சிறுவர் வன்கொடுமை

சிறுவர் வன்கொடுமை காரணமாக ஒவ்வொரு நாளும் 5 சிறுவர்கள் இறக்கின்றனர் - அலட்சியம் இதற்கு ஒரு காரணமா?

சிறுவர் வன்கொடுமை

சிறு பிள்ளைகளை வன்கொடுமை செய்வதால் அந்த  நிகழ்வு குறித்த தாக்கம் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அவர்களை பாதிக்கிறது. சிறுவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களில் 90% சிறுவர்கள் ஏதோ ஒரு வழியில் குற்றவாளியை அடையாளம் கண்டு கொள்கின்றனர். 68% சிறுவர்களை அவர்களின் குடும்ப உறுப்பினர்களே வன்கொடுமை செய்கின்றனர் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த நிலை தற்போது அதிகரித்துக் கொன்டே வருகிறது. இது நல்லதா? 

நாம் சிறுவர்களாக இருந்த நாட்களை நினைவில் கொண்டு வாருங்கள். நமது அன்பான உறவினர்களை நினைத்து பாருங்கள். நமது உறவினர் ஒருவரின் கையைப் பற்றிக் கொண்டு நாம் நடந்திருப்போம். நமது உறவினர் ஒருவர் நமது உடையை சீராக உடுத்த உதவியிருப்பார். இது எவ்வளவு சாதாரணமான சூழ்நிலை. ஆனால் தற்போது இந்த சாதாரண சூழல் இருக்கிறதா? தற்போது பல குழந்தைகள் வாழ்வு அசாதாரணமாக மாறிவருகிறது. 

சிறார் வன்கொடுமை பற்றி திகிலூட்டும் பல நிஜமான கதைகள் அரங்கேறி வருகின்றன. ஒரு தந்தை, தாத்தா, மாமா , பக்கத்து வீட்டில் வசிப்பவர் என்று யாராவது ஒருவர் தன்னுடைய இச்சையை திருப்தி படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு குழந்தையின் வாழ்க்கையை பலியாக்குகின்றனர். இந்த விதமான சம்பவங்களை படிக்கும்போதே நமக்கு  மிகுதியான அச்சம் தோன்றுகிறது, அப்படி இருக்கும்போது இந்த நிலையை அனுபவிக்கும் பிள்ளைகள் நிலையை யோசித்துப் பாருங்கள். ஒரு பெற்றோராக, பாதுகாவலராக, நலம்விரும்பியாக நீங்கள் அவர்களிடம் கவனிக்க வேண்டிய சில அறிகுறிகள் உள்ளன. பிள்ளைகளுக்கு ஏற்படும் ஒவ்வொரு காயம் பற்றியும் அவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும். அவர்களின் கண்ணீருக்கான காரணத்தை அறிய முற்பட வேண்டும். அவர்களுக்கு பரிசுகளை அளிப்பதைவிட அவர்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். வன்கொடுமை என்பது பல்வேறு வகையில் நடந்து வருகிறது - பாலியல் ரீதியாக, உணர்ச்சி ரீதியாக , உடல்ரீதியாக, மருத்துவ ரீதியாக மற்றும் அலட்சியம் காட்டுவது  போன்றவை அதன் சில வகைகளாகும்    

வன்கொடுமை எந்த விதத்திலும் இருக்கலாம்:

உடல் ரீதியான அறிகுறிகள் இல்லாதபோதும் வன்கொடுமையை பிள்ளைகள் அனுபவிக்கலாம். உடல் ரீதியான வன்கொடுமை என்பது ஒரு வகை மட்டுமே. மற்ற  வகை வன்கொடுமைகளும் இதே அளவிற்கு அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தி, சிறுவர்களின் மனநலத்தை பாதிக்கிறது. தேவை உள்ள குடும்பங்களில் மட்டுமே இந்த பாதிப்பு நடைபெற்று வருகிறது என்றும், பணக்கார வீடுகளில் சிறுவர்கள் வன்கொடுமைக்கு ஆளாவதில்லை என்ற ஒரு கதை இருந்து வருகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு சரியானது ? குற்றவாளிகள் தங்களுக்கு தேவையான இரை எங்கு உள்ளது என்பதையும் அதனை எவ்வாறு அடைய வேண்டும் என்பதையும் நன்கு அறிந்திருக்கிறார்கள். சிறுவர் வன்கொடுமை செய்பவர்களில் பெரும்பாலானோர் குடும்ப உறுப்பினர்கள் என்றும் அவர்கள் புதியவர்கள் இல்லை என்பதை அறியும்போது மனம் இன்னும் அதிகம் வேதனை அடைகிறது.

உங்கள் குழந்தைகளை மிகுந்த பாதுகாப்போடு பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். அவர்களின் அந்த ஒரு அறிகுறியையும் புறக்கணிக்க வேண்டாம். நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில அறிகுறிகளை இப்போது பார்க்கலாம்

உணர்ச்சி ரீதியான வன்கொடுமையை உணர்த்தும் எச்சரிக்கை அறிகுறிகள்:

  • பெற்றோர், பாதுகாவலர் அல்லது பராமரிப்பாளருடன் எந்த ஒட்டுதலும் இல்லாமல் இருப்பது. 
  • தவறு செய்வது குறித்து குழந்தை அச்சம் கொள்வது, அடிக்கடி பதட்ட கோளாறால் பாதிக்கப்படுவது 
  • குணநலனில் மாற்றம் உண்டாவது
  • சிறுவர்கள் தங்கள் வயதிற்கு மீறி நடந்து கொள்வது அதாவது மற்ற குழந்தைகளை பராரிப்பது போன்ற நடத்தையில் ஈடுபடுவது, அல்லது சிறு பிள்ளை போல் நடந்து கொள்வது அதாவது விரல் சப்புவது, அடம்பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது.

உடல் ரீதியான வன்கொடுமையை உணர்த்தும் எச்சரிக்கை அறிகுறிகள்:

  • அடிக்கடி குழந்தைக்கு காயம் ஏற்படுவது, விவரிக்க முடியாத காயம் அல்லது வெட்டுக்கள் தென்படுவது
  • பிள்ளை எப்போதும் எந்த ஒரு அபாயமும் ஏற்படக்கூடும் என்ற உணர்வில் எந்நேரமும் விழிப்புணர்ச்சியுடன் இருப்பது.
  • பெல்ட் அல்லது கையால் அடித்த அடையாளம் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பின் குழந்தையின் உடலில் காணப்படலாம்.
  • பொருத்தமில்லாத ஆடை கொண்டு குழந்தை அந்த காயங்களை மூடி மறைக்கலாம்.
  • யாரவது தொடும்போது அல்லது எல்லா நேரத்திலும் ஒருவித பயத்துடன் காணப்படுவது. 

குழந்தை அலட்சியப்படுத்தப்படுகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்:

  • குழந்தையின் ஆடை அழுக்காக இருக்கலாம், மிகவும் தளர்ந்து அல்லது மிகவும் இறுக்கமாக , பருவநிலைக்கு பொருத்தமில்லாத ஆடையை உடுத்தியிருக்கலாம்.
  • சுகாதாரம் குறித்த ஒரு விழிப்புணர்ச்சி இல்லாமல் இருக்கலாம்.
  • குழந்தைக்கு உண்டான காயம் கவனிக்கப்படாமல் இருக்கலாம்.
  • பாதுகாப்பற்ற சூழலில், எப்போதும் தனித்து விடப்பட்ட நிலையில் இருக்கலாம்.
  • பள்ளியில் குழந்தையில் வருகை பதிவேட்டு நிலை மோசமாக இருக்கலாம்.

பாலியல் ரீதியான வன்கொடுமையை உணர்த்தும் எச்சரிக்கை அறிகுறிகள்:

  • குழந்தை சரியான நிலையில் உட்கார முடியாமல் அல்லது நிற்க முடியாமல் இருக்கலாம்.
  • குழந்தையின் வயதிற்கு சற்றும் பொருத்தமில்லாத பாலியல் அறிவு இருக்கலாம்.
  • ஒரு குறிப்பிட்ட நபரை எந்த ஒரு குறிப்பிட்ட காரணமும் இல்லாமல் தவிர்க்க முயற்சிக்கலாம்.
  • மற்றவர்கள் முன்னிலையில் உடை மாற்ற அதிகம் வெட்கப்படலாம் அல்லது இதர உடல் செய்லபாடுகளை மேற்கொள்ள கூச்சப்படலாம்.
  • பால்வினை நோய், கர்ப்பம் போன்ற அறிகுறிகள் குறிப்பாக 14 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு உண்டாகலாம்.
  • வீட்டை விட்டுவெளியேறும் எண்ணம் தோன்றலாம்.

சிறுவர் வன்கொடுமை என்பது உண்மையாக நடந்து வரும் சம்பவமாகும். இவற்றைப் பற்றிய உண்மைகள்  புள்ளிவிவரங்களில்  காட்டப்படுவதைவிட மிகக்கொடுமையானதாக உள்ளது. பெண் பிள்ளைகள் மட்டுமல்ல ஆண் பிள்ளைகளும் வன்கொடுமைக்கு சரிசமமாக ஆளாகின்றனர். அவர்கள் நிலை இன்னும் கொடுமையானது. அவர்கள் இது குறித்து வெளியில் பேசுவதில்லை. வன்கொடுமைக்கு ஆளானவர்கள் ஒன்று இது சரியானது என்று அதே நிலையை அவர்கள் வளர்ந்த பின் மற்றவர்களிடம் கடைபிடிக்கின்றனர். அல்லது அவர்களுக்கு நடந்தது கொடுமை என்று உணர்ந்தவர்கள் தங்கள் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு மனநல பாதிப்பிற்கு ஆளாகின்றனர் அல்லது வேறு உடல் கோளாறுகளுக்கு ஆட்படுகின்றனர். எது எப்படி இருந்தாலும், நீங்கள் சிறுவயதில் வன்கொடுமைக்கு ஆளாகி இருந்தால் உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தாமல் வெளிப்படுத்துங்கள். உங்கள் வயது என்னவாக இருந்தாலும், நீங்கள் சரியான விதத்தில் இந்த பாதிப்பை கையாண்டு அதில் இருந்து சரியான முறையில் வெளிப்பட வேண்டும்.

பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் குழந்தை வன்கொடுமைக்கு ஆளாகி இருந்தால், உங்கள் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். உணர்வு ரீதியாக உங்கள் குழந்தையுடன் தொடர்பில் இருங்கள். வன்கொடுமை என்பது இறுதி முடிவு அல்ல. உங்கள் பிள்ளைக்கு இந்த அறிகுறிகள் தென்பட்டால் நீங்கள் எவ்வாறு உங்கள் குழந்தையை அணுகலாம்? உங்கள் குழந்தையை எல்லா விஷயத்திலும் கவனித்து பாருங்கள். மிக இளம் வயதில், குழந்தைகள் அலட்சியப்படுத்தப்பட்டால் அது அவர்கள் வாழ்நாள் முழுவதையும் பாதிக்கும். உங்கள் குழந்தைக்கு முதல் நண்பனாக நீங்கள் இருங்கள். ஒரு குழந்தையிடம் அசாதாரண அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், அதனை பற்றி அவர்களிடம் கேளுங்கள். இதனால் நீங்கள் அவர்களுக்கு உதவ முடியும்.