வீட்டில் குழந்தைகளை படிப்பதற்கு அமர வைப்பதற்கான வழிகள்

பின்வரும் வழிகளைப் பின்பற்றி குழந்தைகளை படிக்க வரச்சொல்லுங்கள்.

வீட்டில் குழந்தைகளை படிப்பதற்கு அமர வைப்பதற்கான வழிகள்

எல்லாமே டிஜிட்டல் மயமாகி வரும் இந்த காலகட்டத்தில், குழந்தைகள்  கைகளில் எந்நேரமும் மொபைல் போன் அல்லது டேப்லெட் இருக்கிறது. மொபைல் கேம், கார்ட்டூன் நிகழ்ச்சிகள் என்று குழந்தைகள் அவர்களுக்குப் பிடித்தமானவற்றை மொபைல் போன் அல்லது தொலைக்காட்சி அல்லது டேப்லெட்டில் பார்த்தபடி பொழுதை கழிக்கின்றனர். பள்ளிக்கு சென்று வந்தவுடன் தங்களுடைய மொத்த நேரத்தையும் இந்த பொழுதுபோக்கில் கழிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். இதற்கிடையில் பெற்றோர் அவர்களை படிக்க அழைக்கும்போது அவர்கள் படிக்க மறுத்து அடம்பிடிக்கின்றனர். உங்கள் குழந்தையும் படிக்க மறுத்து விளையாட்டில் கவனம் செலுத்தும் ஒரு குழந்தையா? அவர்களுக்கு படிப்பில் ஈடுபாட்டை  உண்டாக்க இதோ சில வழிகள்..

வெறுமனே பிள்ளைகளை படிக்க வாருங்கள் என்று கூறினால் அதற்கு ஏதோ ஒரு காரணம் கூறி சமாளித்து படிக்க வருவதற்கு மறுத்துவிடுவார்கள். அல்லது பிடிவாதமாக படிக்க மாட்டேன் என்று கூறுவார்கள். எனவே அவர்களிடம் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும்.

பரிசளியுங்கள் :

பிள்ளைகள் படிப்பதற்கு அமர்ந்தால் அவர்களுக்கு ஏதாவது ஒரு பொருளை பரிசாக கொடுங்கள். இது லஞ்சம் என்று அவர்கள் நினைக்கக்கூடாது. மேலும் குழந்தைகள் மிகவும் விரும்பி உண்ணும் சாக்லேட் , கேண்டி , குக்கி போன்றவற்றையும் பரிசாக கொடுக்க வேண்டாம். அர்த்தமுள்ள பரிசாக அவர்கள், பயன்படுத்தக்கூடிய பொருளாக பரிசளியுங்கள். என்றாவது ஒருநாள் அவர்களுக்கு பிடித்த சாக்லேட் அலல்து ஐஸ்க்ரீம் போன்றவற்றை கொடுங்கள். அவ்வப்போது சில கார்ட்டூன் வரைபடம், கலர் பேணா , கலர் பென்சில் போன்ற உபயோகம் உள்ள பொருட்களை அவர்களுக்குப் பரிசளியுங்கள். இது அவர்களை ஊக்கப்படுத்தும். இளம் வயதில் ஊக்குவிப்பதால் அவர்களின் கல்விநலன் மேம்படும். அதன் பிறகு படிக்கும் நேரம் அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

படிப்பதை விளையாட்டாக எடுத்துச் செல்லுங்கள்:

குழந்தைகளுக்கு போர் அடிக்காமல் சொல்லிக் கொடுங்கள். சீரியஸ் நிலையில் அவர்கள் படிப்பதை விரும்ப மாட்டார்கள். விளையாட்டாக பாடம் கற்பிக்க முயற்சி செய்யுங்கள். பொழுபோக்குடன் அவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்க புதிய உத்திகளை கண்டிபிடியுங்கள். தற்போது ஈ-லேர்னிங் வழிமுறை மிகவும் பிரபலமாக வளர்ந்து வருகிறது. இதற்கு காரணம் அவர்கள் வித்தியாசமான முறையில் மிகவும் வேடிக்கையான முறையில் பாடங்களை கற்பிக்கும் வழிகளை பின்பற்றுகின்றனர். இதே வழியை நீங்கள் பின்பற்றுவதால் உங்கள் குழந்தைகளை எளிதாக பாடம் கற்றுக் கொள்ள அமர வைக்க முடியும். போயம் என்னும் கவிதை தொகுப்புகளை கற்பிக்கும் போது இசையுடன் கற்பிப்பதால் அல்லது அதற்கான பொருட்கள் கொண்டு கற்பிப்பதால் எளிதில் பிள்ளைகள் மனதில் பதிய வைக்க முடியும். குழந்தைகளுக்கு எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் இருப்பதால் விஷுவல் லேர்னிங் என்னும் பார்வை முறை கல்வி என்பது நல்ல பலனைத் தரும்.

ஒவ்வொரு சரியான விடைக்கும் பரிசு கொடுங்கள் :

கற்பிப்பதில் மட்டுமே ஆர்வம் கொண்ட ஒரு கடுமையான ஆசிரியராக இருக்க பெற்றோர் முயற்சிக்க வேண்டாம். பிள்ளைகளை கூலாக கையாளுங்கள். அவர்களின் முயற்சியை பாராட்டி சரியான விடைகள் அவர்கள் உரைக்கும் போது அவர்களுக்கு பரிசு கொடுங்கள். இதனால் அவர்கள் நேர்மறை அறிகுறிகளை உணர்ந்து, உங்களுக்கு அவர்களுக்குமான புரிதல் அதிகரிக்கும். அவர்களின் முயற்சிகள் பாராட்டப்படுகிறது என்ற எண்ணம் அவர்களின் முயற்சியை இன்னும் தீவிரப்படுத்தும். பெற்றோரே பிள்ளைகளுக்கு ஒரு சிறந்த ஆசிரியர் ஆவார் என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளை  ஊக்கப்படுத்துங்கள்.

கேள்விகள் கேட்பது மற்றும் சந்தேகங்கள் எழுப்புவதற்கு ஊக்கப்படுத்துங்கள்:

பிள்ளைகள் அவர்களுடைய சந்தேகத்தை மனதிற்குள் வைத்துக் கொள்ளாமல் அவ்வப்போது அவற்றை வெளிப்படுத்தி தீர்வு காண அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள். கேள்வி கேட்பதை அவமானமாக நினைக்கக்கூடாது, மனதில் தோன்றும் எந்த கேள்வியையும் கேட்கும் திறனை வளர்த்து கொள்ள வேண்டும் என்று பிள்ளைகளுக்கு புரிய வையுங்கள். இதன் மூலம் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது.

தினமும் படிக்க வையுங்கள் :

படிப்பது என்பது ஒரு சிறந்த பழக்கம். அதனை ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும். பாட புத்தகங்கள் தவிர குழந்தைகள் அவர்களுக்கு விருப்பமான பல்வேறு கதை புத்தகம், காமிக்ஸ் புத்தகம், போன்றவற்றை படிக்க பெற்றோர்கள் அறிவுறுத்தலாம். இதனால் அவர்களின் கற்பனைத் திறன் அதிகரிக்கும். மூளை இயக்கம் அதிகரிக்கும். படிக்கும் திறன் அதிகரிப்பதால் பாடம் படிப்பது எளிமையாகிவிடும்.