அல்லுலோஸ் என்றால் என்ன

அல்லுலோஸ் ஆரோக்கியமானதா? இதனை நமது உணவு பட்டியலில் இணைக்கலாமா இல்லையா என்பதை இந்த தொகுப்பு உங்களுக்கு தெளிவு படுத்தும்.

அல்லுலோஸ் என்றால் என்ன

அல்லுலோஸ் என்பது சர்க்கரைக்கு மாற்றாக சந்தையில் கிடைக்கும் ஒரு இனிப்பு பொருளாகும். பார்ப்பதற்கு சர்க்கரை போன்றே இருக்கும் இது  சர்க்கரையை விட கலோரி மற்றும் கார்போ ஹைட்டிரேட்  குறைந்த  ஒரு உணவு பொருள். சர்க்கரைக்கு மாற்றாக ஒரு உணவு பொருள் என்பதால் இதன் ஆரோக்கிய பலன்களை பற்றி நமக்கு தெரிந்தாக வேண்டும். அதனால் தான் இந்த பதிவை கொடுக்கிறோம். 

அல்லுலோஸ் ஒரு அரிய வகை சர்க்கரை.  மிக குறைந்த  உணவுகளில் மட்டுமே இயற்கையாக இந்த சர்க்கரை உள்ளது. அவை, கோதுமை, அத்திப்பழம் , காய்ந்த திராட்சை போன்றவை.  

க்ளுகோஸ்  மற்றும் பிருக்டோஸ் போல அல்லுலோசும் ஒரு தனிசர்க்கரை தான் . சுகிறோஸ் என்பது க்ளுகோஸ் மற்றும் பிருக்டோஸ் ஒன்றாக இணைந்த இரட்டை சர்க்கரை . நாம் உட்கொள்ளும் அல்லுலோஸ் அளவில் 70-84% செரிமான பாதை வழியாக இரத்தத்துக்குள் உறிஞ்சப்பட்டு , எரிபொருள் ஆகாமலே சிறுநீர் வழியாக வெளியேறுகிறது. இதனை உட்கொள்வதால் இரத்த சர்க்கரை அளவு மற்றும் இன்சுலின் அளவு அதிகரிக்கவில்லை. அதனால் நீரிழிவு  நோயாளிகள் இதனை பயன்படுத்தலாம். நாம் பயன்படுத்தும் வெள்ளை சர்க்கரையை விட 10 மடங்கு குறைந்த கலோரிகளை கொண்டது இந்த அல்லுலோஸ்.

நீரிழிவு  நோய்:
அல்லுலோஸ் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த ஒரு தீர்வாக கருதப்படுகிறது. இன்சுலின் சென்சிட்டிவிட்டியை அதிகரித்து, இரத்த சர்க்கரை அளவை குறைத்து, கணையத்தில் இன்சுலின் உற்பத்தி செய்யும் பீட்டா செல்களை காக்கிறது. இதனால்  டைப் 2 நீரிழிவு நோயின் அபாயம்  குறைகிறது. உணவில் அல்லுலோஸ் எடுத்து கொள்கிறவர்களின்  இரத்த சர்க்கரை அளவை உணவுக்குபின் சோதிக்கும் போது அவர்களின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து காணப்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

கொழுப்பு குறைப்பு:
உடல் பருமன் உள்ளவர்கள் அல்லுலோஸை உட்கொள்ளும் போது கொழுப்பு குறைகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக, வயிற்றில் சேரும் ஆரோக்கியமற்ற கொழுப்பு என்னும் விஸிஸ்ரல் கொழுப்பு(Visceral fat)  குறைக்கப்படுகிறது. இந்த கொழுப்பிற்கும், இதய நோய்க்கும் தொடர்பு இருக்கிறது.

எலிகளை வைத்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் எலிகளுக்கு அதிகமான சர்க்கரை உள்ள உணவுகளுடன் சேர்த்து 5% அல்லுலோசும் கொடுக்கப்பட்டது. வேறு சில எலிகளுக்கு அதிக சர்க்கரை உணவுடன் எரித்ரிட்டால் சேர்த்து கொடுக்கப்பட்டது. ஆய்வின் முடிவில், அல்லுலோஸ் கொடுக்கப்பட்ட எலிகளுக்கு அதிக கலோரிகள் எரிக்கப்பட்டு எடை குறைப்பு ஏற்பட்டதாக குறிப்பிட படுகின்றது. ஆனால் , இந்த சோதனை மனிதர்களுக்கு இன்னும் நடத்த பட வில்லை.

கல்லீரலில் கொழுப்பு படிவத்தை தடுக்கிறது:
எலிகளிடம் நடத்திய ஆய்வில், கல்லீரலில் கொழுப்பு படியும் அபாயத்தை குறைப்பதாக கூறுகின்றனர். ஆனால் மனிதர்களுக்கு இந்த சோதனையை செய்து அதன் முடிவில் தான் தீர்க்கமாக இதனை நம்ப முடியும்.

அல்லுலோஸ் பாதுகாப்பானதா?
அல்லுலோஸ் ஒரு பாதுகாப்பான இனிப்பாகவே பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் Food and Drug Adminstration இந்த உணவை பாதுகாப்பான உணவு என்று அங்கீகரித்துள்ளது. ஆனால் யூரோப் போன்ற நாடுகள் இவற்றை விற்க தடை விதித்துள்ளன.

ஒரு நாளுக்கு 1-3 டீஸ்பூன் அளவு அல்லுலோஸ் 12 வாரங்களுக்கு மனிதர்கள் எடுத்து கொள்ளும் போது எந்த ஒரு எதிர்மறை விளைவுகளும் ஏற்பட வில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மிதமான அளவு பயன்பாடு ஆரோக்கிய கேடுகளை விளைவிக்கவில்லை.

அல்லுலோஸ் பயன்படுத்தலாமா?
சர்க்கரையை போன்ற நிறமும் உருவமும் இருந்தாலும், சர்க்கரையை விட குறைந்த கலோரிகள் உள்ளது இதன் நன்மையாகும். மனிதர்களை உட்படுத்தி சில சோதனைகள்  மட்டுமே நடத்தப்பட்டிருக்கின்றன. இருந்தாலும், அந்த சோதனையின் முடிவுகள், அல்லுலோஸை மிதமான அளவில் பயன்படுத்தலாம் என்றே கூறுகின்றன. பரவலாக இதனை இன்னும் பயன்படுத்த தொடங்கவில்லை. சில பிராண்டுகள் மட்டுமே அல்லுலோஸை அவர்களின் சிற்றுண்டிகளில் பயன்படுத்துகின்றனர். அதுவும் ஆய்வுகளில் குறிப்பிட்டுள்ள அளவு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதனால் மனித சமுதாயத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. ஆனாலும், இன்னும் பல கட்ட ஆய்வுகள் மனிதர்களை வைத்து  நடத்திய பின்  வெளிவரும் முடிவுகளை வைத்து இதன் பயன்பாட்டை அதிகரித்து  கொள்ளலாம்.