தமிழினியின் ‘ஒரு கூர் வாளின் நிழலில்’ சிங்கள மொழியில் வெளியானது

0
5
views

விடுதலைப் புலிகளின் அரசியல்துறை மகளிர் அணித் தலைவியாக இருந்த தமிழினி என்ற சுப்ரமணியம் சிவகாமி எழுதியதாகக் கூறப்படும் ‘ஒரு கூர் வாளின் நிழலில்’ என்ற நூலின் சிங்கள மொழியாக்கம் கொழும்பில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பிரபல சிங்கள திரைப்பட மற்றும் நாடகக் கலை இயக்குநரான தர்மஸ்ரீ பண்டார நாயக்க வெளியிட்டுள்ள இந்த நூலை, ‘தியுனு அஸிபத்தக செவன யட்ட'(ஒரு கூர் வாளின் நிழலில்) என்ற தலைப்பில் யாழ். பல்கலைக்கழக மொழியியல்துறையின் மூத்த விரிவுரையாளர் சாமிநாதன் விமல் மொழிபெயர்த்துள்ளார்.

ஆயுதப் போராட்டத்துடன் நேரடியாக தொடர்புபட்டிருந்த ஒரு போராளியின் அனுபவங்களை உள்ளடக்கிய நூல் என்ற வகையில் தமிழினியின் இந்த நூல் மிக முக்கியமானது என்று பிபிசி தமிழோசையிடம் பேசிய சாமிநாதன் விமல் கூறினார்.

தமிழ்-சிங்கள் சமூகங்கள் இடையேயான பரஸ்பர நம்பிக்கை மற்றும் இனப்பிரச்சனை தொடர்பான பிரச்சனைகளை புரிந்துகொள்வதற்கு இந்த நூல் உதவிகரமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார். சென்னையில் ஏற்கனவே தமிழில் வெளியான இந்த நூலை கடந்த மார்ச் மாதம் இலங்கையில் கிளிநொச்சியில் தமிழினியின் கணவர் வெளியிட்டிருந்தார்.

புனர்வாழ்வு முகாமிலிருந்து 2013-ம் ஆண்டில் விடுவிக்கப்பட்ட தமிழினி, 2014-ம் ஆண்டின் இறுதிக் காலத்தில் இந்த நூலை எழுத முடிவுசெய்ததாக அவரது கணவர் ஜெயக்குமரன் பிபிசி தமிழோசையிடம் கூறியிருந்தார்.

தமிழினி பள்ளி மாணவியாக இருந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் பங்கேற்ற விதம், பின்னர் அரசியல்துறை பொறுப்பாளராக ஏற்பட்ட அனுபவங்கள் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கிய ஒரு சுயசரிதையாக இந்த நூல் அமைந்திருந்தாகவும் தமிழினியின் கணவர் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/arts_and_culture/2016/05/160513_tamilni_book_sinhala

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here