உங்கள் பிள்ளைகள் பிரச்சனையில் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்

இன்றைய நவீன உலகத்தில் ஒரு குழந்தையை எப்படி நல்ல விதத்தில் வளர்ப்பது என்பது குறித்த ஆயிரம் ஆயிரம் கேள்விகள் மற்றும் யோசனைகள் பெற்றோருக்கு இருந்துக் கொண்டே இருக்கிறது. இதன் தொடர்பாக பல விவாதங்கள் நடந்தவண்ணம் உள்ளன.

உங்கள் பிள்ளைகள் பிரச்சனையில் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்

ஒவ்வொரு பெற்றோருக்கும் குழந்தை வளர்ப்பு என்பது ஒரு சவாலான செயலாக இருந்து வருகிறது.  பிள்ளையை இப்படி வளர்க்கலாம், அப்படி வளர்க்கலாம் என்று பல அறிவுரைகள் பெற்றோரின் காதுகளை நோக்கி வந்தபடி இருக்கின்றன. குழந்தையை அன்பாக வழிநடத்துங்கள் என்று பலரும் ஒரு பக்கம் கூறினாலும், அன்பு மட்டும் அதிகமாகும் ேளையில் குழந்தைகளுக்கு நாளடைவில் பெற்றோர் நம்மை திட்டமாட்டார்கள் என்ற மனநிலை உண்டாகி தவறான பாதைக்கு செல்லும் நிலையும் உண்டாகிறது. அடக்குமுறையைக் காட்டினாலும், குழந்தைகள் பயஉணர்வு பெற்று தன்னம்பிக்கை குறைந்தவர்களாக வளரும் நிலை உண்டாகிறது. இப்படி இருக்க, குழந்தைகளை எப்படி வளர்ப்பது?

பெற்றோராக, குழந்தையின் நடத்தையை கண்காணிக்கும் விதமாக அவர்களின் தினசரி செயல்பாடுகளில் நம் கவனம் இருப்பது முக்கியம். இதனை பின்பற்றுவதால், அவர்களின் பாதையை நம்மால் தெரிந்து கொள்ள முடியும். குழந்தை தவறு செய்தால் தண்டனைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தால் பிரச்சனை இன்னும் சிக்கலாகக் கூடும். ஆகவே தவறு செய்வதன் காரணத்தை அறிந்து பிரச்சனையைத் தீர்ப்பதன் மூலம் குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக இருக்கலாம்.

குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டிய சில அடையாளங்கள் உள்ளன. உங்கள் பிள்ளைகள் வழி மாறி செல்வதற்கான சில அறிகுறிகள் தென்பட்டால் அதற்கான சரியான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் அவர்களை மீண்டும் சரியான பாதைக்கு இட்டுச் செல்ல முடியும். 

மதிப்பெண் குறைவது:
உங்கள் குழந்தை பொதுவாக நன்றாகப் படிக்கும் பிள்ளையாக இருக்கும்பட்சத்தில் , திடீரென்று அவருடைய மதிப்பெண் குறையும்போது, எங்கோ தவறு நடப்பதை உங்களால் அறிந்து கொள்ள முடியும். கற்பதில் தளர்ச்சி, சோம்பேறித்தனம், கவனக் குறைபாடு , சமூகம் அல்லது வீட்டில் உள்ள பிரச்சனை போன்றவை இந்த நிகழ்வுக்கு காரணமாக இருக்கலாம். அல்லது மனச்சோர்வின் அறிகுறியாகவும் இருக்கலாம். மதிப்பெண் குறைந்ததற்காக பிள்ளைகளை தண்டிப்பதை விட அதன் காரணத்தை அறிந்து கொள்வது நல்லது. மேலும் அதிக மதிப்பெண் பெறவேண்டும் என்ற உங்கள் எதிர்பார்ப்பை பிள்ளைகள் மேல் சுமத்தாமல் இருப்பதும் நல்லது.

மனநிலையில் மாற்றம் :
வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் ஒவ்வொருவருக்கும் மனநிலையில் மாற்றம் ஏற்படும். ஏற்ற இறக்கமுள்ள ஹார்மோன் மாற்றம் கொண்ட பதின் பருவத்தினருக்கு இந்த மனநிலை மாற்றம் அதிகமாக இருக்கும். இந்த மாற்றம் அதிகரித்த அளவு காணப்படும்போது அல்லது, உங்கள் பிள்ளை நன்னிலை உணர்விலிருந்து மிக விரைவாக எந்த ஒரு காரணமும் இன்றி மனச்சோர்வு அடையும்போது அந்த நிலையை உடனடியாக சமநிலை படுத்த வேண்டும். பிள்ளைகளுடன் ஒத்துணர்வுடன் அமைதியாக பழகுங்கள். அந்த நேரம் உங்கள் பிள்ளைகள் அனுபவிக்கும் நிலையை உண்மையாக உங்களிடம் பகிர்ந்துக் கொள்ளும் சூழலை அவர்களுக்கு உருவாக்குங்கள்.

மறைக்கும் சுபாவம்:
உங்கள் பிள்ளைகள் உங்களிடம் ஏதாவது ஒன்றை மறைப்பதை நீங்கள் உணர்ந்தால், அந்த சூழ்நிலையில் அது மிகப் பெரிய விஷயமாக இல்லாதபோதும், இந்த நடத்தை அவர்கள் மேல் சந்தேகத்தை உருவாக்கும். அவர்கள் ஒரு ரகசியத்தன்மையை உருவாக்குகின்றனர் என்பதிலிருந்து அவர்கள் கெட்ட நடத்தையைக் கைக்கொள்கின்றனர் அல்லது உங்களை நம்புவதில்லை என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இவை இரண்டுமே ஆபத்திற்கான அறிகுறிகள் என்பதையும், பெற்றோர் பிள்ளைக்கான தொடர்பு இந்த நிலையில் ஆபத்தை எட்டுகிறது என்பதையும் புரிந்து கொள்வது அவசியம்.

நண்பர்களில் திடீர் மாற்றம்:
புதிய நண்பர்கள் சேர்க்கை என்பது நல்ல விஷயம் தான். ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரு நண்பர் குழுவிடம் இருந்து முற்றிலும் விலகி மற்றொரு புதிய குழுவிற்கு மாறுவது ஒரு அச்சத்தைக் கொடுக்கக் கூடிய செயலாகும். புதிய நண்பர் குழுவில் உங்கள் பிள்ளை இணையக் காரணம் என்ன, என்ன விஷயம் அவர்கள் குழுவில் இவரை ஈர்த்தது என்பதைக் கண்டுபிடிப்பது மிக முக்கியமாகும். பழைய நண்பர்களிடம் இருந்து விலகக் காரணம் என்ன என்பதைக் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும். நண்பர்கள் மற்றும் உறவுகள் ஆகியவற்றை நிர்வகிப்பது ஒரு சிக்கலான விஷயம். ஆகவே இளம் பிள்ளைகள் ஒரு ஆரோக்கியமான உறவைத் தொடர பெற்றோரின் ஆலோசனை மிகவும் முக்கியம். பெற்றோர் சரியான  பாதையை நோக்கி பிள்ளைகளை இயக்குவதால் ஆரோக்கியமான உறவுகள் மேம்படும். ஆகவே ஓர் ஆலோசகராக உங்கள் பிள்ளைகளின் நட்பு வட்டம் குறித்த விழிப்புணர்வு பெற்றோராகிய உங்களுக்கு அவசியம் தேவை . மேலும் உங்கள் பிள்ளைகளிடம் அதிக செல்வாக்கு பெற்றவர்கள் குறித்தும் உங்களுக்குத் தெரிந்திருப்பது அவசியம். 

குணநலன்களில் மாற்றம்:
பூப்பெய்தல் பருவத்தில் பிள்ளைகளின் குணநலன்களில் மாற்றம் நிச்சயம் ஏற்படும். ஆனால் அதனை பெற்றோர் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். அமைதியாக இருக்கும் பிள்ளை கலகலப்பாக மாறுவதும், கலகலப்பாக இருக்கும் பிள்ளை அமைதியாக  மாறுவதும் ஒரு எதிர்மறை மாற்றத்தின் காரணமாகவும் இருக்கலாம். நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் என்பது தெரிந்து அந்த காரியத்தை அவர்கள் செய்ய முயற்சிக்கலாம் அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கலாம். அந்த சூழ்நிலையை கவனமாக கையாள வேண்டும். அவர்களை சுற்றி மாறும் உலகைப் பற்றி அவர்களிடம் மென்மையாக கேள்வி எழுப்புங்கள். நீங்கள் அந்த வயதில் இருந்தபோது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்கள் தனி ஆள் அல்ல என்பதை அவர்களுக்கு உணர்த்த முயற்சியுங்கள். உங்கள் பிள்ளையின் பலம், பலவீனம் ஆகியவற்றைக் குறித்த விழிப்புணர்ச்சியை அவர்களுக்கு உருவாக்குங்கள். இவற்றுடன் சேர்த்து அவர்களின் எல்லையையும் அவர்களுக்கு உணர்த்துங்கள். உங்கள் பிள்ளைகளுடன் முடிந்த அளவிற்கு நல்ல தொடர்பில் இருங்கள். வீடு என்பது அவர்களுக்கு பாதுகாப்பான இடம் என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள். வாழ்க்கையில் இந்த நிலையில் தடம் மாறுவது வாழ்க்கையை சீர்குலைக்கும் என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். அவர்களின் நம்பிக்கை மற்றும் அன்பை வெற்றி கொள்ள முயற்சியுங்கள். பெற்றோராகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நன்மை மட்டுமே செய்வீர்கள் என்பது அவர்களுக்கு புரிய வேண்டும். பிள்ளைகள் சமூக ஊடகத்தை முற்றிலும் சார்ந்திருப்பதை விலக்குங்கள். அந்த நேரத்தில் ஆரோக்கியமான பொழுதுபோக்குகளை அவர்களுக்குக் கற்றுத் தாருங்கள். உண்மையான உலகில் உள்ள சவால்களை சிறந்த முறையில் நிர்வகிக்க அவர்களுக்குச் சொல்லிக் கொடுங்கள்.