அதிமுகவுக்கு தலைமை யார்? புதிய ஆவணங்களை ஏற்குமா தேர்தல் ஆணையம்?

0
3
views
BBC

அதிமுக தலைமைக்கு தனித்தனியாக உரிமை கோரிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் மீண்டும் இணைந்த பிறகு கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்குமா என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் பார்வையாளர்களிடையே பெருமளவு எழுந்துள்ளது.

சசிகலாவை அதிமுக தற்காலிக பொதுச் செயலாளராக தேர்வு செய்து அக்கட்சியின் பொதுக்குழு கடந்த பிப்ரவரியில் நிறைவேற்றிய தீர்மானம், அவரது தலைமையை ஆதரித்து கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்கள் ஆகியவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகக் கூறி முதல்வர் பழனிசாமி – பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமைத்தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இது தொடர்பான கடிதங்களை தமிழக அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன், முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணையத்தில் நேரில் அளித்தனர்.

கடந்த 12-ஆம்தேதி நடந்த கட்சியின் பொதுக்குழுவில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கும் தீர்மான நகலையும் அவர்கள் தேர்தல் ஆணையத்தில் அளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

இதையடுத்து பழனிசாமி – பன்னீர்செல்வம் தலைமையிலான கட்சியை “உண்மையான அதிமுக” ஆக அங்கீகரிக்க வேண்டும் என்றும் இரட்டை இலை சின்னத்தை தங்கள் அணிக்கே வழங்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பி. முனுசாமி, “தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினர் வழிகாட்டுதலின்படி அண்மையில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இறுதியானதாகக் கருத வேண்டும் என ஆணையத்தை கேட்டுக் கொண்டுள்ளோம். எங்களுக்கே இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கும் என நம்புகிறோம்” என்றார்.

அதிமுக உட்கட்சி தேர்தல் விவகாரம் புதிதாக ஏதாவது ஆவணங்களைத் தாக்கல் செய்ய விரும்பினால், அவற்றை வரும் 29-ஆம் தேதிக்குள் தாக்கல்செய்யுமாறு ஓ.பன்னீர்செல்வம், இ.மதுசூதனன் மற்றும் வி.கே.சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை (செப்டம்பர் 21) நோட்டீஸ் அனுப்பியது.

இந்த விவகாரம் தொடர்பாக வரும் அக்டோபர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள விசாரணைக்கு சம்பந்தப்பட்ட அணிகளைச் சேர்ந்தவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அதிமுகவில் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி நிலவரப்படி (ஜெயலலிதா உயிரிழந்த நாள்வரை) பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் உறுப்பினர்களாக யார் எல்லாம் இருந்தார்களோ அவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆணையம் நோட்டீஸில் கூறியுள்ளது.

இதையடுத்து அதிமுக தலைமை விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையை அதிமுகவின் அனைத்து தரப்பு அணிகளும் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றன.

ஆனால், இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் மிகவும் சிக்கலான கட்டத்தில் உள்ளதாக அரசியல் ஆய்வாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் கூறுகிறார்.

“சில மாதங்களுக்கு முன்பு, ஓ.பன்னீர்செல்வம் அணியில் தலா 11 எம்எல்ஏக்களும் எம்பிக்களும் இருந்த சூழலில், அதிமுகவில் பிளவு இருப்பதாக தேர்தல் ஆணையத்தால் எப்படி ஒரு முடிவுக்கு வர முடிந்தது? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது என்றார் ராதாகிருஷ்ணன்.

“தற்போதும் கூட ஓ.பன்னீர்செல்வம், இ. மதுசூதனன் ஆகியோருக்கும் எதிரணியில் சசிகலாவுக்கும் தினகரனுக்கும்தான் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதனால் கட்சித் தலைமை மற்றும் தேர்தல் சின்னம் தொடர்பாக முடிவெடுக்கும் முன்பு, அவர்களின் கருத்தை அறியாமல் தேர்தல் ஆணையத்தால் எந்த முடிவையும் எடுக்க முடியாது” என்று ராதாகிருஷ்ணன் கூறுகிறார்.

“எந்த தேதியில் ஆணையம் விசாரணை நடத்தினாலும், சசிகலாவின் தலைமையை ஏற்றுள்ள அணியினர், கட்சி சின்னத்தை முதல்வர் அணிக்கு விட்டுக் கொடுக்க விரும்பும் கட்டாயத்தில் இல்லை” என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

“ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு பகுதியினர் பிரிந்திருந்த நிலையில் கூட, பெரும்பான்மையான கட்சியினர் சசிகலா தலைமையே ஏற்ற சூழ்நிலையில் அதிமுகவில் பிளவு இருப்பதாக தேர்தல் ஆணையம் ஒரு முடிவுக்கு வந்ததை இங்கு நாம் மிகவும் கவனத்துடன் பார்க்க வேண்டும்” என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஏற்கெனவே எடுத்த முடிவை ஒரு முன்னுதாரணமாக தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ளுமானால், அதன் விளைவுகள் தற்போதுள்ள சூழலுக்கும் பொருந்துமா? அது ஏதேனும்தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்கிறார் ராதாகிருஷ்ணன்.

இந்நிலையில் டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த மக்களவை அதிமுக உறுப்பினர் பி.நாகராஜன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “டிசம்பர் 5-ஆம் தேதிவரை அமலில் இருந்த அதிமுக கட்சி விதிகள் தான் உண்மையானது. அதனால்தான் அப்போதுவரை கட்சியின் பொதுக்குழுவில் இருந்தவர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது” என்றார்.

“டிசம்பர் 5வரை அமலில் இருந்த கட்சி விதிகளின்படி திடீரென முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஒரு கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்றும் தீர்மானங்கள் செல்லுபடியாகுமா என்பதை ஆணையம் முடிவு செய்யும்” என்கிறார் நாகராஜன்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் சசிகலாவும் தினகரனும் என்பதால் அவர்களின் கருத்தை அறியாமல் தேர்தல் ஆணையத்தால் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்றும் நாகராஜன் தெரிவித்தார்.

இந்நிலையில் அதிமுக தலைமை, தேர்தல் சின்னம் விவகாரத்தில் கட்சிப் பொது செயலாளர் தேர்வு தொடர்புடைய பன்னீர்செல்வம், சசிகலா தரப்பு கோரிக்கைகள் தேர்தல் ஆணையத்தின் முன் நிலுவையில் உள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

அதிமுக இரட்டை இலை சின்னம் ஏற்கெனவே தேர்தல் ஆணையத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள விசாரணை, அதிமுக தலைமை தேர்வு தொடர்புடையதாக மட்டும் இருக்கும் என்று டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரிவும் இணைப்பும்: அதிமுகவில் சசிகலாவுக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே உள்கட்சி மோதல் வெடித்ததைத் தொடர்ந்து அக்கட்சியில் பிளவு ஏற்பட்டதை தேர்தல் ஆணையம் மார்ச் மாதம் உறுதிப்படுத்தியது.

இதையடுத்து இருவரும் அதிமுக என்ற கட்சிப் பெயரையும் அதன் இரட்டை இலை தேர்தல் சின்னத்தையும் மறுஉத்தரவு பிறப்பிக்கும்வரை பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் இரு தரப்புக்கும் உத்தரவிட்டது.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் தலைமையை எதிர்த்து செயல்பட்டார்.

இதைத்தொடர்ந்து பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் அவரவர் ஆதரவாளர்களுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் ஓரணியில் இணைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக சுமார் நான்கு எம்.பி.க்கள், 18 எம்எல்ஏக்கள் இருந்தனர். அவர்களில் எம்எல்ஏக்கள் அனைவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் புகார் தெரிவித்து தமிழக பொறுப்பு ஆளுநரிடம் புகார் மனு அளித்தனர்.

இதையடுத்து அவர்களை கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி தகுதி நீக்கம் செய்து தமிழக சபாநாயகர் தனபால் கடந்த திங்கட்கிழமை நடவடிக்கை எடுத்தார்.

முன்னதாக, ஜெயலலிதாவே அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் என்றும் கட்சியை ஒருங்கிணைப்புக் குழு வழிநடத்தும் எனவும் கூறி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் இணைந்து கடந்த 12-ஆம் தேதி நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

http://www.bbc.com/tamil/india-41362743

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here