உங்கள் முதலீட்டிற்கு ஏன் அவசியம் நாமினி தேவை?

நாமினி என்பவர் யார்?

உங்கள் முதலீட்டிற்கு ஏன் அவசியம் நாமினி தேவை?

ஒவ்வொரு முறையும் முதலீட்டிற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும்போது , அது நிலையான வைப்பு நிதியாக இருந்தாலும், மியுசுவல் நிதியாக இருந்தாலும், வங்கியில் புதிய கணக்கு துவங்குவதாக இருந்தாலும் அந்த படிவத்தில் ஒரு தனி பிரிவு ஒன்று இருக்கும். அதில் உங்கள் நாமினி பற்றிய குறிப்பை தருமாறு வேண்டியிருப்பார்கள். இந்த பகுதியை பெரும்பாலும் பலர் எதுவும் எழுதாமல் காலியாவே பதிவு செய்வார்கள். ஆனால் அதனை அப்படி செய்வது தவறு. இது குறித்து தெளிவு ஏற்படுத்துவதற்காகத்தான் இந்த பதிவு.

நாமினி என்பவர் யார்?
நாமினி என்று உங்கள் முதலீட்டு விண்ணப்பம், அல்லது வங்கி கணக்கு விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் நபர், உங்களின் எதிர்பாராத மறைவிற்கு பிறகு உங்கள் கணக்கில் உள்ள தொகையை பெறுவதற்கான உரிமை உள்ளவர். நாமினியாக உங்கள் முதல்வட்ட சொந்தத்தை நீங்கள் அறிவிக்கலாம். அதாவது உங்கள் பெற்றோர், உங்கள் துணைவர், அல்லது உங்கள் உடன்பிறந்தவர்கள். சில முதலீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாமினியை குறிப்பிடும்படி அனுமதிக்கப்பட்டிருக்கும். அந்த நேரத்தில் ஒவ்வொரு நபருக்கும் உங்கள் தொகையில் குறிப்பிட்ட விகிதத்தை பிரித்து பதிவு செய்யலாம். அப்படி நீங்கள் எந்த விகிதமும் குறிப்பிடாமல் இருந்தால் உங்கள் கணக்கில் உள்ள தொகை சமமாக பிரிக்கப்படும்.

ஏன் ஒருவரை நியமிக்கவேண்டும்?
எதிர்பாராத விதமாக இறந்தவரின் வங்கி கணக்கில் மற்றும் முதலீட்டில் இருக்கும் பணம் அவருடைய சட்ட வாரிசுகளுக்கு உரிமையாகிறது. இதனை சொல்வதற்கு மிகவும் சுலபமாக இருந்தாலும் செயல்முறையில் இது மிகப்பெரிய காரியமாக உள்ளது. பல வித ஆவணங்கள் , இறப்பு சான்றிதழ் சில நேரங்களில் நீதிமன்ற ஆர்டர் போன்றவையும் தேவைப்படுகிறது. வங்கிக்கு தேவையான ஆவணங்கள் கிடைக்கும் வரை, இறந்தவரின் பணம் வங்கியிலேயே வைக்கப்படும். இந்த முழு செயல்முறையும் முடிய சில வாரங்கள் பிடிக்கும். இருப்பினும், வங்கி கணக்கு தொடங்கும்போது அல்லது அதற்கு பின்னர், உங்கள் பெயர் நாமினியாக இணைக்கப்பட்டிருந்தால் இந்த செயல்முறை சற்று எளிதாகவும் விரைவாகவும் முடியும். வங்கியும் நியமிக்கப்பட்டவரிடம் குறைந்த ஆவணங்கள்  மூலம் பணத்தை கொடுத்துவிடலாம். 

வங்கி லாக்கருக்கும் நாமினி உண்டு :
வங்கி கணக்கு மற்றும் வைப்பு நிதிகளுக்கு மட்டும் எதிர்பாராத படி இறந்தவருக்கான நாமினி தேவைப்படுவதில்லை, வங்கி லாக்கருக்கும் நாமினி தேவை. லாக்கர் கணக்கு வைத்திருப்பவரின் திடீர் மறைவிற்குப் பின், நாமினி இல்லையேல்,  குறிப்பிட்ட ஆவணங்கள் கொடுத்த பிறகே, லாக்கரில் உள்ள பணம் மற்றும் நகைகளை வங்கியில் இருந்து ஒப்படைப்பார்கள். இதனை இங்கே குறிப்பிடக்  காரணம், இந்திய பெண்கள் தங்கள் நகைகளை வங்கி லாக்கரில் வைப்பது வழக்கம். ஆகவே இத்தகைய நெருக்கடியான சூழலில், நகைகளுக்கான தேவை அதிகமாக இருக்கும். புதிதாக மணமானவர்கள் அல்லது கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு பேங்க் லாக்கர் கணக்கிற்கும் நாமினி அவசியம் தேவை.

பணத்தை வங்கியிடம் கோரப்படாமல் இருக்க கூடாது:

இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரியில் தந்த அறிக்கை பிரகாரம், ரூபாய் 8,000 கோடி கோரப்படாத நிதியாக நாடு முழுவதும் உள்ள வங்கியில்  உள்ளதாக தெரிவிக்கிறது. உரிமையாளர் இல்லாத வைப்பு நிதி, கோரப்படாத நிதியாக அறிவிக்கப்படுகிறது. அசல் உரிமையாளர் வைப்பு நிதியின் விவரத்தை இழந்திருக்கலாம், அல்லது இறந்திருக்கலாம் அல்லது நாமினி பற்றிய தகவலை குறிப்பிடாமல் இருக்கலாம். இதன் காரணமாக இந்த நிதி கோரப்படாத நிதியாக உள்ளது. நாமினி பெயர் குறிப்பிடாமல் இருப்பதால் எவ்வளவு பிரச்சனை என்பதை இந்த மாபெரும் தொகை நமக்கு தெரியப்படுத்துகிறது. ஒரு முறை வங்கிக்கு சென்று உங்கள் கணக்கில் நாமினி பெயர் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளுங்கள். அப்படி நீங்கள் குறிப்பிடவில்லை என்றால் அதற்கான படிவத்தை வாங்கி விண்ணப்பியுங்கள். 

பெண்கள் இந்த பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்படுவார்கள். குடும்ப உறுப்பினரின் திடீர் மறைவால் அவர்கள் கஷ்டப்ப்படும்போது அவர்களின் பணமும் பறிபோவது நிச்சயம் நடக்கக் கூடாத ஒன்று. இத்தகைய சூழ்நிலையை யாரும் அனுமதிக்கக் கூடாது. நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்கில் நாமினியாக நியமிக்கப்படுள்ளீர்கள் அல்லது உங்களுக்கு ஒரு நாமினி உள்ளார் என்பதை உங்கள் வீட்டு பெண்களுக்கு தெரியப்படுத்துங்கள். இதனால் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். வருங்காலத்தில் ஏற்படும் நிச்சயமற்ற சூழலை சமாளிக்க ஒரு தன்னம்பிக்கை ஏற்படும்.