அறிமுகமாகிறது ஸ்மார்ட் பேண்டேஜ்

அறிமுகமாகிறது ஸ்மார்ட் பேண்டேஜ்

நமது உடலில் சிறு காயங்கள் படும்போது, அதில் தோற்று  ஏற்படாமல் பாதுகாக்க  நாம் பேண்டேஜ் பயன்படுத்துவோம். இதனால் விரைவில் காயம் குணமாகும். தற்போது நடத்தப்பட்டு வரும் ஒரு ஆராய்ச்சியில் ஸ்மார்ட் பேண்டேஜ்  என்ற ஒரு புதிய பேண்டேஜை கண்டுபிடித்திருக்கிறார்கள். இது துரிதமான முறையில் காயங்களை ஆற்றுவதாக கூறப்படுகிறது. இதனை பற்றி இப்போது பார்க்கலாம்.

இந்த ஆய்வை நடத்துவது - யுனிவர்சிட்டி ஆப் நெப்ராஸ்கா - லிஙகன் , ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூல் . இவர்கள் வடிவமைத்த பாண்டேஜ் நாட்பட்ட காயங்கள் மற்றும் போர்க்களத்தில் ஏற்படும் காயங்களை முழுதும் குணப்படுத்தும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பேண்டேஜ் , ஜெல் கொண்டு பூசப்பட்ட , மின்சாரம் கடத்தும் இழைகளால் உண்டாக்கப்பட்டவை. இவற்றில் தொற்றுக்களை நீக்கும் ஆன்டி-பையோட்டிக்கள் , திசுக்களை மறு உற்பத்தி செய்யும் கூறுகள், வலி நிவாரணிகள் மற்றும் மருந்துகள் தனித்தனியாக இடம்பெற்றுள்ளன. 
 
அஞ்சலக ஸ்டாம்பை விட சிறிய அளவு மைக்ரோ கண்ட்ரோலர் ஒன்று  இதில் வைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் அல்லது வயர்லெஸ் சாதனம் வழியாக இந்த மைக்ரோ கண்ட்ரோலர் தேர்ந்தெடுக்கப்பட்ட இழைகள் மூலம் ஒரு சிறிய அளவு வோல்ட்டேஜை அனுப்புகிறது. இந்த வோல்ட்டேஜ் இழைகளையம் ஜெல்லையும் சூடாக்கி அவற்றில் உள்ள மருந்துகளை வெளியாக்குகிறது. ஒரே பேண்டேஜில் ஒரு குறிப்பிட்ட காயத்திற்கான பல மருந்துகளை செலுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனால்  மருந்து கொடுக்கப்பட வேண்டிய அளவு மற்றும் நேரத்தை கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறுகின்றனர்.

தனி தனி இழைகள் மூலம் செலுத்தப்படும் மருந்து மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் விதம் ஆகியவை இணைந்து  காயத்தை விரைவில் குணப்படுத்துகிறது, அளவு சார்ந்து மருந்து வெளியிடும் முதல் பேண்டேஜ் இது தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பல்வேறு மருந்துகளை வெவ்வேறு வெளியேறும் தன்மை கொண்டு நீங்கள் உள்ளே செலுத்தலாம். இதுவே இந்த பேண்டேஜின் மிக பெரிய நன்மையாகும். 

இந்த கண்டுபிடிப்பு பயோ மெடிக்கல் எஞ்சினீரிங் மற்றும் மருத்துவ துறையின் பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு ஒரு அடித்தளமாக பார்க்கப்படுகிறது. போரில் புல்லட் தாக்கப்பட்டு ஏற்படும் காயம், அல்லது கூர்மையான ஆயுதத்தால் ஏற்படும் காயம் என்று எந்த ஒரு காயத்தையும் குணப்படுத்தும் செயலாக்கம் இந்த பேண்டேஜிக்கு உண்டு. உடலில் தொற்று ஏற்படுவதையும் இது தடுக்கிறது.

இவற்றில் உள்ள சாதகங்களை என்னதான் ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும் இது இன்னும் பல கட்ட சோதனைகளை கடக்க வேண்டும். விலங்குகளுக்கும் மனிதர்களுக்கு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்பு, நேர்மறை முடிவுகள்  வெளியான பின்புதான் சந்தைகளில்  கிடைக்க தொடங்கும். இதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும். 

இதற்கிடையில் இந்த பேண்ட்ஜில், நூல் சார்ந்த சென்சார்கள் மூலம் க்ளுகோஸ், pH மற்றும் சரும ஆரோக்கியம் சம்மந்தமான குறியீடுகளை பரிசோதிக்கவும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்பது ஒரு நல்ல செய்தியாகும். இவற்றையும் இந்த பேண்டேஜில் இணைப்பதன் மூலம் பல விதமான சிகிச்சைகளை தனிச்சையாக கொடுக்க இயலும்.

வாழ்க விஞ்ஞானம் ! வளர்க இன்னும் பல நல்ல கண்டுபிடிப்புகள்!