தை வலுப்படுத்தும் என்சைம்களை ஊக்குவிக்கிறது. உமிழ்நீர் சுரப்பியை அதிகரிக்கிறது. இதனால் செரிமானம் விரைந்து நடக்கிறது. அஜீரணம் குறைகிறது. ஒரு கைப்பிடி புதினாவை எடுத்து ஒரு கிளாஸ் நீரில் 5 நிமிடம் ஊறவைத்து , அந்த நீரை தொடர்ந்து பருகி வர, அஜீரணம் மட்டுப்படுகிறது.

குமட்டல் மற்றும் தலைவலி குறைகிறது:
புதினா, அழற்சியை குறைக்கும் தன்மை கொண்ட ஒரு உணவு பொருள். ஆகவே தலைவலி அதிகமாகும் போது, சிறிதளவு புதினா எண்ணெய்யை நெற்றில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யும் போது தலைவலியும் அதனால் உண்டாகும் குமட்டலும் கட்டுப்படும். 

சுவாச கோளாறுகளை தடுக்கிறது:
நுரையீரலில் சுவாசம் தொடர்பான தொந்தரவுகளுக்கு புதினா இலைகள்  சிறந்த தீர்வாக அமைகின்றன. புதினாவில் ரோச்மரினிக் அமிலம் உள்ளது. இந்த அமிலம், சுவாச மண்டலத்தில் தீங்கு விளைவிக்கும் கூறுகளை தடுக்கிறது. மேலும், சுவாச மண்டலத்தை பாதிக்கும், அழற்சி ரசாயனனகளை தடுக்கின்றன. இதனால் சுவாச பிரச்சனை சீராகிறது. ஆகவே, சுவாச கோளாறுகள் உள்ளவர்கள், உங்கள் தினசரி உணவில் புதினாவை இணைத்துக் கொள்ளலாம். விரைவில் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.

எடை குறைப்பில் உதவுகிறது:
புதினாவில் கலோரிகள் மிகவும் குறைவு. நார்சத்து மிகவும் அதிகம். புதினா, செரிமான என்சைம்களை தூண்டி, உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை உறிஞ்சுகின்றன, கொழுப்பை எரித்து ஆற்றலாக மாற்ற உதவுகின்றன. ஆகவே, எடை குறைப்பில் ஆர்வம் உள்ளவர்கள், உங்கள் உணவு பட்டியலில், புதினாவையும் சேர்த்துக் கொள்வதால் விரைவில் எடை குறையும். 

புற்று நோயை தடுக்க உதவுகிறது :
புதினாவில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இதில் அண்டி ஆக்சிடென்ட் தன்மை அதிகமாக உள்ளது. இந்த தன்மை, உடலில் தீங்கு விளைவிக்கும் கூறுகளை அழிக்க உதவுகிறது. இந்த கூறுகள், புற்று நோயை உண்டாக்கும் ஒரு காரணியாகும். ஆகவே, புதினாவை கட்டாயம் உணவில் இணைப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும் .

கண் ஆரோக்கியத்திற்கு நல்லது :
புதினாவில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. பீட்டா கரோடின் அதிகமாக உள்ளது. ஆகவே, புதினாவை அதிகமாக உட்கொள்வதால், கண் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. ஆகவே, புதினாவை, ஜூஸ் அல்லது சாலட், போன்ற வடிவத்தில் அதிகம் உட்கொள்வது நல்லது.

சோர்வை குறைக்கிறது :
மிகவும் சோர்வாக அல்லது தளர்ச்சியாக காணப்படும்போது , புதினா எண்ணெய்யை சிறிதளவு எடுத்து நெற்றில் தேய்ப்பதால் உடலில் இருக்கும் நரம்புகள் புத்துணர்ச்சி அடைகின்றன. இதனால் உடல் தளர்ச்சி நீங்கி உற்சாகம் பிறக்கிறது. இரவில் உறங்க செல்வதற்கு முன், தலையணையில் சில துளிகள் இந்த எண்ணெய்யை தடவ, நீண்ட ஆழமான தூக்கம் கிடைக்கும். முயற்சித்துப் பாருங்கள்.

தசைபிடிப்பை குணமாக்க உதவுகிறது :
தசை பிடிப்பு அல்லது தசைகளில் உண்டாகும் வலிகளை குறைக்க, புதினா எண்ணெய்யை சிறிதளவு வலி உள்ள இடத்தில் தடவ, விரைவில் வலி குறையும். புதினாவில் இயற்கையாகவே வலி நிவாரண தன்மை உள்ளது. ஆகவே, இதனை தசைகளில் தடவும்போது, தசைகள் இளகி, வலி குறைகிறது.