உங்கள் கல்லீரலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற ஆரோக்கிய வழிமுறைகள்

உங்கள் கல்லீரலை இயற்கையான முறையில் சுத்தம் செய்வது எப்படி என்பது உங்களுக்குத் தெரியுமா? அதனை அறிந்து கொள்வதற்கு இந்த பதிவு உங்களுக்கு உதவும்.

உங்கள் கல்லீரலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற ஆரோக்கிய வழிமுறைகள்

நச்சகற்றல் வழி மூலம் உடலில் உள்ள எல்லாக் கழிவுகளையும் நீக்குவது சீரான உடல் செயல்பாடுகளுக்கு மிக அவசியமாகும். உடலில் நச்சுகள் படிவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. சுற்றுப்புறச் சூழலில் இருந்து வெளிப்படும் நச்சுகள் உடலில் படிய நேரலாம். பதப்படுத்த உணவுகள் அதிகம் உட்கொள்வதாலும் உடலில் நச்சுகள் சேரலாம். சருமத்திற்கு மட்டும் நச்சகற்றல் ஏற்றதல்ல. கல்லீரலில் உள்ள கழிவுகளை நீக்குவதும் மிக முக்கியமானது. கல்லீரல் உடலின் முக்கிய உறுப்பாகும். உடலின் நச்சுகளை அகற்றும் முகவராக இது செயல்படுகிறது. இரத்தம் இதர பகுதிகளுக்கு செல்வதற்கு முன்னர் கல்லீரல் இரத்தத்தை சுத்தம் செய்கிறது. உடலில் உள்ள ரசாயனங்களை கழிவு பொருட்களாக மாற்றம் செய்ய உதவுகிறது. ஆகவே கல்லீரலின் சீரான செயல்பாடு ஆரோக்கியமான உடல் செயல்பாடுகளுக்கு மிகவும் அவசியம். 

இங்கே சில எளிய குறிப்புகள் உள்ளன. இவற்றைப் பின்பற்றி உங்கள் கல்லீரலை இயற்கையாக சுத்தம் செய்ய முடியும். வாருங்கள் அதனைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

கல்லீரலுக்கு ஏற்ற உணவை தேர்ந்தெடுக்கவும்:
ஒரு ஆரோக்கியமான மற்றும் சமச்சீர் உணவு, பாதிக்கும் மேற்பட்ட நோய்களை அருகில் சேர்க்காமல் வைத்திருக்கும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் கல்லீரலுக்கு ஏற்ற உணவை உங்கள் உணவு அட்டவணையில் சேர்த்துக் கொள்ளும் முறையாகும். உங்கள் கல்லீரலுக்கு ஏற்ற சில உணவுகள் பற்றி இங்கே பார்க்கலாம். திராட்சை, பீட்ரூட், பெர்ரி, நட்ஸ், ஆலிவ் எண்ணெய், குறைந்த கொழுப்பு தேநீர் போன்றவை கல்லீரலுக்கு நன்மை தரும் சில உணவுகளாகும். பச்சை காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்ளுதல், பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைந்த அளவு உட்கொள்ளுதல் போன்றவையும் கல்லீரலுக்கு நன்மை தரும். உங்கள் குடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள் கல்லீரலுக்கு நன்மைத் தரும் உணவுகளாகும். 

நிறைய ஜூஸ் பருகுங்கள்:
பழச்சாறுகள் உங்கள் கல்லீரலுக்கு சிறந்த நன்மைத் தருகின்றன. பழச்சாறுகள் உங்கள் கல்லீரலை சுத்தம் செய்து, சீரான செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. ஆனால் பேக் செய்யப்பட்ட பழச்சாறுகளை அருந்தாமல் இருப்பது நல்லது. இவற்றில் ஊட்டச்சத்து மதிப்பு குறைவாகவும், செயற்கை சுவையூட்டிகள் அதிகமாகவும் சேர்க்கப்பட்டிருக்கும். சர்க்கரை சேர்க்காமல் புதிதாக தயாரிக்கப்பட்ட பழச்சாறுகளைப் பருகலாம். காய்கறி கொண்டு தயாரிக்கப்பட்ட சாறுகள் உங்கள் கல்லீரலுக்கு மிகவும் ஏற்றது. கேரட், பீட்ரூட், நெல்லிக்காய், கீரை, தக்காளி மற்றும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற மற்ற காய்கறிகள் ஆகியவற்றை சேர்த்து சாறு தயாரித்து பருகலாம்.

உடல் எடையைக் குறையுங்கள்:
உடல் பருமன் , உங்களுக்கு பல்வேறு நோய்களை உண்டாக்கும் வாய்ப்பு உண்டு. உங்கள் கல்லீரலுக்கும் இது பாதிப்பை உண்டாக்கும். நீங்கள் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது அவசியம். நிறைய உடற்பயிற்சிகள் செய்து , சரியான டயட் பின்பற்றி உடல் எடையை சரியான அளவில் நிர்வகிக்கலாம். ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்றுவதால் உடல் எடை குறைந்து, இதனால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் அதிகரிக்கிறது.

மது அருந்துவதைத் தவிர்க்கவும்:
மது அருந்தும் பழக்கம் கல்லீரலுக்கு மிகுந்த சேதங்களை உண்டாக்குகிறது. தொடர்ந்து மது அருந்துவதால், கல்லீரல் தீவிர சேதம் அடைந்து, மஞ்சள் காமாலை, கல்லீரல் நோய், கல்லீரல் செயலிழப்பு மற்றும் புற்று  நோய் உண்டாகும் வாய்ப்பும் உண்டு. முடிந்த அளவுக்கு விரைவாக மது அருந்தும் பழக்கத்தைக் கைவிடுவது நல்லது. திடீரென்று மது அருந்தும் பழக்கத்தைக் கைவிடுவது சற்று கடினமாக இருந்தாலும், ஒவ்வொரு நாளும் நீங்கள் பருகும் அளவைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ளலாம். அடுத்த சில நாட்களில் இந்த பழக்கத்தில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.

மேலே கூறியவற்றைப் பின்பற்றுவதன் மூலம் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்து நச்சுகளை அகற்ற முடியும். ஆனால் தொடர்ந்து வாந்தி, குமட்டல், சிறுநீர் கழிப்பதில் தொந்தரவு , வயிறு வலி, நாட்பட்ட சோர்வு, அல்லது மஞ்சள் காமலையின் அறிகுறி போன்றவை தோன்றினால், மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.