சாம்பார் சாப்பிட வாருங்கள்!

தென்னிந்திய உணவு வகைகளில் குறிப்பிட்டு  சொல்ல கூடிய உணவில் சாம்பார் முக்கிய இடம் பிடிக்கிறது.

சாம்பார் சாப்பிட வாருங்கள்!

வெளிநாட்டவர்களிடம் கேட்கும்போது  அவர்களுக்கு பிடித்த தென்னிந்திய உணவில் நிச்சயம்  சாம்பாரும் இடம்பிடித்திருக்கும். அந்த அளவுக்கு உலக மக்கள் அனைவரையும் கவரும் சுவையும் நிறமும் கொண்டது இந்த உணவு. 

சாம்பார் ஒரு அருமையான குறைந்த கலோரி கூட்டமைப்பில் உருவான உணவாகும். பல்வகை ஊட்டச்சத்துகளும் ஒருங்கிணைந்த ஒரு உட்கொள்ளல் தான் இந்த சாம்பார். தென்னிந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு  சுற்றுலா பயணிகளின் முதல் விருப்பமான உணவு இட்லி-சாம்பார் ஆகும்.

கலர் காம்பினேஷன் :
நமது முன்னோர்களின்  அழகு, ரசனை, ஆரோக்கிய சிந்தனை ஆகியவற்றின் சிறப்பிற்கு  இந்த உணவு ஒரு  எடுத்துக்காட்டு. மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற திரவத்தில்  ஆங்காங்கே பச்சை காய்கறிகளும், கொத்துமல்லியும்,சிவப்பு தக்காளியும், சிவப்பு காய்ந்த மிளகாயும் கலந்த ஒரு காம்பினேஷன்  , பார்க்கும் போதே கண்களுக்கு ஒரு விருந்தாக அமையும்.  எளிமையான சமையல் முதல் விருந்து உபசாரங்கள் வரை சாம்பார் இடம்பிடித்திருக்கும். 

ஊட்டச்சத்துகள் கலவை:
சாம்பார் என்பது  சீரகம் மஞ்சள்,கடுகு,வெந்தயம் ,மிளகாய், தனியா போன்ற மசாலா பொருட்களுடன்,பருப்பு மற்றும் காய்கறிகளின் கலவையால் உருவாவது. ஊட்டச்சத்துகளின் ஒரு மொத்த கலவையாக இது பார்க்கப்படுகிறது.

இதில் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது மற்றும் ஒவ்வொன்றின்  நன்மைகளும் ஏராளம் . இதில்சேர்க்கப்படும் முக்கிய பொருளான பருப்பில் புரத சத்து அதிகமாக இருக்கிறது. காய்கறிகள் அதிகமான நார்ச்சத்து கொண்டவை. இவற்றிற்கு தாளிப்பாக ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்ப்பது கொழுப்பு சத்துக்காக. இப்படி ஒரு நாளில் நமக்கு தேவையான எல்லா ஊட்டச்சத்துகளும் ஒரு உணவில் கிடைப்பது நமக்கு ஒரு வரமாகும். தனித்தனியாக தேடி சென்று எதையும் உண்ணாமல் தினமும் சாம்பார் சாப்பிடுவதால் நமக்கு பல நன்மைகள் உண்டாகின்றன.

பேச்சுலர்களின் உணவு:
பொதுவாக தென்னிந்தியாவில் துவரம் பருப்பை கொண்டு சாம்பார் செய்வர். ஆனால் இதில் எந்த பருப்பை வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம். இட்லி, தோசை,சப்பாத்தி,  சாதம் இப்படி எதை வேண்டுமானாலும் சாம்பாருடன்  சேர்த்து உண்ணலாம். 

மிக எளிதாக செய்யக்கூடியது என்பதால்  இதை பேச்சுலர்களின் உணவு என்றும் அழைப்பார்கள். 

எடை குறைப்பு:
இது ஒரு குறைந்த  கலோரி உணவு என்பதால் எடை குறைப்பு செய்ய  விரும்புவோர் கூட இதை அவர்கள் மெனுவில் சேர்த்து கொள்ளலாம். நல்ல சுவையான உணவை உண்டு உங்கள் எடையை நீங்கள் குறைக்கலாம்.  

குழந்தைகள் ஆரோக்கியம்:
குழந்தைகளுக்கு இது மிக சிறந்த உணவு. சாம்பார் செய்ய பயன்படும் பருப்பு நீரை எடுத்து 7 மாத குழந்தைக்கு கூட ஒரு சிட்டிகை மிளகு தூள் சேர்த்து பருக கொடுக்கலாம்.. பெரும்பாலும் குழந்தைகளின் முதல்  திட உணவு பருப்பு சாதமாகத்தான் இருக்கும். இந்த சாம்பாருடன் நெய் கலந்து குழந்தைக்கு கொடுக்கும் போது குழந்தை போஷாக்குடன் வளரும். 

மற்றும் குழந்தைகள் காய் கறிகளை சாப்பிட மறுக்கும் போது அவற்றை சாம்பாரில் வேகவைத்து மசித்து கலந்து கொடுத்தால் அவற்றின் சக்தி குழந்தைகளுக்கு முழுமையாக கிடைக்கும். 

சில வகை கீரைகளை கூட சாம்பாரில் சேர்த்து சாப்பிடலாம். இதில்  நார்ச்சத்து கிடைக்கிறது. இதனால் குடல்  இயக்கங்கள் சரியாக பராமரிக்கப்படுகின்றன.

பெருங்காயம்:
சிலர் சாம்பாரில் போடப்படும் பருப்பு வாய்வு  தொல்லையை ஏற்படுத்தும் என்று அச்சம் கொள்கின்றனர். இதற்கு உண்டான தீர்வை நமது முன்னோர்கள் செய்திருக்கிறார்கள். அது தான் பெருங்காயம். நாம் பருப்பு வேகவைக்கும்போதே சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து வேக வைக்கும் போது பருப்பினால் உண்டாகும் வாய்வு தொல்லை கட்டு படுத்தப்படுகிறது.

ஊட்டச்சத்து அளவு:
1/2 கப்  சாம்பாரில் 154 கலோரிகள் உள்ளன. கார்போஹைட்ரெட்ஸ் 28கிராம் உள்ளன. புரதம் 7 கிராம் உள்ளன. சோடியம் 7மிகி  உள்ளது. 

சாம்பார் பொடி:
பல ஊர்களில் பல வகையான சாம்பார் கிடைக்கும். இந்த சுவை அதில் சேர்க்கப்படும் மசாலா பொருட்களின் வித்தியாசத்தில் மாறுபடுகிறது. வித விதமான சாம்பார் பொடிகளை கடையில் வாங்குவதை விட  சாம்பார் பொடி  செய்வது எப்படி என்று தெரிந்து கொண்டு வீட்டிலேயே அதை செய்து சாம்பாரில் போடும் போது அதன் சுவை இன்னும் அதிகமாக இருக்கும். ஆரோக்கியமானதாகவும் இருக்கும். 

நமது பாரம்பரிய சமையலில் ஒன்றான சாம்பாரை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.