இருளில் ஒரு ஒளி

மனித நேயமிக்க மனிதர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதால் தான் இவ்வுலகம் அழிந்து போகாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இருளில் ஒரு ஒளி

இருளில் ஒரு ஒளி 

இறைவன் நமக்குள்ளே இருக்கிறான் என்பது நமது மனிதநேய பண்பையே குறிக்கிறது. மனிதநேயம் இல்லா மனிதன் மனிதனே அல்ல என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார். இந்த உலகில் உள்ள ஒவ்வொரு மதமும் மனிதநேயம் என்பது மனித வாழ்க்கையின் ஒரு அங்கமாகும் என்று நமக்குச் சொல்லித்தருகின்றது. மனிதநேயம் பற்றிய இக்கட்டுரை அதன் அர்த்தத்தையும், முக்கியத்துவத்தையும் எடுத்துச் சொல்லும்.

மனிதநேயத்தின் அர்த்தம்

மனிதநேயம் என்பது மனிதர்களை மட்டுமல்ல, சுற்றுச்சூழலையும் மற்ற எந்த உயிராக இருந்தாலும் கஷ்டப்படும் போது எந்த பலனும் எதிர் பார்க்காமல் உதவி செய்வதே மனிதநேயம் என பொருள்படும். அந்த காலத்தில் தான் மனிதர்கள் மனிதநேயத்துடன் இருந்தார்கள் என்றும் இப்போது மனிதநேயம் செத்துவிட்டது என்று கூறுபவருக்கு நான் சொல்கிறேன் மனிதநேயம் சாகவில்லை இன்றும் பல மனிதநேயம் மிக்கவர்கள் நம்மிடையேயும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கு உதாரணமாக கஜா புயல் மற்றும் வர்தா புயலின் கோரதாண்டவம் ஏற்படுத்தி பாதிப்பின் போது தங்களால் இயன்ற உதவியை செய்த தன்னார்வலர்களை தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். மனித நேயம் மட்டும்தான் இதுநாள் வரை நிலைத்து நிற்கிறது என்பதற்கு இதுவே சான்றாகும். திருவள்ளுவர் மனிதநேயத்தை பற்றி எழுதிய குறள்.

பண்புடையார் பட்டுண்டு உலகம் அதுவின்றேல்

மண்புக்கு மாய்வது மன் 

மனித நேயமிக்க மனிதர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதால் தான் இவ்வுலகம் அழிந்து போகாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார். 

இருளில் ஒரு ஒளி 

ஒளி வடிவான இறைவன் எப்படி நம் வாழ்க்கைக்கு வெளிச்சம் தருகிறாரோ அதே போன்று தான் மனிதநேயம்(ஒளி) மிக்கவர்கள் மற்றவர்களின் வாழ்க்கைக்கு வெளிச்சத்தை தருகிறார்கள். அதனால் தான் மனிதநேயம் என்பது இருளில் ஒரு ஒளி போன்றது என்று குறிப்பிட்டேன். எந்தத் தொடர்பும் இல்லாதவரின் துன்பத்தைப் பார்க்கும்போது இரக்கப்படுவது, ஒவ்வொருவரும் அவர்களால் இயன்ற உதவிகளை செய்வது, மற்றவர்களைப் புரிந்துகொண்டு அவர்களின் பிரச்சினைகளை நம் கண்ணோட்டத்தில் உணர்ந்து அவர்களுக்கு உதவ முயற்சி செய்வது போன்றவை மனித நேய செயல் ஆகும். உலகத்தில் தொழில்நுட்பமும், முதலாளித்துவமும் வேகமாக வளர்ந்து வருவதால் நாம் மனிதநேயத்தை கடைப்பிடிக்கும் போது தான் கொடிய நோய் பரவல், புவி வெப்பமடைதல், யுத்தம், இயற்கை அழிவு, பிற உயிரினங்கள் அழிவு போன்ற பல பெரிய பிரச்சனைகளை சமாளிக்க முடியும். நாம் அனைவரும் மனிதநேயத்தோடு ஒன்றிணைந்து இவ்வுலகத்தை காப்போம்.