திருநாவுக்கரசு நாயனார்

Thamizh • By கிருபா. சரவணன் • Posted on 30 Nov, -0001

திருநாவுக்கரசு நாயனார்கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவர் ஆவார். இவர், அப்பர், திருநாவுக்கரசர் என்னும் சிறப்புப் பெயர்களாலும் வழங்கப் பெறுகிறார். இவருக்குத் தாய் தந்தையர் இட்ட பெயர் மருணீக்கியார். தற்போதைய South Arcot மாவட்டத்திலுள்ள திருவாமூரில் ஒரு சைவக் குடும்பத்தில் வேளாண் குலத்தில் தந்தையார் புகழனாருக்கும் தாயார் மாதினியாருக்கும் புதல்வனகப் பிறந்தவர். தனது இளமைப் பருவத்தில் சைவத்தை விட்டு சமண சமயத்தில் சேர்ந்தார். சமண நூல்களைக் கற்று அச்சமயத்தின் தலைவர்களுள் ஒருவராகவும் விளங்கினார். சமண சமயத்தில் இருந்தபோது திருநாவுக்கரசர் தருமசேனர் என்றழைக்கப்பட்டார் திருநாவுக்கரசரின் தமக்கையார் திலகவதியார் ஆவார்.இவர் சிறந்த சிவபக்தராக இருந்தார். தனது தம்பி சமணத்தில் சேர்ந்ததை எண்ணி மிகவும் மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டு வந்தார். இதனால் மருணீக்கியாருக்குக் கடுமையான சூலை நோய் ஏற்பட்டது. சமண மடத்தில் செய்யப்பட்ட சிகிச்சைகள் எதுவும் பலனளிக்கவில்லை. பின்னர் திலகவதியிடம் முறையிட்டார்.திலகவதி சிவனிடம் மனம் உருகிப் பாடச் சொன்னார்.திருநாவுக்கரசர் "கூற்றாயினவாறு விலக்ககலீர்" என்று தொடங்கும் தேவாரப் பதிகத்தைப் பாடி முறையிட்டதில் நோய் தீர்ந்தது. இதனால் மருணீக்கியார் சைவத்துக்கு மீண்டார். இதன் பின்னர் இவர் நாவுக்கரசர் என அழைக்கப்பட்டார். இவர் தொண்டு வழியில் இறைவனை வழிபட்டவர். பல்வேறு ஊர்களுக்கும் பயணம் செய்து, தேவாரப் பதிகங்களைப் பாடி சைவப் பணியில் ஈடுபட்டார். கோயில்களின் சுற்றாடலை உழவாரங் கொண்டுதூய்மைப் படுத்தியும் வந்தார். இதனால் இவர் உழவாரத் தொண்டர் எனவும் அழைக்கப்பட்டார். சமணப் பிடிப்போடு இருந்த பல்லவ மன்னனான மகேந்திர பல்லவன் திருநாவுக்கரசரைப் பல்விதத்திலும் துன்புறுத்தினான். அத்துன்பங்கள் யாவற்றையும் திருநாவுக்கரசர் தனது இறைவலிமையோடு வென்றார். ‘கற்றுணைப் பூட்டியோர் கடலினுள் பாய்ச்சினும் நற்றுணை ஆவது நமச்சிவாயவே’ என்னும் நமச்சிவாயப் பதிகம் இதனை மெய்ப்பிக்கிறது. இறுதியில் பல்லவப் பேரரசனான மகேந்திர பல்லவன்ச் சைவ சமயத்திற்கு மாறினான்.
எழுதியவர்
எழுத்தாளர்

கிருபா. சரவணன்

கணினிப் பொறியாளரான கிருபா. சரவணன், இணையத்தில் நல்ல பல கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளியிட்டுள்ளார்.

You May Also Like