தலை முடி பாதுகாப்பில் நெல்லிக்காய்:

தலைமுடியை புத்துணர்ச்சியுடன் வைக்கும் ஒரு அற்புதமான மூலிகை நெல்லிக்காய். உச்சந்தலைக்கும் தலைமுடிக்கும் பல நன்மைகளை அது தருகிறது.

தலை முடி பாதுகாப்பில் நெல்லிக்காய்:

ஒரு தனிநபரின் அழகை எடுத்துக்காட்டுவதில் தலைமுடிக்கு ஒரு பெரும் பங்கு உண்டு. குறிப்பாக பெண்கள் தலை முடி பாதுக்காப்பில் அதிக கவனம் செலுத்த விரும்புவதற்கு காரணம், தலைமுடி அழகில் தான் அவர்களின் மொத்த உடலமைப்பும் அழகாக தோன்றும் என்பதை அவர்கள் புரிந்து வைத்துள்ளனர். பழைய காலங்களில் பெரும்பாலான பெண்கள் நீளமான தலைமுடியுடன் இருந்தனர். ஆனால் இன்றைய அவசர காலகட்டத்தில் அதிக மாசு மற்றும் தூசு உள்ள சுற்றுசூழலில் தலை முடி பாதுகாப்பு என்பது ஒரு சவாலான ஒரு செயலாகவே உள்ளது. அதனால் நாம் மீண்டும் பழைய காலத்தில் பயன்படுத்திய அழகு குறிப்புகளை புரட்டிப் பார்க்க தொடங்கி விட்டோம். முந்தைய தலைமுறைகள் தங்கள் கூந்தலை பாதுகாத்த விதங்களை ஆராய்ந்து அதன் படி நடக்க முயற்சிக்கின்றனர் இன்றைய தலைமுறைகள்.

அந்த காலத்தில் பெண்கள் இயற்கையான மூலப்பொருட்கள் பயன்படுத்தி அவர்களின் சரும அழகு மற்றும் கூந்தல் அழகைப் பராமரித்தனர். அவர்கள் பயன்படுத்திய கூந்தல் பராமரிப்புக்கான ஒரு முக்கிய பொருள் ஆம்லா அன்று அறியப்படும் நெல்லிக்காய்.

நெல்லிக்காயின் பிறப்பிடம் இந்தியா. நெல்லிக்காயை உணவிலும் சேர்த்துக் கொள்ளலாம். இது வைட்டமின் சி சத்தின் ஆதாரமாக விளங்குகிறது. டன்னின் மிகவும் அதிகமாக உள்ளது. அண்டி ஆக்சிடென்ட் , ப்லேவனைடு, கேம்ப்பிரோல் , கல்லிக் அமிலம் போன்றவை நெல்லிக்காயில் அதிகமாக உள்ளது. இவை கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வளர்ச்சியை அதிகரிக்கிறது.

தினசரி கூந்தல் பராமரிப்பில் நெல்லிக்காயின் நண்மைகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். நெல்லிக்காயை வெளிப்புறமாக தடவுவதுடன் சேர்த்து உங்கள் தினசரி உணவிலும் இதனை எடுத்துக் கொள்வதால் நெல்லிக்காயின் மொத்த நன்மைகளையும் நாம் பெற்றுக் கொள்ள முடியும். 

நெல்லிக்காயை வெளிப்புறமாக எடுத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இப்போது பார்க்கலாம்.

தினசரி நெல்லிக்காய் எண்ணெய்யை தலைமுடியில் தடவுவதால், முடியின் வேர்க்கால்கள் வலிமையடைகிறது. முடி உடைதல், நுனி முடி பிளவு போன்றவை தடுக்கப்படுகின்றன. நெல்லிக்காயில் இருக்கும் பல்லூட்டச்சத்துகள், வைட்டமின் மற்றும் மினரல்கள் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

நெல்லிக்காயில் உள்ள அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் தலைமுடியின் வேர்க்கால்களை வலிமைபடுத்தி, தலைமுடிக்கு ஒளிர்வைத் தருகிறது. நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி, இளநரையை தடுக்கிறது.

நெல்லிக்காய் ஒரு சிறந்த கண்டிஷ்னராக செயல்படுகிறது. மற்றும் பொடுகு தொல்லைக்கு ஒரு நல்ல தீர்வாக உள்ளது. மேலும் கூந்தலின் அடர்த்தியை அதிகமாக்குகிறது.

நெல்லிக்காய் நிறமிழப்பை எதிர்த்து போராடுகிறது. இதனால் தான், பல ஹேர் கலரிங் சாதனங்களில் நெல்லிக்காய் ஒரு முக்கிய மூலப்பொருளாக உள்ளது. முடியை நீளமாக, பளபளப்பாக மற்றும் மிருதுவாக மாற்றுகிறது.

வறண்ட மற்றும் அரிப்பு அதிகம் உள்ள தலைமுடிக்கு நெல்லிக்காய் எண்ணெய் மூலம் மசாஜ் செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.

சோர்வான மற்றும் வறண்ட தலைமுடிக்கு நெல்லிக்காய் ஈரப்பதத்தைத் தருகிறது. தலையில் உள்ள இறந்த அணுக்களை அகற்றி, முடி சிக்காகுவது மற்றும் சுருளுவது தடுக்கப்படுகிறது.

நெல்லிக்காய் எண்ணெய் மற்றும் நெல்லிக்காய் தூள் ஆகியவற்றைப்போல் நெல்லிக்காய் சாறும்  தலைமுடி பாதுகாப்பில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது, முடியின் வேர்க்கால்களை பலப்படுத்தி, முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.

தலைமுடி பாதுகாப்பில் நெல்லிக்காயை எப்படி பயன்படுத்துவது ?

நெல்லிக்காயை எண்ணெய் வடிவத்தில் பயன்படுத்தலாம். சூடான நெல்லிக்காய் எண்ணெய் கொண்டு உங்கள் தலையில் மசாஜ் செய்வதால், இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் வேர்க்கால்கள் புத்துணர்ச்சி அடைந்து தலையில் வறட்சி அகன்று உச்சந்தலை ஆரோக்கியம் அதிகரிக்கிறது. உங்கள் உச்சந்தலை ஆரோக்கியமாக இருக்கும்போது தலைமுடியின் pH அளவு மற்றும் எண்ணெய் உற்பத்தி சீராக செயல்படுகிறது. 

தலை முடி வளர்ச்சிக்கு மற்றொரு வழியில் நெல்லிக்காயை பயன்படுத்தலாம். 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் 2 ஸ்பூன் நெல்லிக்காய் தூளை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெய்யை நன்றாக சூடாக்கவும். அது பழுப்பு நிறமாக மாறும்வரை சூடாக்கவும். பிறகு ஆற விடவும். அதில் கலந்த தூள், அடியில் தேங்கியவுடன் , மேலே உள்ள எண்ணெய்யை மட்டும் எடுத்து தலையில் மசாஜ் செய்யவும்.

நெல்லிக்காய் தூளுடன் மருதாணி தூள் சேர்த்து தலை முடியை கலர் செய்ய பயன்படுத்தலாம். இதனால் முடியின் இயற்கை நிறம் மேம்படுகிறது. பொடுகு தொல்லையை போக்கவும் இந்த சிகிச்சை நல்ல பலன் தருகிறது. 

நெல்லிக்காய் சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து தலை முழுவதும் நன்றாக மசாஜ் செய்து, அரை மணி நேரம் ஊற விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரால் தலையை அலசவும். இந்த முறையை பின்பற்றினால், தலை முடி வேரிலிருந்து வலிமை பெறுகிறது. முடிக்கு பளபளப்பும் கிடைக்கிறது.

நெல்லிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் எப்படி தலை முடி ஆரோக்கியம் கிடைக்கிறது ?

தினமும் சில துண்டு நெல்லிக்கையை உட்கொள்வதால், நரை முடி தடுக்கப்படுகிறது, முடி வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது, தலை முடி ஆரோக்கியம் அதிகரிக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காயை எடுத்துக் கொள்ளலாம். அல்லது நெல்லிக்காய் தூளை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அல்லது நெல்லிக்காய் சாறு எடுத்து தினமும் பருகுவதால், தலைக்கு நல்ல டானிக் போல் செயல்பட்டு விரைவில் நல்ல தீர்வுகள் கிடைக்கிறது.


நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி, முடி வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான ஊட்டச்சத்தாகிறது. வைட்டமின் சி குறைபாடு, முடி உடைதலுக்கு வழி வகுக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காய் உட்கொள்வதால், இந்த வைட்டமின் உடலில் அதிகமாகிறது. இதனால் முடி உதிர்வு மற்றும் முடி உடைதல் தடுக்கப்பட்டு முடி வலிமை அடைகிறது.

நெல்லிக்காயில் உள்ள அதிகமான இரும்பு சத்து மற்றும் கரோடின் சத்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

நெல்லிக்காயில் உள்ள அன்டி ஆக்சிடென்ட் , தலை முடிக்கு தீங்கு விளைவிக்கும் கூறுகளில் இருந்து பாதுகாப்பு அளித்து வேர்க்கால்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. ஆகவே இதனை தினமும் சாப்பிடுவதால், ஜூஸ் போல் பருகுவதால், அல்லது எண்ணெய் போல் தலையில் தடவுவதால் என்று எல்லா விதத்திலும் உங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தீர்வை தருவது உறுதி.