வழுக்கை தலைக்கு சிறந்த மூலிகை சிகிச்சை 

இந்த பதிவில் மூலிகை மற்றும் வீட்டில் இருக்கும் பொருட்கள் மூலம் தலை முடி வழுக்கையைப் போக்க சிறந்த தீர்வுகள் சிலவற்றை நாம் தற்போது காணலாம்

வழுக்கை தலைக்கு சிறந்த மூலிகை சிகிச்சை 

மருத்துவ மொழியில் அலோபிசயா என்பது வழுக்கையை குறிக்கும் ஒரு சொல் என்பது பலரும் அறிந்ததாகும். எந்த மொழியில் கூறினாலும் நடு மண்டையில் தீவிரமான முடி இழப்பால் உண்டாகும் வழுக்கையை விரும்புபவர் யாரும் இந்த உலகில் இல்லை. வழுக்கை என்பது பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக உண்டாகும் ஒரு பாதிப்பு ஆகும். வழுக்கையைப் பற்றி கவலைப் படாதவராக நீங்கள் இருந்தால் உங்களை விட அதிர்ஷ்டசாலி மற்றும் சந்தோஷமான மனிதன் வேறு யாரும் இருக்க முடியாது. உண்மையில் வழுக்கை என்பது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய கொடிய பாதிப்பு இல்லை. வழுக்கை தலையுடன் மிகவும் சந்தோஷமாக வாழும் மனிதர்களும் இந்த உலகில் இருக்கவே செய்கிறார்கள். சிலர் மிக இளம் வயதிலேயே வழுக்கை தலையை பெறுகின்றனர். ஆனால் சிறிதாக முடி உதிர்வதற்கும் கவலைப் படக் கூடிய ஆணாக நீங்கள் இருந்தால் நிச்சயம் வழுக்கை என்பது உங்கள் வாழ்க்கையில் பெரிய பாதிப்பை உண்டாக்கும். ஆகவே உடனடியாக அதனை சரி செய்து மீண்டும் முடி வளர்ச்சியைப் பெறுவதால் உங்கள் சந்தோசம் மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும். விலையுயர்ந்த பல்வேறு சிகிச்சைகள் வழுக்கையைப் போக்க தற்போது பெருகி வருகின்றன. ஆனால் மிகவும் எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்கள் மூலம் வழுக்கையை அகற்றும் வழிகள் இருக்கும் போது இந்த விலையுயர்ந்த சிகிச்சைக்கு பணம் செலவழிப்பதைத் தவிர்க்கலாம்.. இவற்றில் உங்கள் விருப்பத்திற்கேற்ற முறையை தேர்வு செய்து நீங்கள் முயற்ச்சித்து வழுக்கை நீங்கி முடி வளார்ச்சி பெறலாம்.

தலை முடி வழுக்கையைப் போக்க சில எளிய வீட்டுத் தீர்வுகள் 

1. ஆலிவ் எண்ணெய் :
மிகவும் பழைய சிகிச்சை தான் என்றாலும் சிறப்பான சிகிச்சையாக கருதப்படுவது ஆலிவ் எண்ணெய் சிகிச்சை. 

முடி இழப்பு தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கும் , வழுக்கை உட்பட எல்லாவற்றுக்கும் ஆலிவ் எண்ணெய் சிறப்பான தீர்வைத் தருகிறது. கீழே கூறப்பட்டுள்ள முறையில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து இந்த சிகிச்சையை நீங்கள் தொடரலாம்.

I. ஆலிவ் எண்ணெய் ஹேர் பேக் :

தேவையான பொருட்கள்:
ஆலிவ் எண்ணெய் - உங்கள் முடியின் நீளத்திற்கேற்ப, குறைந்த முடிக்கு குறைவான அளவு, நீளமான முடிக்கு அதிக அளவு 
தேன் - ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன்
லவங்கப் பட்டைத் தூள் - ஒரு ஸ்பூன்

செய்முறை:
ஆலிவ் எண்ணெய்யை சூடாக்கிக் கொள்ளவும்.
அதில் தேன் மற்றும் லவங்கப் பட்டைத் தூள் சேர்த்து கலக்கவும்.
இதனை உங்கள் உச்சந்தலை மற்றும் முடியில் தடவவும்.
பிறகு 15-20 நிமிடங்கள் அப்படியே ஊற விடவும்.
அதன் பிறகு மென்மையான ஷாம்பூவால் தலையை அலசவும்.
வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இதனை செய்து வரவும்.

II. ஆலிவ் எண்ணெய் மற்றும் சீரகம் :
தேவையான பொருட்கள்:
ஆலிவ் எண்ணெய் - அரை கப்
சீரகம் - ஒரு ஸ்பூன்

செய்முறை:
ஆலிவ் எண்ணெய்யை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து கலக்கவும்.
இந்த கலவையை 10-15 நிமிடங்கள் அப்படி வைக்கவும்.
15 நிமிடத்திற்கு பிறகு, இந்த எண்ணெய்யை வழுக்கை உள்ள இடத்தில் தடவி மென்மையாக 10 நிமிடம் மசாஜ் செய்யவும்.

சீரகம் சேர்க்கப்பட்ட இந்த எண்ணெய்யை ஒரு பாட்டிலில் ஊற்றி  தினமும் தடவி வருவதால் விரைந்து நல்ல பலன் கிடைக்கும்.

III. ஆலிவ் எண்ணெய் இரவு சிகிச்சை :
தினமும் இரவில் ஆலிவ் எண்ணெய்யை தலையில் தடவி இரவு முழுவதும் அப்படியே விடவும். எண்ணெய்யை தலையில் தடவியவுடன் மென்மையாக மசாஜ் செய்யவும். அதுவே போதுமானது. மறுநாள் காலை எழுந்தவுடன் தலைக்கு குளிக்கவும். தலையில் எண்ணெய் தடவி படுக்கும் முன் தலையணைக்கு மேல் ஒரு துண்டை வைத்துக் கொண்டு படுப்பதால் தலையணையில் எண்ணெய் இறங்காமல் இருக்கும். 

2. வெந்தயம் :
அருமையான முடி வளர்ச்சிக்கு ஆரோக்கியமான வெந்தயம் !

நீண்ட காலமாக தலை முடி வழுக்கைக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஒரு மூலப்பொருள் வெந்தயம். முடி உதிர்தல் தொடர்பான பிரச்னைக்கு வெந்தயத்தை இரண்டு வழிகளில் பயன்படுத்தலாம்.

I. வெந்தயம் பேஸ்ட்: 
ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் வெந்தயம் எடுத்துக் கொள்ளவும்.
இதனை அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.
இந்த விழுதை வழுக்கை உள்ள இடத்தில் தடவி வரவும்.
ஒரு மணி நேரம் அப்படியே இந்த விழுதை தலையில் ஊற வைக்கவும்.
பிறகு தண்ணீரால் கழுவி விடவும்.
ஒரு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இதனைச் செய்து வரவும்.

II. தேங்காய் எண்ணெயில் வெந்தயம் :

தேவையான பொருட்கள்:
வெந்தயம்  - ஒரு ஸ்பூன் 
தேங்காய் எண்ணெய் - உங்கள் தலைமுடிக்கு ஏற்ப 

செய்முறை :
தேங்காய் எண்ணெய்யை சூடாக்கிக் கொள்ளவும்.
வெந்தயத்தை அதில் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
கோடைக் காலம் என்றால் அதனை முழுவதும் ஆற வைக்கவும். அல்லது சிறிது சூடாக இருக்கும் போதே அதனை எடுத்துக் வடிகட்டிக் கொள்ளவும். மழைக் காலங்களில் அல்லது குளிர் காலங்களில் தேங்காய் எண்ணெய் கட்டியாக மாறி விடும்.
வடிகட்டிய இந்த எண்ணெய்யை உங்கள் உச்சந்தலை மற்றும் முடியில் மென்மையாக மசாஜ் செய்யவும்.
சுழல் வடிவத்தில் வேர்கால்களில் எண்ணெய் நன்றாக இறங்கும்படி மசாஜ் செய்யவும்.
அரை மணி நேரம் அப்படி எண்ணெய் உங்கள் தலையில் ஊறட்டும்.
பிறகு மென்மையான ஷம்பூவால் தலையை அலசவும்.

வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தலைக்கு குளிப்பதற்கு முன் இந்த மசாஜ் செய்து கொள்வதால் நல்ல பலன் கிடைக்கும்.


3. மருதாணி:
மருதாணி மூலம் ஆரோக்கியமான முடி வளர்ச்சி !

முடியை கண்டிஷன் செய்ய பல ஆண்டுகளாக மருதாணி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை கடுகு எண்ணெயுடன் சேர்த்து உபயோகிப்பதால் வழுக்கை மறைகிறது.

தேவையான பொருட்கள்:
மருதாணி இலைகள் - 100 கிராம்
கடுகு எண்ணெய் - 250 கிராம்

செய்முறை:
கடுகு எண்ணெய்யை சூடாக்கி கொதிக்க வைக்கவும்.
இதில் மருதாணி இலைகளைப் போட்டு சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பின்பு நன்றாக ஆற விடவும்.
இந்த எண்ணெய்யை வடிகட்டி ஒரு காற்று புகாத பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.
தினமும் இந்த எண்ணெய் கொண்டு உங்கள் தலைக்கு மென்மையாக மசாஜ் செய்யவும்.

4. வெங்காயம்:
சாதாரண வெங்காயத்தாள் மிகப் பெரிய அற்புதம் !
நரை முடிக்கு சிறந்த தீர்வாகக் கருதப்படும் வெங்காயம் வழுக்கைக்கும் சிறந்த தீர்வைத் தருவதாக அறியப்படுகிறது. வெங்காய சாறு உச்சந்தலை மற்றும் முடியின் வேர்க்கால்களை சுத்தீகரிப்பதோடு மட்டுமில்லாமல், கேடலேஸ் என்னும் ஒரு இயற்கை அன்டி ஆக்சிடென்ட் கூறின் உற்பத்தி காரணமாக அடர்த்தியான வேர்க்கால்களை உற்பத்தி செய்யும் திறன் ஊக்குவிக்கப்படுவதாக பல ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெங்காயம் மூலம் முடி வளர்ச்சி பெறவும் வழுக்கையைப் போக்கவும் சில வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன/ 

I. வெங்காய சாறு தயாரிப்பது எப்படி ?
வெங்காயத்தின் தோலை உரித்துக் கொள்ளவும்.
வெங்காயத்தின் உள்ளே இருக்கும் சிவப்பு பகுதியில் இருந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
அந்த சாற்றை நன்றாக வடிகட்டிக் கொள்ளவும். துணி அல்லது வடிகட்டி மூலம் சாற்றை வடிகட்டிக் கொள்ளலாம்.
இந்த சுத்தமான சாற்றை தினமும் உங்கள் உச்சந்தலையில் தடவி வரவும்.
இந்த சாற்றைத் தடவி பத்து நிமிடங்கள் மென்மையாக உச்சந்தலையை மசாஜ் செய்யவும்.
பின்பு தண்ணீரால் தலையை அலசவும்.
பச்சை வெங்காயத்தின் வாசனையால் தலையில் ஒரு வித நாற்றம் உண்டாகலாம்.
அதனால் மென்மையான ஷாம்பூ கொண்டு தலையை அலசவும்.

II. தேன் மற்றும் வெங்காயம் :
வெங்காயத்துடன் தேன் சேர்த்து கலந்து தடவுவதால் வழுக்கை மறைகிறது. வடிகட்டி வைத்த வெங்காய சாற்றுடன் தேன் சேர்த்து கலந்து வழுக்கை இருக்கும் இடத்தில் தடவவும். வெங்காய சாறு தடவ வேண்டாம் என்று நினைப்பவர்கள் வெங்காயத்தை பாதியாக நறுக்கி அதனை அப்படி உங்கள் வழுக்கையில் வைத்து தேய்க்கலாம். வெங்காயத்தைக் கொண்டு தேய்த்தவுடன், அந்த இடத்தில் தேனைத் தடவலாம். பின்பு தண்ணீரால் தலையை அலசலாம்.

5. எலுமிச்சை விதைகள் மற்றும் மிளகு :

உச்சந்தலையில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் வழுக்கை உண்டான இடத்தில் முடி வளர்ச்சி ஏற்படலாம். மிளகு மற்றும் எலுமிச்சை விதைகள் இந்த வேலையைச் சிறப்பாக செய்ய முடியும். இதற்கு உங்களுக்கு தேவை,

தேவையான பொருட்கள்:
7 எலுமிச்சை பழத்தின் விதைகள்
10 மிளகு

செய்முறை:
எலுமிச்சை விதைகள் மற்றும் மிளகு ஆகிய இரண்டையும் சேர்த்து நசுக்கிக் கொள்ளவும்.
இந்த பொடியை உங்கள் வழுக்கையில் தடவவும்.
10-15 நிமிடங்கள் அப்படியே விடவும்.
இந்த கலவை மிகவும் வறண்டு இருந்தால் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கலாம். 
இதனைத் தடவுவதால் சிறிது எரிச்சல் உண்டாகலாம். ஆனால் தொடர்ந்து இதனை பயன்படுத்தவும். இந்த முயற்சியை நிறுத்த வேண்டாம். 
விரைந்த மற்றும் சிறந்த தீர்வுகளுக்கு, ஒரு நாளில் இரண்டு முறை என்று சில வாரங்களுக்கு தொடர்ந்து செய்து வரலாம்.


6. குளிர்ந்த கற்பூர எண்ணெய் :
மன அழுத்தம் மற்றும் பதட்டம் காரணமாக முடி உதிர்வு ஏற்பட்டால், வழுக்கை ஏற்பட்ட இடத்தில் கற்பூர எண்ணெய் தடவுவதால் அந்த இடத்தில் முடி வளர்ச்சி அதிகரிக்கும். கற்பூரம் ஒரு சிறந்த கிருமி நாசினி, அழற்சி எதிர்ப்பு மற்றும் கிருமி எதிர்ப்பு , பூஞ்சை எதிர்ப்பு ஆகிய பண்புகள் கொண்ட ஒரு மூலப்பொருள். இது இயற்கையான முறையில் உங்கள் அழுத்தத்தைக் குறைத்து, நரம்பு டென்ஷனை தளர்த்தி உங்களை அமைதி படுத்துகிறது.

கற்பூர எண்ணெயைக் கொண்டு தலை முடியில் மசாஜ் செய்வதால் வேர்கால்களில் ஊடுருவி, கூடுதல் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. தலை முடியை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாற்றுவதோடு மட்டுமில்லாமல் மறுமுறை முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் எண்ணெய்(தேங்காய் எண்ணெய்) அல்லது முடிக்கு தடவும் லோஷனுடன்  சிறிதளவு கற்பூர எண்ணெய்யை சேர்த்து கொள்ளலாம். பிறகு தினமும் இந்த எண்ணெய்க் கொண்டு தலைக்கு மசாஜ் செய்து வருவதால் அடுத்த சில வாரங்களில் உங்கள் உச்சந்தலையில் புதிய முடி வளர்ச்சியை உங்களால் காண முடியும். 


வழுக்கையைப் போக்க ஒரு சிறப்பான மூலிகைத் தீர்வு :

வழுக்கையைப் போக்க ஒரு மாற்று சிகிச்சை உள்ளது. இதன் பெயர் பைதோ தெரபி. இதில் சில வகைச் செடிகள் பயன்படுத்தப்பட்டு முடி உதிர்வு மற்றும் வழுக்கையைப் போக்க உதவுகிறது. 

பைதோ தெரபியில் மூன்று வகையான செடிகள் பயன்படுத்தப்படுகின்றன.
1. டெஸ்டோஸ்டிரோனை முடி இழப்பிற்கு காரணமான டிஹைட்ரோதெஸ்டெஸ்டிரோனாக மாற்றி அமைக்கும் என்சைம்களை தடுக்கும் செடிகள்.
2. முடி இழப்பிற்கு மற்றொரு காரணமான மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைத் தடுக்கும் செடிகள்,  
3. ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவும் வைடமின் மற்றும் கனிமங்களை தரும் செடிகள்.

முடி வளர்ச்சிக்கான மாத்திரைகள் அல்லது சாறுகள் தயாரிக்க இந்த வகை செடிகள் பயன்படுத்தப்படுகின்றன. சில வகை செடிகள் சாலட் அலல்து மற்ற உணவு வகைகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. வழுக்கையைப் போக்க உதவும் சில மூலிகைகள் பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.

7. ஸா பல்மேட்டோ 
வட அமெரிக்காவில் காணப்படும் ஸா பல்மேட்டோ முடி இழப்பு மற்றும் பல்வேறு நோய்களுக்கு ஒரு சிறந்த தீர்வாக அமெரிக்கர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மூலிகை,  டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோன் டிஹைட்ரோதெஸ்டெஸ்டிரோனாக மாற உதவும் என்சைமை தடுப்பதாக நம்பப்படுகிறது. இந்த ஹார்மோன் மாற்றம், அன்றோஜெனிக் அலோபிசயா என்னும் உச்சந்தலை வழுக்கைக்கு காரணமாக அமைகிறது.

மருத்துவரிடம் கலந்தாலோசித்து உங்கள் சிகிச்சைக்கு ஏற்ற அளவு ஸா பல்மேட்டோ சாற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். உங்கள் எடைக்கேற்ப இதன் அளவு 160 மிகி முதல் 320 மிகி அளவு வரை மாறும். ஈஸ்ட்ரோஜென் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் ஆகிய இரண்டு ஹார்மோன்களையும் இது மாற்றம் செய்வதால் மார்பக புற்று நோய் உள்ளிட்ட பாதிப்பு கொண்டவர்கள் இதனை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அல்லது மருத்துவ ஆலோசனையின்பேரில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இரத்த அடர்த்தியைக் குறைக்க மருத்துகள் எடுப்பவர்கள், இரத்தம் உறையா நோய் உள்ளவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.

8. செம்பருத்தி :
அதிஅற்புத தீர்வு செம்பருத்தி !

உலகின் பல பகுதிகளில் முடி உதிர்தலைத் தடுக்க ஒரு பாரம்பரிய மருந்தாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மூலிகை செம்பருத்தி. இதனை தேநீராகவும் பருகலாம் அல்லது இதன் இதழ்களைக் காய வைத்து பயன்படுத்தலாம் அல்லது ஒரு சாறு தயாரித்து உச்சந்தலையில் தடவலாம்.

செம்பருத்தி சாறு தயாரிக்க தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய்
கறிவேப்பிலை
செம்பருத்தி பூ 
நெல்லிக்காய்

செய்முறை:

தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை, செம்பருத்தி பூ மற்றும் நெல்லிகாயை கொதிக்க வைக்கவும்.
பின்பு நன்றாக ஆற வைக்கவும்.
அந்த எண்ணெய்யை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
உச்சந்தலையில் இந்த எண்ணெய் மூலம் மென்மையாக மசாஜ் செய்யவும்.
பின்பு அரை மணி நேரம் அப்படி விடவும்.
பின்பு தண்ணீரால் தலையை அலசவும்.
தினமும் இதனை செய்து வருவதால் விரைந்து பலன் கிடைக்கும்.

செம்பருத்தியை நீரில் கொதிக்க வைத்து, அதில் எலுமிச்சை சாறு சேர்த்து அந்த நீரை வடிகட்டி வழுக்கை உள்ள இடத்தில் தடவலாம். சில நிமிடங்கள் அந்த நீர் தலையில் ஊறியவுடன் தலையை அலசலாம்.

என்ன வாசகர்களே! தலை முடி வழுக்கையை எளிய முறைகள் தடுக்கும் தீர்வுகளைப் பற்றி தெரிந்து கொண்டீர்களா? இதனை பற்றிய உங்கள் கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.