தோப்புக்கரணம்

நாம் இன்று கூகுளிலும்  மற்ற வலை  தளங்களிலும் தேடி  தேடி கற்றறியும் நன்மைகளை  நம் முன்னோர்கள் தாமாகவே நமக்கு கற்று தந்திருக்கிறார்கள். அவற்றுளொன்று தோப்புக்கரணம்

தோப்புக்கரணம்

இந்துக்களின் விநாயகர் வழிபாடுகளில் முக்கியமானது விநாயகரின் முன்னால் தமது தலையில் மூன்று முறை குட்டி, தோப்புக்கரணம் போட்டு வணங்கும் முறையாகும். இந்த வழிபாட்டு முறை எவ்வாறு வந்தது என்பதற்கு புராணக் கதைகளில் ஒரு சான்று. 

கஜமுகாசுரனும் விநாயகரும்:
கஜமுகாசுரன் என்னும் அசுரன், தேவர்களுக்கு கொடுமைகள் செய்து வந்தான். தேவர்களை தன்னைக் கண்டால், தோப்புக்கரணம் இடவேண்டும் என்று நிர்பந்தித்தான். தேவர்களும் பயந்துபோய் இச்செயலைச் செய்து வந்தனர். அவனைச் சம்ஹாரம் செய்ய கிளம்பினார் விநாயகர். விநாயகரையும் தோப்புக்கரணம் இடுமாறு கஜமுகாசுரன் ஆணையிட்டான். தன் தந்தத்தால் அவனைக் குத்திக் கொன்றார். கஜமுகாசுரன் அழிந்ததும் அவனுக்கு போட்டு வந்த தோப்புக்கரணத்தை நன்றியுணர்வுடன் தேவர்கள் விநாயகப்பெருமானுக்குச் செய்யத் தொடங்கினர். அதுமுதல் விநாயகருக்கு தோப்புக்கரணம் இடும் முறை உண்டானது.

சிலவருடங்களுக்கு முன்பு வரை தோப்புக்கரணம் என்பது குழந்தைகளுக்கும்,  பெரியவர்களுக்கும் ஒரு இயல்பான செயல்.  கோயிலில் விநாயகர் வழிபாட்டின் போது நாம் தோப்பு  கரணம் போடுவோம். பள்ளிகளில் அல்லது வீடுகளில்  குழந்தைகள் தவறு செய்தால் ஆசிரியர்கள் அல்லது பெரியவர்கள் தோப்பு கரணம்  போடுவதையே தண்டனையாக கொடுப்பர்.  
 
தோப்பு கரணம் போடுவது எப்படி?

நிமிர்ந்து நேராக நிற்கவேண்டும். கால்களை தோள்பட்டையின் அகலத்திற்கு விரித்து நிற்க வேண்டும். இடது கையால்  வலது காதின் மடலை பிடிக்க வேண்டும். வலது கையால் இடது காதின் மடலை பிடிக்க வேண்டும். நன்றாக மூச்சை இழுத்து விட்டு நம்மால் முடிந்த வரை உட்கார்ந்து பின்பு எழுந்து கொள்ள வேண்டும். 

ஆச்சர்யமான விஷயம்:

ஆச்சர்யமான  விஷயம் என்ன வென்றால் தொன்றுதொட்டு நாம் செய்து வரும் இப்பழக்கத்தை அமெரிக்கா ஆராய்ச்சியாளர் எரிக் ராபின்ஸ் என்பவர்  ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டுள்ளார். அவர் ஆராய்ச்சியின் முடிவில் தோப்பு கரணம் போடுவதால் மூளையிலுள்ள செல்களும்  நியூரான்களும் சக்தி பெறுவதாக கூறுகிறார் . சராசரிக்கும் குறைவாக மதிப்பெண் வாங்கும் ஒரு சிறுவனை தினமும் தோப்பு கரணம் செய்ய சொல்லி அதனை அவன் தொடர்ந்து செய்த சில தினங்களில் அவன் பரீட்சைகளில் அதிக மதிப்பெண் எடுத்ததாக கூறுகிறார்.


இதனால் தான் பள்ளிகளில் குறைந்த மதிப்பெண் வாங்கும் சிறுவர்களை  தோப்பு கரணம் போடுமாறு ஆசிரியர்கள் கூறுகின்றனர் என்று தோன்றுகிறது.

காதுகளை பிடித்து கொண்டு இந்த பயிற்சியை செய்வதால்  அக்குபஞ்சர் முறையில் நரம்பு மண்டலங்கள் பலப் படுகின்றன எனவும் அதனால் மனதும் உடலும் புத்துணர்ச்சி அடைகின்றது  எனவும்  யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் கூறுகிறார். தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். 

மூளையின் இரு பக்கங்களுக்கும் சமமான சக்தி கிடைப்பதாகவும், மூளை செயல்பாடுகள் அதிகரிப்பதையும்  அவர் கண் கூடாக பார்த்ததாகவும் கூறுகிறார். அதுமுதல் அவரும் தோப்பு கரணம் போடுவதாக கூறுகிறார்.  

தோப்பு கரணம் மருந்து:

தோப்பு கரணத்தை ஒரு உடற்பயிற்சியாக பாவித்து பல மருத்துவர்கள் பல நோய்களுக்கு இவ்வித உடற்பயிற்சியை தீர்வாக கொடுக்கின்றனர். ஆட்டிசம், அலசிம்மர்  போன்ற நோய்களின் ஆரம்ப நிலையில் தோப்பு கரணம் செய்வதை தொடர்ந்தால் நாளடைவில் நல்ல மாற்றம் கிடைக்கும் என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

தினமும் 10 நிமிடங்கள் தோப்பு கரணம் போடுவதால் நம்ப முடியாத பல ஆற்றல்கள் நமது   உடலுக்கும் மூளைக்கும் கிடைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர். 

தோப்பு காரணத்தின் பலன்கள்:
மூளை வேகமாக செயல் படுகின்றது.
அதிகமான வேலைகளை ஒரே நாளில் செய்ய முடியும்.
பதற்றம் தவிர்க்கப்படுகிறது.
மூளைக்கு அதிக சக்தி கிடைக்கின்றது.
குழந்தைகளின் கல்வித்திறன் அதிகமாகிறது.

மேலே குறிப்பிடப்படி தோப்பு கரணம் போடும்போது நன்றாக மூச்சை உள்ளும் வெளியும் இழுத்து  விட வேண்டும். இப்படி செய்தால் வேறெந்த உடற்பயிற்சிக்காக அவசியமும் இருக்காது.